மோதலைத் தொடர்ந்து கொவிட் கட்டுப்பாடுகளில் தளர்வு

92

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் திடீரென அதிகரித்தது. இதனால் நோய்த் தொற்று பரவாமல் இருக்க தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வீடுகளைவிட்டு பொதுமக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா சிகிச்சை மையங்கள், தனிமைபடுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டன.

இந்தநிலையில் ஜின்ஜியாங் உரும்கி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக இறந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வீடுகளைவிட்டு யாரும் வெளியே வரக்கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டதால் இந்த உயிர் இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக உரும்கியில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் தொடர்ச்சியாக பீஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் போராட்டம் வெடித்தது. அதிபர் ஜின்பிங் பதவி விலகுமாறு பொதுமக்கள் கோஷம் எழுப்பினார்கள். இந்தநிலையில் கொரோனா தடுப்பு மையத்துக்கும் பொதுமக்கள் தீ வைத்தனர். இந்த தொடர் போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடி உருவானது. போராட்டம் வலுத்து வருவதால் சீன அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கையை எடுத்து வருகிறது.

சீனாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 5வது பெரிய நகரமாக திகழும் குவாங்ஷோவில் விதிக்கப்பட்டு இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் இந்த நகரில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. காஸ்சே, செங்டு உள்பட பல இடங்களில் பல சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதித்தவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் மேலும் சில நகரங்களில் பொது முடக்க கட்டுப்பாடுகள் விலக்கப்படுவதாக அரசு செய்தி நிறுவனங்கள் தெரிவித்து உள்ளது.

SHARE