நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ச பிரதி சபாநாயகர் கடமைகளை பொறுப்பேற்றார்

90

 

நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ச பிரதி சபாநாயகராக இன்று காலை பிரதி சபாநாயகர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்தைதத் தொடர்ந்து புதிய பிரதிச் சபாநாயகர் பதவிக்கு இரண்டு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு கடந்த 17ஆம் திகதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 31 மேலதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அஜித் ராஜபக்ச 29ஆவது பிரதிச் சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

அஜித் ராஜபக்ச கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டார்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கடமைகளை பொறுப்பேற்றார்

இவர் அம்பாந்தோட்டை, ஹங்கம விஜயபா தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார்.

அஜித் ராஜபக்ச 1997ஆம் ஆண்டு அம்பலாந்தோட்டை பிரதேச சபையின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டதுடன், இலங்கையின் மிகவும் இளமையான பிரதேச சபைத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

இதன் பின்னர் 1999ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தென் மாகாண சபை உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

அன்றிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை சுமார் 21 வருடங்கள் மாகாண சபை உறுப்பினராக தென் மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய அவர் 1999ஆம் ஆண்டு இலங்கையின் இளைய மாகாண சபை உறுப்பினர் என்ற தேசிய இளைஞர் விருதைப் பெற்றார்.தென் மாகாண சபையின் ஆளும் கட்சியின் முதற்கோலாசானாகவும் கடமையாற்றியுள்ளார்.

 

SHARE