சர்வாதிகார நாடுகளால் இலங்கையின் புலனாய்வுக் கட்டமைப்புக்கு ஆபத்து

308

இன்றைய சமகால அரசியலில் இலங்கையை சர்வதேச நாடுகளினது அழுத்தம் ஆக்கிரமித்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டியிருக்கிறது. இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் தத்தமது சர்வாதிகாரப் போக்கினை இலங்கை மீது பிரயோகித்து வருகின்றன என்பது நன்றாகப் புலப்படுகின்றது. இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியின் நிமித்தமாக இதனைச் சமாளிக்க முடியாத கையறுநிலையில் தொடர்ந்தும் இந்த சர்வதேச நாடுகள் இலங்கை மீது அவதானத்தை செலுத்தி, ஏட்டிக்குப்போட்டியாக மனிதாபிமான உதவிகள் எனவும், மீள்செலுத்தும் கடன்களாகவும் பல உதவிகளைச் செய்துவருகின்றன. தங்களின் ஏதோவொரு நோக்கத்தினை நிறைவேற்றிக்கொள்ளவே இவ்வாறான உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன என்பதும் உண்மை.

இவ்வாறான நடவடிக்கைகளால் இலங்கையினது புலனாய்வுக் கட்டமைப்புக்கும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் என்னவெனில் பூகோள நாடுகளின் அரசியலில் கடல்வளம் என்பது மிகக் கவனமாகப் பாதுகாக்கப்படவேண்டியது. அண்மையில் அமெரிக்காவானது இலங்கைக்கு கப்பல் ஒன்றினையும் வழங்கியிருக்கிறது. இலங்கை கடற்படையும் உத்தியோகபூர்வமாகப் பெற்றிருக்கிறார்கள். உண்மையில் அந்தக் குறித்த கப்பலை ஏன் திடீரென இப்போது அமெரிக்கா வழங்கியது, அதில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கருவிகளின் தொழில்நுட்பம் மூலமாக இலங்கையும், அமெரிக்காவும் எதையெல்லாம் அவதானிக்கப்போகின்றன, அக்கப்பலின் தொழில்நுட்பம் தொடர்பில் இலங்கையின் அதிகாரிகளுக்கு பூரண அறிவு இருக்கிறதா என்கிற பல கேள்விகள் இக்கப்பலின் வருகையின் ஊடாக எழுகின்றன.

அமெரிக்காவின் கடலோர கண்காணிப்புக் கப்பலான P627 இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இலங்கைக் கடற்பரப்பு அவர்களால் கண்காணிக்கப்படும் அல்லது இங்கிருந்து கடற்பரப்பின் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும் என்பதும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இவ்வாறு தான் அமெரிக்க அரசு பல நாடுகளையும் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது. தனது சர்வாதிகாரத்தின் மூலமாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக் போன்ற நாடுகளையும் தன்வசப்படுத்தியுள்ளது. அந்தவகையில் இலங்கையில் சீனாவின் ஆக்கிரமிப்பினை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏற்கனவே அமெரிக்கா – சீனா மோதல் உச்ச மடைந்திருக்கின்ற இச்சூழலில், இந்தக் கப்பலை அவசர அவசரமாக இலங்கைக்கு வழங்கி, இலங்கைக் கடற்பரப்பில் அல்லது ஆசியக் கடற்பரப்பில் சீனாவின் செயற்பாடுகளை முழுமையாக கண்காணிக்கும் நோக்குடன் தான் இக்கப்பல் இலங்கை அரசிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியா தனது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா அரசு தன்வசப்படுத்தியுள்ளது. அதேபோல் கொழும்புத் துறைமுகத்தின் ஒரு முனையம், போர்ட் சிற்றி என்கிற பெயரில் ஒட்டுமொத்த கொழும்பின் துறைமுகமும் இன்று சீனாவின் வலையில் விழுந்துள்ளது. தமக்குச் சாதகமான அரசை இலங்கையில் ஆட்சிக்குக் கொண்டுவருவதன் ஊடாகவே தமது ஆதிக்கத்தை தொடர்ச்சியாக இலங்கையில் நிலைநிறுத்த முடியும் என்பதை உணர்ந்து இம்மூன்று நாடுகளின் செயற்பாடுகளும் இங்கு தொடர்கின்றது. அதற்கு தம்மாலான உதவிகளை அதாவது எங்கெங்கெல்லாம் இலங்கை அரசு பலமிழந்துள்ளதோ அவ்வாறான துறைகளைக் கண்டுபிடித்து உதவிகளைச் செய்வதில் இம்மூன்று நாடுகளும் குறியாக இருப்பதைக் காணமுடிகின்றது.

இலங்கை சர்வதேச வலைப்பின்னலின் சூனியத்திற்குள் சிக்கியுள்ளது. இனப்பிரச்சினைக்கானத் தீர்வினைக் காண்கின்றபோது புலம்பெயர்ந்துவாழும் வசதிபடைத்த முதலீட்டாளர்களினால் இலங்கை தலைநிமிர வாய்ப்புக்கள் அதிகம் இருந்தும் அதனைச் செய்ய சிங்கள பௌத்த பேரினவாதிகள் தயாராகவில்லை. தமிழர்களுக்கென தனி அலகு வழங்கும் வரை இந்தப் பூகோள நாடுகளின் தாக்கத்திலிருந்து இலங்கையால் ஒருபோதும் விடுபட முடியாது. ஐ.நா மனித உரிமைப்பேரவையின் ஊடாக முன்னெடுக்கப்படும் விடயங்கள் தொடர்பில், பிரேரணைகள் தொடர்பில் இலங்கை அக்கறைகொள்வதாகத் தெரியவில்லை. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றமும் – நாடுகளும் இலங்கையின் மோசமான மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் கடுமையான அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இனிவரும் காலங்களில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெறவேண்டுமாகவிருந்தால் கூட தமிழர்களுக்கான தீர்வுகள் வழங்கப்படவேண்டும் என்பதில் மேற்கத்தேய நாடுகள் விடாப்பிடியாக இருக்கின்றன. சர்வதேச விசாரணை என்கிற விடயம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது. இவ்வாறான நெருக்கடிகளால் இலங்கை அரசால் அவ்வளவு எளிதில் மீண்டுவிட முடியாது. உலக நாடுகள் கடன்களை வழங்கி மேலும் மேலும் இலங்கையின் பொருளாதாரத்தை சீரழிக்குமே தவிர, இலங்கையின் வளங்கள் பறிபோகுமே தவிர ஆக்கபூர்வமான வளர்ச்சியைக் காணமுடியாது. அரசுகள் மாறினால் மாத்திரம் போதாது செயற்பாட்டு ரீதியான மாற்றங்கள் வேண்டும்.

வடக்கு – கிழக்கில் மீண்டும் மாவீரர் தினத்தினை முன்னிட்டு கெடுபிடிகள் ஆரம்பித்துள்ளதை பார்க்கிறோம். ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்குக் காட்டிய பூச்சாண்டிகளை தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். இன்று சிங்கள மக்களும் தெற்கு அரசியல்வாதிகளின் பூச்சாண்டிகளை நன்கு அறிந்துள்ளனர். இரவோடு இரவாக எவரது வீடும் எரிக்கப்படலாம் என்கிற நிலைதான் அங்கு இருக்கிறது. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்து இன்று சிங்கள மக்கள் பேசுகின்றார்கள். ஆனால் இதனை தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்து தீர்வு நோக்கி முன்கொண்டு செல்ல அவர்கள் தயாரா என்றால் இல்லை என்பதே பதிலாகும்.

மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி தமிழ் – முஸ்லீம் மக்களுக்குத் தீர்வினைத் தரும் என நம்பியே தமிழ் – முஸ்லீம் மக்கள், அரசில்வாதிகள் ரணிலை ஆதரித்தார்கள். ஆனால் ரணிலை நம்பினால் தலை மிஞ்சாது என்பதை உணர்ந்து இறுதியில் இன்று ரணிலை சிறுபான்மைக் கட்சிகள் கைவிட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. தெற்கின் ராஜபக்ச தரப்பினரை நம்பியே அவரது அரசியல் இன்று ஊசலாடிக்கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில் இன்றைய அரசியல் நிலைகுலைந்துள்ளது. ஜனாதிபதிக்கு எதிரான கோசங்கள் தொடர்ந்தும் தெற்கில் வலுத்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

அரகல போராட்டம் மைனா கோ கம என்கிற போராட்டம் வரை வந்திருக்கிறது. போராட்டங்கள் இன்னும் ஓயவில்லை. தெற்கின் அரசியல்கட்சிகள், சிறுபான்மைக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புக்கள் என இணைந்து போராட்டங்களைச் செய்கின்றனர். உலக நாடுகளும் இதனைத்தான் விரும்புகின்றன. இலங்கையில் இன்னமும் பயங்கரவாதம் இருக்கிறது என்பதைக் காட்டிக்கொண்டேயிருந்தால் தான் அவர்கள் தத்தமது வேலைகளைச் சுமுகமாகச் செய்யமுடியும். இலங்கையிலும் இன மத தேசிய வாதக் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இனவாதமே இந்த நாட்டின் எதிர்காலத்தைச் சீரழித்துள்ளது. பேசியவர்கள் ஒவ்வொருவராக காணாமல் போக தொடர்ந்தும் இனவாதம் அடுத்த தலைமுறைகளுக்கு நாசுக்காகக் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. அண்மையில் வெடித்த போராட்டத்திலும் மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டார்கள். மீண்டும் மஹிந்த தரப்பினரை ஆட்சிக்குக் கொண்டுவரும் நோக்கில் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதான கட்சிகளின் உடைவால் அரசியல் போட்டிகள் சூடுபிடித்துள்ளன. அரசியலில் வெட்டுக்குத்துக்கள், குழிபறிப்புக்கள், கூட்டணிகள், புதிய கட்சிகள், உடைவுகள் தொடர்கின்றன.

கடந்த 30 வருட அஹிம்சை மற்றும் ஆயுத ரீதியிலான போராட்டங்களின் மூலமாக தெற்கின் சிங்கள பேரினவாதிகள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இன்னமும் பழையதையே செய்துகொண்டிருக்கின்றனர். விடுதலைப்புலிகள் இருந்தால் இலங்கைக்குள் தாம் காலடிவைக்க முடியாது என்பதை உணர்ந்த சர்வதேச நாடுகள் அவர்களை அழித்தொழிப்பதற்கான தீர்மானங்களை மேற்கொண்டார்கள். இதனாலேயே புலம்பெயர்ந்த நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் இயங்கினாலும் தடைசெய்யப்பட்ட அமைப்பாகவே இருக்கிறது. விடுதலைப்புலிகளையும் தமிழர் போராட்டங்களையும் இல்லாமல் செய்ததன் பின்னர் தான் சீனா, அமெரிக்கா, இந்தியாவினது தலையீடுகள் இலங்கையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு – கிழக்கின் கடற்பரப்புக்களில் அத்துமீறல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு மீனவர்களின் பிரச்சினைகள் பூதாகரமாக வெடித்துள்ளது. அதேவேளை ஐரோப்பாவில், ஏனைய சில நாடுகளில் விடுதலைப்புலிகளின் கடந்த 10 வருட செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்கிற விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, தடைகளை நீக்குவது குறித்து புலம்பெயர் தமிழர்களும் சர்வதேச வல்லுனர்களும் குரல்கொடுப்பதைக் காண்கிறோம். ஆகவே தமிழர்களுக்குச் சாதகமாக சர்வதேச வலைப்பின்னல் இறுக்கமாக தமது வேலையைச் செய்கின்றது, ஆனால் இலங்கையில் தமிழர்களின் அரசியல் கட்டமைப்பு சிதைந்து காணப்படுகின்றது. இன்று இந்திய – இலங்கை வம்சாவளியினர் சர்வதேச நாடுகளில் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த சர்வதேச தலையீடுகள் இலங்கையின் பாதுகாப்புத் துறையினருக்கும் அச்சத்தையும், நெருக்குதல்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயங்களுக்கானத் தீர்வுகள் மாற்றுத்திட்டங்கள் குறித்து சிந்திக்காமல், மாறி மாறி வருகின்ற அரசுகள் வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்புக்கென அதிக நிதியினை ஒதுக்குவது வேடிக்கையானது. இது அரசுக்கும் – பாதுகாப்புத் துறையினரான முப்படைகளுக்கும் முறுகலையே எதிர்காலத்தில் ஏற்படுத்தும். ஆகவே இலங்கையை எவர் ஆட்சிசெய்தாலும் மாற்றங்கள் தென்னிலங்கை சிங்கள சமூகத்திடமிருந்து வரவேண்டும். இந்த நாட்டின் பௌத்த சிந்தனை மூவின மக்களுக்காகவும், இலங்கையின் எதிர்காலத்திற்காகவும், எமது நாட்டின் வளங்களுக்காகவும், எதிர்காலச் சந்ததியினருக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் நிச்சயம் மாற்றப்படவேண்டும் என்பது நிதர்சனமான உண்மை. – இரணியன்

SHARE