விவசாயத்தின் வீழ்ச்சியே பொருளாதார பின்னடைவுக்கு காரணம்

365

ஐரோப்பாவில் 15ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியினால் பல ஐரோப்பிய நாடுகள் அபிவிருத்தி என்ற மட்டத்தை அடைந்தபோதிலும் அந்நாடுகள் விவசாய உற்பத்தி பொருட்களை ஏனைய கண்டங்களில் இருந்து பெறவேண்டிய சூழ்நிலை காணப்பட்டது. குறிப்பாக தேயிலை, இறப்பர், தெங்கு, மரக்கறி வகைகள் போன்றவற்றை ஆசிய – ஆபிரிக்க கண்டத்தில் உள்ள விவசாய நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்பட்டது.

அக்காலகட்டங்களில் உலக தரம் வாய்ந்த தேயிலை உற்பத்தியில் ஆசியக் கண்டத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கைத் திருநாடு விளங்கியது. அத்துடன் இலங்கை தேயிலை, இறப்பர், தெங்கு, வாசனைத் திரவியங்கள் போன்றவற்றை ஏற்றுமதி செய்து அவ் ஏற்றுமதி மூலம் மிகப்பெரிய வருமானத்தை ஈட்டி வந்தது. அதுமட்டுமன்றி நெல் உற்பத்தியிலும் அக்காலகட்டங்களில் தன்னிறைவு பெற்று இருந்தது.

இலங்கையில் சிறந்த தேயிலை உற்பத்தி செய்வதற்கு மலைநாட்டுப் பிரதேசம் சிறந்த இடமாகப் பார்க்கப்பட்டதுடன் சிறந்த காலநிலை, நல்ல மண் வளம், தேயிலைத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு என்பன தேயிலை ஏற்றுமதி உச்ச நிலையை அடைய காரணமாக இருந்தன.

அத்துடன் நெல் உற்பத்தியினை நாடு தழுவிய ரீதியில் அக்காலத்தில் ஈடுபட்டதனாலும் விவசாய உற்பத்தித்துறையில் பலர் நாட்டம் கொண்டு செயற்பட்டதாலும் அக்காலங்களில் ஆட்சி செய்த அரசியல் தலைவர்கள் விவசாயத்துறைக்கு முன்னுரிமை வழங்கியதால் விவசாயத்தில் இலங்கை செழித்து இருந்தது.

இலங்கை சுதந்திரமடைந்த 1948 – 2000ம் ஆண்டு வரை விவசாயத்துறையின் வளர்ச்சியானது அபரிமிதமான நிலையினை எட்டி இருந்தது. 1970க்குப் பின்னான காலகட்டங்களில் இலங்கையில் ஏற்பட்ட இன மோதல்களினால் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோதிலும் விவசாயத்தில் பாரிய முன்னேற்றம் கண்டதனால் உணவுக்கானத் தட்டுப்பாடோ, பொருளாதார நெருக்கடியோ கூறுமளவுக்கு ஏற்படவில்லை. இன மோதலின் உச்சமாக இருந்த வடகிழக்கு பிரதேங்களில் மிகப் பெரிய பொருளாதாரத் தடையை அக்கால கட்டங்களில் ஆட்சி செய்த அரசியல் தலைமைகள் ஏற்படுத்தியபோதும் விவசாய நிலையில் இருந்த அபிவிருத்தியினால் வடகிழக்கில் பட்டினிச்சாவை எதிர்கொள்ளவில்லை.

யுத்தத்தின் அகோரத்தினால் வடகிழக்குப் பகுதிகளில் 1980க்குப் பின்னர் பல தமிழர்கள் புலம்பெயர்ந்தபோதிலும் விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு விவசாயத்தில் தன்னிறைவு பெற்று இருந்தது.

அத்துடன் 1990க்கு பின்னர் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற மாவட்டங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபொழுது அங்கு உற்பத்தி செய்யப்படும் நெல்லை அங்குள்ள மக்களின் தேவைக்கு பயன்படுத்தி மிகுதியாக இருப்பவற்றை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் அவ் நெல்லை தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டும் இருந்தது.

1995 யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு சுமார் 5 இலட்சம் யாழ் மக்கள் இடம்பெயர்ந்து வன்னி பெரு நிலப்பரப்புக்கு வந்தபொழுது மிகப்பெரும் சன நெருக்கடியும் உணவு நெருக்கடியும் ஏற்பட்டபோதிலும், அன்று அங்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. அத்துடன் தென்பகுதியில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உணவுப் பொருட்கள் அரசினால் வன்னிக்கு அனுப்பப்பட்டபோதிலும் அங்கு மக்கள் பொருளாதார நெருக்கடியினை சந்திக்கவில்லை. அதற்கு முழுக்காரணமும் அங்கு விவசாயத் துறையில் ஏற்பட்ட அபிவிருத்தி என்று கூறலாம்.

இராணுக் கட்டுப்பாட்டில் இருந்த வவுனியாவில் 1 கிலோ அரசி 40 ரூபாவிற்கு விற்கப்பட்ட பொழுதிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவில் 1 கிலோ அரிசி 5 ரூபாவுக்கு விற்கப்பட்ட வரலாறுகளும் உண்டு. 2000க்குப் பின்னரான காலகட்டங்களில் விவசாயத்துறைக்கு இருந்த முன்னுரிமையானது சரிபாதியாகி கைத்தொழில் துறைக்கு செலுத்த தொடங்கினர். இதன் உச்சக்கட்டமாக 2019க்கு பின்னர் கோட்டாபய அவர்களின் ஆட்சியில் இரசாயன உரப் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டதுடன் உர இறக்குமதிக்கும் தடைவிதிக்கப்பட்டது.

இயற்கை உரப் பாவனைக்கு அனைத்து விவசாயிகளையும் மாறும்படி அறிவித்தல் வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக இரசாயன உரப் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட மண் வளமானது திடீரென்று கோட்டாபய அவர்களின் அறிவிப்புக்கு இணங்கி இயற்கை உரத்துக்கு மாற்றுவது என்பது சாத்தியமற்ற விடயமாகும். இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியது. பல விவசாயிகள் நெல் உற்பத்தியில் இருந்து விலகி கச்சான், சோளன் போன்ற பயிர்களை உற்பத்தி செய்யத் தொடங்கினர். இதனால் பாரியளவிலான அரசி தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலையேற்றமும் விண்ணைத்தாண்டி சென்றுள்ளது. அரசி இறக்குமதி செய்யப்பட்டது. சில நாடுகள் நன்கொடையாகவும் சில நாடுகள் கடன் அடிப்படையில் அரசியை இலங்கைக்கு வழங்கியது. அத்துடன் உரத் தட்டுப்பாட்டால் மரக்கறி உற்பத்தியிலும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது. மரக்கறி விலைகளும் அதிகரித்துள்ளது.

இலங்கைக்கு பொருளாதார ரீதியாக பெரும் அந்நிய செலாவணியை கொண்டுவரும் தேயிலை உற்பத்தியில் மிகப்பெரும் பின்னடைவை சந்தித்து உரத் தடையால் தேயிலைத் தோட்டங்களின் உற்பத்திகள் பாதிப்படைந்தன. ஒரு காலகட்டத்தில் இலங்கை தேயிலைக்கு இருந்த மதிப்பு இல்லாமல் போகத் தொடங்கியது.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதிகளில் ஏற்றுமதி தேயிலையில் தரம் குறைந்த 3ம், 4ம் தர தேயிலைகளைக் கலந்து ஏற்றுமதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யும் பல நாடுகள் தேயிலையின் தரம் குறித்து இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு அவ்வாறான தேயிலையும் இலங்கைக்கு திரும்பி அனுப்பப்பட்டது. குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா, ஐரோப்பிய நாடுகள் தேயிலையினை திருப்பி அனுப்பியதுடன் இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதியை தடை செய்ததுடன், இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து தேயிலையை பெறத் தொடங்கின.

இதன் தாக்கம் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கையை இட்டுச்சென்றது. ஏற்கனவே கொவிட் தொற்று, ஐஎஸ் ஐஎஸ் தாக்குதல் என சுற்றுலாத் துறை பாரிய வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில், தேயிலை ஏற்றுமதி முற்றாக செயலிழந்து காணப்பட்டது. தன்னிறைவில் இருந்த அரிசி, கிழங்கு, வெங்காயம், மரக்கறி வகைகள் அனைத்தும் உரத் தட்டுப்பாட்டால் இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டதுடன் பெரும் நிதி இதற்கு ஒதுக்கவேண்டி ஏற்பட்டது. ஒருபுறம் ஏற்றுமதியில் பின்னடைவு மறுபுறம் தன்னிறைவாக காணப்பட்ட பொருட்களைக் கூட இறக்குமதி செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலை. அத்துடன் எரிபொருள் நெருக்கடியும் விவசாயத்துறையை மிகவும் பாதித்தது.

உழவுத் தொழிலுக்கான இயந்திரங்களும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக உழவு செய்வதற்கு ஏக்கருக்கு மிகப் பெரும் தொகையை செலவழிக்க வேண்டி ஏற்பட்டது. நெல் அறுவடையின் போதும் பெருந்தொகையை செலவழிக்க வேண்டி ஏற்பட்டது. நெல்லுக்கு தேவையான பூச்சிகொல்லி மருந்து தட்டுப்பாட்டால் பாரிய சவாலை விவசாயிகள் சந்திக்க வேண்டி ஏற்பட்டது. இவ்வாறான காரணங்களால் விவசாயத்துறை முற்றாக வீழ்ச்சியின் பாதையை நோக்கி பயணித்தது. அதன் தாக்கம் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு பிள்ளையார் சுழி போட்டதாக அமைந்துவிட்டதுடன் இதன் எதிரொலி 2022ம் ஆண்டு கோட்டாபய அவர்களின் ஆட்சி அகற்றப்பட்டு ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றதுடன் உரத் தட்டுப்பாட்டை நீக்கியதுடன் உர இறக்குமதிக்கு இருந்த தடை நீக்கப்பட்டது. கிருமிநாசினிகளுக்கான தடைகளும் நீக்கப்பட்டன.

தற்போது தேயிலை உற்பத்தித்துறையை முன்னேற்றுவதற்கு ரணில் அவர்கள் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த போவதாக அண்மையில் அறிவித்துள்ளார். தேயிலை உற்பத்தியை மிக அதிகமாக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறியுள்ளார். தேயிலை உற்பத்தியை அதிகரிக்க முயற்சி எடுப்பது மிகவும் நல்லவிடயம். பல ஆண்டுகளாக சம்பள உயர்வைக் கோரி நிற்கும் மலையக மக்களின் கோரிக்கையை செவிசாய்த்து அவர்களுக்கு தகுந்த ஊதியத்தை வழங்க ரணில் அரசு முன்வரவேண்டும்.

நெல் உற்பத்தியை அதிகரிக்கவேண்டும். விவசாயிகளுக்கும் மானியங்கள், இயற்கை அழிவுகளின் போது இழப்பீடுகள், காப்புறுதிகள் என்பன வழங்கி விவசாயத்துறையை ஊக்குவிக்கவேண்டும். இலங்கையின் பல குளங்கள் செயலற்று பாதிப்படைந்துள்ளது. குளங்களை அபிவிருத்தி செய்து நீர் கொள்ளளவை அதிகரிக்கவேண்டும். விவசாயத்தை நோக்கி இளம் தலைமுறையை ஊக்கப்படுத்தி முன்னகர்த்த வேண்டும். அண்மையில் அப்பிள் உற்பத்தி இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் அந்த அப்பிள் செய்கையை ஏனைய பிரதேசங்களிலும் மேற்கொள்ளவேண்டும். அதற்கான ஏதுநிலைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். வாழைக்குலை ஏற்றுமதியில் கடந்த காலங்களில் பாரிய லாபத்தை பெற்றுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் குறிப்பாக வட-கிழக்குப் பகுதிகளில் வாழைக்குலை உற்பத்தி பெருமளவில் செய்யப்படுகின்றது. ஏற்றுமதியும் செய்கின்றனர். இதனை மேலும் அதிகரிக்கவேண்டும்.

அண்மைக்காலமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கப்படும் சத்துள்ள திரிபோசாவினை கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதற்குக் காரணம் அவ் மாவை தயாரிக்கப் பயன்படும் சோள உற்பத்தி குறைவடைந்ததுடன் சோளன் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு எமது நாட்டு மண் வளத்துடன் ஒத்துபோகக்கூடிய பயிர்களை கூட பயிரிட முடியாமல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதானது மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்;கு மூலகாரணம்.

எனவே அரசானது விவசாயத்துக்கு முன்னுரிமை வழங்கி விவசாயத் துறையை ஊக்கப்படுத்தி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் அரிசி, சோளன், வெங்காயம், உருளைக்கிழங்கு என்பவற்றை நிறுத்தி எமது நாட்டில் உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கவேண்டும். விவசாயிகளுக்கான மானியங்கள் அதிகரிக்கப்படவேண்டும். எமது உணவுத்தேவையினை நாமே பூர்த்திசெய்யும் நாடாக மாறவேண்டும். வீட்டுத்தோட்டத்தை ஊக்கப்படுத்தவேண்டும். ஒவ்வொரு குடும்பமும் விவசாயத்தில் தன்னிறைவு அடைவதன் ஊடாக இப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண கட்டாயம் இயலும். உழுதுண்டு வாழ்வோம் என்கிற வாக்கிற்கிணங்க விவசாயத்தை முன்னேற்றுவோம். பட்டினிச்சாவை விரட்டியடிப்போம். – லாசர்

SHARE