ஒம்புட்ஸ்மனை நியமிக்க அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம்

65
2023.03.31 ஆம் திகதி முதல் வெற்றிடமாகும் நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) பதவிக்கு ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே.ஹிரிபுரேகமவை நியமிக்கும் ஜனாதிபதியின் பரிந்துரை அரசியலமைப்புப் பேரவையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

சபாநாயகரும், அரசியலமைப்புப் பேரவையின் தலைவருமான மஹிந்த யாப்பா அபேவரதன தலைமையில் 24.03.2023ஆம் திகதி அரசியலமைப்புப் பேரவை கூடியபோதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அத்துடன், அரசியலமைப்பின் 41(ஆ) பிரிவின் கீழ், அரசியலமைப்புப் பேரவையினால் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது குறித்த விண்ணப்பப் படிவங்களும் பரிசீலிக்கப்பட்டன.

இதற்கு அமைய கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த விண்ணப்பப் படிவங்களில் குழுவின் உறுப்பினர்களாக நியமிப்பதற்கான நால்வரின் பெயர் ஏகமனதாக ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புக்கு அமைய கணக்காய்வாளர் நாயகம், பதவி அடிப்படையில் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுவார்.

இக்கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம் மற்றும் கபீர் ஹாசிம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத கலாநிதி பிரதாப் ராமானுஜம், கலாநிதி தில்குஷி அனுலா விஜேசுந்தர மற்றும் கலாநிதி தினேஷா சமரரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். – ada derana

SHARE