அரைசதம் விளாசி அசத்திய சூர்யகுமார் யாதவ்: வெற்றியை விரட்டிய டேவிட் மில்லர்.., திரில் டி 20 போட்டி!

130

 

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்த இரண்டாவது டி 20 போட்டி, அதிரடிக்கு பஞ்சம் இல்லாமல் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறக்க விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஆட்டத்தின் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே தென்னாப்பிரிக்க வீரர்களின் பந்துகளை சிக்ஸர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் பறக்கவிட்டனர்.இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல் ராகுல் மற்றும் ரோஹித் ஜோடி முதல் 10 ஓவர்களுக்கு 96 ஓட்டங்கள் குவித்து சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

ஆனால் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்ததை அடுத்து அணியின் ஓட்டம் சரியும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் களத்தில் நுழைந்த கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி அணியின் ரன் விகிதத்தை மேலும் துரிதப்படுத்தினர்.

தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் பந்தை மைதானத்தின் நாலாபுறமும் சிதறவிட்ட சூர்யகுமார் யாதவ், வெறும் 22 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என 61 ஓட்டங்கள் குவித்தார்.

மறுமுனையில் கோலியும் அதிரடி காட்டி 28 பந்துகளில் 49 ஓட்டங்கள் குவிக்க தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சாளர்கள் திக்குமுக்காடி போகினர்.

238 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி ஆரம்பமே, முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியை எளிதாக தழுவும் என ரசிகர்களால் நம்பப்பட்டது.

ஆனால் களத்தில் ஒன்றிணைந்த டி காக் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி இந்திய அணி பந்துவீச்சாளர்களை திணறடித்து வெற்றி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறினர்.ஒரு கட்டத்தில் டேவிட் மில்லரின் அபாரமான பேட்டிங்கால் தென்னாப்பிரிக்க அணி நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நிலைக்கு போட்டி சென்றது.

வெறும் 47 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களிடன் 106 ஓட்டங்களை குவித்து இந்திய அணியை மிரட்டினார் டேவிட் மில்லர், இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்க அணியால் வெறும் 221 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் டேவிட் மில்லர் இருவரின் அதிரடியான ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களை பிரமிக்க வைத்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

SHARE