தம்புலா டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி

139

 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தம்புலாவில் நடந்த டி20 போட்டியில், 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தியது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி, மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி தம்புலாவில் நடந்தது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிரிதி மந்தனாவின் விக்கெட்டை ஒஷாதி ரணசிங்கே வீழ்த்தினார்.

அதன் பின்னர் களமிறங்கிய மேகனாவும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். எனினும் தொடக்க வீராங்கனை ஷாபாலி வெர்மா 31 ஓட்டங்களும், ஹர்மன்ப்ரீத் கவுர் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.

கடைசி வரை களத்தில் இருந்த ஜெமிமா 27 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் எடுத்தார். தீப்தி சர்மா அதிரடியாக 8 பந்துகளில் 17 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் இனொக ரணவீர 3 விக்கெட்டுகளையும், ஒஷாதி ரணசிங்கே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. விஷ்மி குணரத்னே ஒரு ரன்னில் தீப்தி சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சமாரி அதப்பட்டு 16 ஓட்டங்களிலும், ஹர்ஷிதா மாதவி 10 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

அதன் பின்னர் வந்த இலங்கை அணியின் வீராங்கனைகள் அதிரடியாக விளையாட தவறியதால், அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 104 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கவிஷா தில்ஹாரி 49 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா, பூஜா மற்றும் ஷபாலி வெர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெமிமா ஆட்டநாயகி விருதை பெற்றார்.

SHARE