இறுக்கமான நாணயக் கொள்கையை தளர்த்திய CBSL

96
இலங்கை மத்திய வங்கி தனது இறுக்கமான நாணயக் கொள்கையை தளர்த்தியுள்ளதுடன் மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் 2.5 வீதத்தால் குறைத்துள்ளது.
நேற்று நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கமைய மத்திய வங்கியின் வழமையான வைப்புத் தொகை வீதம் 15.5 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாகவும் மத்திய வங்கியின் வழமையான கடன் வசதி வீதம் 16.5 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
எதிர்பார்த்ததை விட அதிகமான பணவீக்க வீதம் மற்றும் பணவீக்க அழுத்தங்கள் குறைவதைக் கருத்தில் கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மே மாத இறுதிக்குள் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 03 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதுடன், கடந்த ஏப்ரல் மாதத்தில் 454 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை நாடு பெற்றுள்ளது.
மத்திய வங்கியினால் குறைக்கப்பட்ட வட்டி விகிதங்களின் நிவாரணம் வங்கிகளின் சந்தை வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் மிக விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
SHARE