சொதப்பிய வார்னர், மேக்ஸ்வெல்.. மிரட்டிய கேப்டன்.. த்ரில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா

137

 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

கெரரா ஓவல் மைதானத்தில் அவுஸ்திரேலியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

தொடக்க வீரர் மேயர்ஸ் மட்டும் 39 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பினர். கடைசி கட்டத்தில் பந்துவீச்சாளர் ஓடியன் ஸ்மித் 17 பந்துகளில் 27 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் வார்னர், கிரீன் ஆகியோர் 14 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், டிம் டேவிட் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

எனினும் கேப்டன் பின்ச் மற்றும் மேத்யூ வேட் இருவரும் நிலைத்து நின்று ஆடி வெற்றியை உறுதி செய்தனர். அரைசதம் அடித்த ஆரோன் பின்ச் 53 பந்துகளில் 58 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

கடைசி வரை களத்தில் இருந்த வேட் 39 ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஷெல்டன் காட்ரெல் , அல்சாரி ஜோசப் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஹோல்டர், யன்னிக் மற்றும் ஓடியன் ஸ்மித் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

SHARE