எதிர்வரும் காலங்களில் தேர்தலை எதிர்கொள்ள தமிழ் அரசியல்வாதிகள் தயாரா?

239

இலங்கையின் இன்றைய நெருக்கடிச் சூழலில் தேர்தல் என்பது தேவைதானா என்கின்ற கேள்வி எழுகின்றபோதிலும், ஏற்கனவே மாகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றிற்கானத் தேர்தலை நடாத்தாமல் கடந்த கால அரசுகள் இழுத்தடிப்புச் செய்தமை ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடாகும். மாகாண சபைகளுக்கானத் தேர்தல் குறித்து உள்ளுரிலும், சர்வதேசப் பிரதிநிதிகளாலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டே வருகின்றது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியினர் தேர்தலை நடாத்துமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். தெற்கின் பிரதான ஏனைய கட்சிகளும், வடக்கு மற்றும் கிழக்கு வாழ் தமிழ் – முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் தேர்தலை வைக்குமாறு வலியுறுத்தும் அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு என அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் தொடர்பில் வடக்கு – கிழக்கு மக்களால் கடுமையான அதிருப்தி தொடர்ந்தும் வெளிப்படுத்தப்படுகின்றது.

எனினும் இனிவரும் காலங்களில் மிக விரைவாக வரக்கூடியத் தேர்தலாக நாம் மாகாண சபைகளுக்கானத் தேர்தலையும், உள்ளுராட்சி மன்றங்களுக்கானத் தேர்தலையும் சுட்டிக்காட்டலாம். ஜனாதிபதித் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் உடனடியாக நடைபெற வாய்ப்பில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் விரைவில் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கானத் தேர்தலை நடாத்தக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே சுக்குநூறாக உடைந்துள்ள தனது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்வரும் காலங்களில் பலப்படுத்துவதற்கும், தனது வேலைத்திட்டங்களை கிராமந்தோறும் கொண்டுசெல்வதற்கும் தனது கட்சியின் பிரதிநிதிகள் தேவைப்படுகின்றனர். பாராளுமன்றில் ஒரேயொரு ஆசனத்தைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியினர் தமக்குக் கிடைத்துள்ள உயர் பதவியை வைத்துக்கொண்டு கட்சியைப் பலப்படுத்த திட்டம் தீட்டியுள்ளனர்.

அதனொரு கட்டமாகவே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பிரதமர் தினேஸ் குணவர்தன உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லைகளை நிர்ணயத்திற்கான தேசிய குழுவொன்றை நியமித்துள்ளார். அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவின் பணிகள் நவம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த வருடமளவில் மாகாண சபைகளுக்கானத் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பது உறுதிப்படுத்தப்படும் அதேவேளை, தொடர்ச்சியாக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனது பதவிக்காலத்தை தக்கவைப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளார்.

தெற்கில் சிங்கள மக்கள் மஹிந்த தரப்பினர் மீதும், மொட்டுக் கட்சியினர் மீதும் அடைந்துள்ள அதிருப்தி காரணமாக தேர்தல் ஒன்றினை முகங்கொடுக்கும் போது அக் கட்சியும் ராஜபக்ச தரப்பினரும் பாரிய பின்னடைவைச் சந்திப்பார்கள் என்பது உண்மை. ஏற்கனவே தெற்கின் பாரம்பரியக் கட்சிகள் இன்று பிளவடைந்துள்ள சூழலில் மக்கள் குழப்பமடைந்துள்ளார்கள். நாட்டின் பொருளாதாரச் சூழலும் வேலைவாய்ப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறும் மக்கள் தொகை அதிகரிப்பும் எதிர்வரும் காலத்தில் இலங்கையின் எந்தத்தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எது எவ்வாறிருப்பினும், இவ் அரசாங்கத்தின் மூலமாக மாகாண சபைகளுக்கானத் தேர்தல் நடாத்தப்படுகின்றபோது தமிழ்த் தரப்புக்கள் இத் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்களா? என்கிற கேள்வி எழுகையில் பதில் இல்லை. யுத்;தம் முடிவடைந்து 12 வருடங்களைக் கடந்துள்ளபோதிலும் ஒற்றுமை என்கிற விடயத்தில் இருந்து தமிழ்க் கட்சிகள் சிதைவடைந்துள்ளன. விடுதலைப்புலிகளால் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு வளர்த்துவிடப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற கட்சி இன்று சின்னாபின்னமாக உடைக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தரப்பினர் அரசியல் ரீதியாக பலமிழந்துள்ளனர். இன்றிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற பெரு விருட்சத்தை உடைத்துக்கொண்டு வெளியில் வந்து தமக்கென ஆளுக்கொரு கட்சியினை இன்று உருவாக்கியுள்ளனர். இதனால் தமிழினத்திற்கான பயன் என்ன?

தமிழ் மக்கள் கடந்த பத்து வருடங்களில் தாம் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கண்டிருக்கிறதா என்றால் இல்லை. இன்றும் வடக்கு கிழக்கு எங்கிலும் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. ஆட்சியாளர்கள் கண்டும் காணாததுபோல தமது செயற்பாடுகளை திறம்பட செய்கின்றனர். சிங்களப் பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரல் தமிழ் மக்கள் தொடர்பில் அக்கறைகொள்ளவில்லை. தீர்வுகளை வழங்கவில்லை. இழுத்தடிப்பு செய்கிறது. காணி சுவீகரிப்பும் பௌத்த மயமாக்கலும் நாட்டின் உயரிய சட்டதிட்டங்களை மீறி சிங்கள பௌத்த பேரினவாதத்தால் தமிழர் பிரதேசங்களில் அமுல்படுத்தப்படுகிறது.

இவ்வாறான பல நெருக்கடிப் பிரச்சினைகளை – வாழ்வாதாரப் பிரச்சினைகளை – சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தமிழர் பிரதேசம் பல எதிர்பார்ப்புக்களை முன்வைத்தே தமது பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கும், மாகாண சபைகளுக்கும், உள்ளுராட்சி மன்றங்களுக்குமென வாக்களிப்பின் மூலமாகத் தெரிவுசெய்து அனுப்பிவைக்கிறது. ஆனால் பின்னர் தமிழ்ப் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் வாக்களித்த மக்கள் அதிருப்திடைந்து வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்கும் சூழலும் மக்களது போராட்டங்களில் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு, தமது முகங்களை ஊடகங்களுக்கு செவ்வி கொடுக்கப் பயன்படுத்துகின்றனர்.

மத்தி எமக்காக செய்யாத விடயங்களை, எமது பலத்தின் ஊடாக அழுத்தம் பிரயோகித்துச் செய்யவேண்டிய நிலை இருக்கிறது. உள்ளுரிலும் சர்வதேச ரீதியாகவும் நாம் இன்னும் பலமாக இறங்கி வேலை செய்யவேண்டி இருக்கிறது. முதன் முதலாக பிரிந்த நிலையில் வடக்கு மாகாணத்திற்கான மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டபோது தமிழ் மக்கள் பலத்த எதிர்பார்ப்புடன் வரவேற்றதற்கு காரணம் தமது பிரச்சினைகளுக்கானத் தீர்வினை தமிழ் மக்கள் எதிர்பார்த்ததுதான். உள்ளுரிலும் சர்வதேச ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து எதிர்க்கவும், பலத்தை நிரூபிக்கவும் தான். ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் அமைந்த முதலாவது வடக்கு மாகாண சபையில் பல ஆக்கபூர்வமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு பலவாறாக எழுந்தது. பல அமைச்சர்கள் ஊழல்வாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டதும் கட்சிகளுக்குள் ஏற்பட்ட உட்பூசல்களும் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மறுபுறம் இங்கு தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாகவும், நடந்தது இனப்படுகொலை தான் என்கிற தீர்மானம் உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்பட்டது. அத் தீர்மானம் ஐ.நாவுக்கும் அனுப்பப்பட்டது. இலங்கையில் முதன் முறையாக மாகாண சபை ஒன்றில் இவ்வாறான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை வரலாற்றுப் பதிவாகும்.

அரசியலில் எவ்வாறான சிக்கல்கள் வந்தாலும் இவ்வாறான ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மாகாண சபையின் ஊடாக தமிழ் மக்களுக்காக செயற்படுத்தப்படுகின்ற போது வரவேற்கப்படும் அதேவேளை பின்னரான இவ் மாகாண சபையில் பங்கெடுத்த கட்சிகளின், உறுப்பினர்களின் செயற்பாடுகள் இன்று தலைகீழாக மாறியுள்ளது. அத் தீர்மானத்தை எதிர்காலத்தில் பலமாக முன்கொண்டு அடுத்த கட்டம் நோக்கி எடுத்துச்செல்வதற்கான வேலைத்திட்டங்கள் இன்று பூச்சியமாக்கப்பட்டுள்ளது. கருத்து முரண்பாடுகளால் ஒற்றுமையின்மை அனைத்தையும் சீரழித்துள்ளது. அன்று முதல்வராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்மொழிந்து கொணர்ந்த விக்னேஸ்வரன் அவர்கள் பின்னர் அக்கட்சிக்குள் நிலவிய குழப்பங்களும் முரண்பாடுகளும் காரணமாக இன்று தனக்கென தனித்து ஒரு கட்சியினை உருவாக்கியுள்ளார். மாகாண சபையில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் சிலரும் தனித்துக் கட்சிகளை உருவாக்கியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் பின்னரான தமிழ் மக்களின் அரசியல் போக்கு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒற்றுமை என்பது எட்டாக்கனியாகியுள்ளது. பிரிந்துகிடக்கும் தமிழர் தேசம் ஒற்றுமையின்மையால் பல இன்னல்களை தெற்கின் சிங்களப் பேரினவாதிகளால் எதிர்கொள்கிறது. தத்தமது தேவைக்காகவும் சுயநலத்திற்காகவும் தமிழ் மக்களை கூறுபோட்டு விற்க இவர்கள் ஆரம்பித்துள்ள செயற்பாடானது ஏற்புடையதல்ல. தமிழ் மக்களுக்கென வகுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்ட கட்டமைப்புக்கள் சிதைவடைந்துள்ளமையால் அரசியல் பலமும் நலிவடைந்துள்ளது.

கடந்த காலங்களில் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி அரசின் ஒரு சில போலியான வாக்குறுதிகளை நம்பி அரசிற்கு துணைபோன தமிழ்க் கட்சிகள் தொடர்பில் இன்று மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இன்னொருபுறம் தமிழ் அரசியல்வாதிகள் பலர் அரச கட்சிகளுடன் இணைந்து பயணிக்கும் நிலை தொடர்கின்றது. இவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து அரசிடம் பேசி அல்லது எதிர்த்து அழுத்தம் பிரயோகிக்க முடியும். அன்று அரசை முழுதாக எதிர்த்த விடுதலைப்புலிகளால் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து 22 உறுப்பினர்களை பெருவாரியாக பாராளுமன்றத்திற்கு முதன் முறையாக அனுப்ப முடிந்தது. அன்று அரசியலில் பலம் பெற்றிருந்த தமிழினம், விடுதலைப்புலிகளின் போராட்டம் மௌனித்ததன் பின்னர் இன்று பத்து பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதே கடினமான விடயமாக மாறியுள்ளது. இந்நிலை ஏன் யாரால் ஏற்பட்டது என்பது குறித்து தமிழ் அரசியல்வாதிகள் சிந்தித்தது உண்டா?

தெற்கில் சிங்களக் கட்சிகள் மாத்திரமல்ல, வடக்கு – கிழக்கில் தமிழ்க் கட்சிகளும் தேர்தல் ஒன்றின் நிமித்தமாக கூட்டங்களை வைப்பதற்கும், சந்திப்புக்களை வைத்து கலந்துரையாடுவதற்கும், வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வதற்கும் முடியாத சூழல் இன்று ஏற்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக சிரமப்படும் மக்கள் ஒருபுறம், அரசியல் ரீதியாக பலமிழந்து சிதைக்கப்பட்டுள்ள தமிழினம் மறுபுறம் என நிலைமை மாறியுள்ளது. இச்சூழலை எவ்வாறு தமிழ் அரசியல்வாதிகள் எதிர்கொள்ளப்போகின்றனர். அதிருப்தியடைந்துள்ள மக்கள் கூட்டத்தின் முன்னால் இவர்கள் தமது முகங்களைக் காட்ட முடியாமல் திண்டாடி வருவதைக் காணக்கூடியதாகவிருக்கிறது.

இந்தியாவால் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையால் தமிழினம் பயன் ஒன்றையும் பெரிதாக அடைந்துவிடவில்லை. மாகாணத்திற்கென அரசால் நியமிக்கப்படுகின்ற ஆளுநரே மாகாணத்தின் அதிபதியாக இருக்கிறார். அவரை மீறி மாகாண சபையால் எதனையும் செய்ய முடியாத சூழல் இருக்கிறது. தமிழ் மக்களுக்கும் – ஆளுநருக்கும் எவ்வித தொடர்பினையும் காண முடிவதில்லை. வடக்கு மற்றும் கிழக்கிற்கு சம்பந்தமேயில்லாத ஒருவரே மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்படுகின்றார். அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசுடன் பேசவோ, தீர்வு குறித்துச் சிந்திக்கவோ மாட்டார். அரசு சொல்கின்றதைச் செய்யவே அவர் இருக்கிறார். இவ்வாறான சூழலில் கிடைக்கக்கூடிய அதிகாரங்களை, இருக்கக்கூடிய வளங்களை தமிழினத்தின் பிரதிநிதிகள் சரிவரப் பயன்படுத்தத் தவறி வருகின்றனர்.

அனைவரும் கூட்டாக ஒன்றிணைந்து தமிழினத்திற்கான அடுத்த கட்ட அரசியல் – சமூக செயற்பாடுகளில் பங்கெடுக்க இன்றும் தயாராக இல்லை. கருத்து வேறுபாடுகளும் உட்கட்சிப் பூசல்களும் சுயநலப் போக்கும் தமிழர் அரசியலில் மேலோங்கியுள்ளது. கட்டுப்பாடற்ற நிலையில் அரசியல் போக்கு பயணிக்கிறது. நீ கூறி நான் கேட்பதா என்கிற நிலை. எதிர்வரும் காலங்களில் கட்டாயம் தேர்தல்களைச் சந்திக்கவேண்டிய நிலை இருக்கிறது. தமிழ் மக்கள் உங்களுக்கான வாய்ப்புக்களை ஒவ்வொரு வருடமும் வழங்கிக்கொண்டேயிருக்கிறார்கள். தேர்தலை புறக்கணிப்புச் செய்வது தமிழினத்தின் நோக்கமல்ல. ஆனால் புதியவர்களைத் தேர்ந்தெடுக்கும் போக்கு கடந்த காலங்களில் அவதானிக்கப்பட்டது.

எனவே கடந்த காலங்களில் நீங்கள் செய்த அத்தனை தவறுகளையும் மக்கள் மன்னிக்கவேண்டுமாயின் நீங்கள் உங்களது சுயநலத்தையும், முரண்பாடுகளையும், உட்கட்சி மோதல்களையும் தலைமுழுகிவிட்டு தமிழினத்திற்காக மீண்டும் ஒரே குடையின் கீழ் வரவேண்டும். இன்றும் தமிழினம் விரும்புவது ஒற்றுமையைத்தான். ஒற்றுமையின் நிமித்தமாக உள்ளுரிலும் சர்வதேச ரீதியாகவும் பல மாற்றங்களை கட்டாயம் செய்யலாம். இதனை தமிழ் ஆய்வாளர்களும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். ஆளுக்னெ, கட்சிக்கென தனித்தனி கொள்கைகளை – நிகழ்ச்சிநிரல்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதை விட்டுவிடுங்கள். தமிழினத்திற்காக ஒரே கொள்கையில் – ஒரே நிகழ்ச்சிநிரலில் அணிதிரளுங்கள். தமிழ் மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவும், உங்களுக்கான வாய்ப்புக்களை வழங்கவும் இன்றும் தயாராகவே இருக்கிறார்கள். – K.Saseekaran

SHARE