தமிழ் மக்களுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ள சுமந்திரனின் கோர முகம்!

127

 tna-demo1

கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் கடந்த 30.08.2014 அன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டதும், அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பேரணியாக சென்று அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்க மேற்கொண்ட முயற்சியை பொலிஸார் தடுத்து நிறுத்தி ரகளையில் ஈடுபட்டதும் நீங்கள் யாவரும் அறிந்ததே.
Untitled-1 copy 5
வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் காலை, ஆத்மசாந்தி பிரார்த்தனை மற்றும் உணர்வுப்பகிர்வினை முடித்துக்கொண்டு, நண்பகல் மகஜர் கையளிப்பதற்காக புறப்பட்டுச்சென்றவர்களை, மண்டபத்தின் பிரதான வாயில் கதவுக்கும் பொங்குதமிழ் பிரகடன நினைவுத்தூபிக்கும் இடைப்பட்ட பகுதியில் மறித்த பொலிஸார், பேரணி செல்ல அனுமதிக்க முடியாது எனத்தடுத்து நிறுத்தினர்.
“எங்களை போக விடுங்கள். எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த விடுங்கள்” என்று மக்கள் இரந்து கேட்டும், “நாங்கள் என்ன கேட்கிறோம். எங்கள் பிள்ளைகளைத்தானே கேட்கிறோம். எங்களை போக விட முடியாது என்றால், அப்ப நாங்க இந்த இடத்திலேயே நிற்கிறோம். நீங்கள் போய் எங்கள் பிள்ளைகளை கொண்டு வாருங்கள்.” என்றெல்லாம் நியாயம் கேட்டும், பொலிஸாரோ அதற்கெல்லாம் செவி சாய்ப்பதாக இல்லை.
எனினும் பேரணியை ஒழுங்கமைத்திருந்த நாடு தழுவிய மனித உரிமை செயல்பாட்டாளர் பிரிட்டோ பெர்ணான்டோவும் அவருடைய அமைப்பின் இளைஞர்களும், சர்வமதத்தலைவர்களும் பொலிஸாருடன் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு, “தம்மை செல்ல விடாது தடுத்தால் விளைவுகள் படுமோசமாக இருக்கும்.” என்று பொலிஸாரை கடுமையாக எச்சரிக்கை செய்ததையடுத்து,  பதாகைகளை விரித்து பிடித்தவாறு கூட்டமாக செல்ல முடியாது எனவும், வீதியோரமாக ஒன்றன் பின் ஒருவராக வரிசை கிரமமாக செல்லுமாறும் கூறி பொலிஸார் பணிந்து வந்தனர்.
இதன் போது கூட்டமைப்பின் பிரதிநிதிகளான திருமதி அனந்தி சசிதரன், திருமதி மேரிகமலா குணசீலன், ரவிகரன், சிவாஜிலிங்கம், இந்திரராசா, அமைச்சர்கள் சத்தியலிங்கம், டெனிஸ்வரன், எம்பிக்களான மாவை.சேனாதிராசா, சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், வலிகாமம் கிழக்கு மக்களின் மீள்குடியேற்ற சங்கத்தலைவர் சஜீவன், மனோ கணேசனின் கட்சியை சேர்ந்த பாஸ்கரா ஆகியோர் மக்களோடு பிரசன்னமாகியிருந்தனர்.
பேரணி சென்றவர்கள் தாம் வலியுறுத்திய ஒழுங்குகளை கடைப்பிடிக்க தவறியதாக கூறி, அவர்களை மேலும் தொடர்ந்து பயணிக்க விடாமல், கண்டி வீதியில் வவுனியா நீதிமன்றத்துக்கு சமீபமாக மீண்டும் (இரண்டாவது தடைவையாக) தடுத்து நிறுத்தினர் பொலிஸார்.
ஆயினும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் பொலிஸாரை முட்டி மோதி தள்ளிக்கொண்டு தொடர்ந்தும் பயணிக்க முயற்சித்து அவர்களால் ஒரு சில அடிகள் தூரம் முன்னோக்கி நகர்ந்து செல்லவும் முடிந்தது. நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்து கொண்ட பொலிஸார் கலகமடக்கும் பொலிஸாரை வரவழைத்து அவர்களைக்கொண்டு மறியல் இட்டனர்.
இதனால், பிரிட்டோ பெர்ணான்டோவின் அமைப்பின் இளைஞர்கள் மீண்டும் பொலிஸாருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு, ஒரு கட்டத்தில் கைகலப்பில் ஈடுபடுவதற்கு தயாராகி விட்டதால், அங்கு அமைதியற்ற சூழல் ஏற்பட்டு, கலவரம் ஏற்படுவதற்கான நிலைமைகள் காணப்பட்டன.
இந்த அபாயகரமான சூழலை நன்கு விளங்கிக்கொண்ட எம்பிக்களான மாவை.சேனாதிராசா, சுமந்திரன், வினோநோகராதலிங்கம், அமைச்சர்கள் சத்தியலிங்கம், டெனிஸ்வரன், ஆகியோர் மக்களோடு மக்களாக பிரசன்னமாகியிருப்பதிலிருந்து நழுவி அப்பால் சென்று விட்டனர்.
ஆனால் திருமதி அனந்தி சசிதரன், திருமதி மேரிகமலா குணசீலன், ரவிகரன், சிவாஜிலிங்கம், இந்திரராசா, சிவசக்தி ஆனந்தன் எம்.பி, வலிகாமம் கிழக்கு மக்களின் மீள்குடியேற்ற சங்கத்தலைவர் சஜீவன், மனோ கணேசனின் கட்சியை சேர்ந்த பாஸ்கரா ஆகியோர் மக்களோடு மக்களாக கலந்திருந்தனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்களில் ஆண்களை விடவும் பெண்கள் அதிகமாக இருந்தமையினால், ஆபத்தான நிலைமையை உணர்ந்து கொண்ட மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் செபமாலை அடிகளாரும், மனித உரிமை செயல்பாட்டாளர் பிரிட்டோ பெர்ணான்டோ அவர்களும், இளைஞர்களை அமைதிபடுத்தும் முயற்சியில் இறங்கினர்.
ஆயினும், பேரணியில் கலந்துகொண்டிருந்த மூவின மக்களும், கண்டி வீதியை மறித்து வீதியில் பரவலாக அமர்ந்து அரசுக்கு எதிராகவும், பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்தும், கோசங்களை எழுப்பியவாறும், காணாமல் போகச்செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தனைக்கும் நேரம் நண்பகல் 2.00 மணி. மக்கள் மிகக்கடுமையாக பசித்திருந்தார்கள். களைத்திருந்தார்கள். ஆனாலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு களைந்து போவதாக இல்லை. 
மக்கள் இவ்வாறு சளைக்காமல் போராடிக்கொண்டிருக்க, மக்களிலிருந்து தனிமைப்பட்டு (மக்கள் கூட்டத்துக்கு வெளியே) ஐம்பது மீற்றர்களுக்கு அப்பால் எம்பிக்கள் சுமந்திரன், வினோநோகராதலிங்கம், அமைச்சர்கள் சத்தியலிங்கம், டெனிஸ்வரன் ஆகியோர் சிறு “பொக்கட் மீட்டிங்”கில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. (மாவை.சேனாதிராசா தனது வாகனத்துக்குள் இருந்தவாறு அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.)
திடீரென மக்கள் கூட்டத்துக்குள் நுழைந்த சுமந்திரன், 
அருள்தந்தை செபமாலை அவர்களை அழைத்து, “இதுகளுக்கென்ன, இப்படியே விட்டால் இரவு வரைக்கும் இதுல இருந்து கத்திக்கொண்டிருக்குங்கள். எங்களுக்கு வேல நிறைய இருக்கு. நாங்க அவசரமாப்போக வேணும். இன்டைக்கு சனிக்கிழம கச்சேரி பூட்டு. அத்தோட இவங்களும் (பொலிஸ்) உங்கள விடப்போறதில்ல. விட்டாலும் அங்க உங்கட மகஜர வாங்க ஒருத்தரும் இருக்கப்போறதுமில்ல. அதால மாவை அண்ணேயிட்ட மகஜர குடுங்கோ. நாங்க திங்கள் கிழம President ட்ட குடுக்கிறதுக்கு ஒழுங்கு செய்யிறம்.” என்று அருள்தந்தையை நிர்ப்பந்தித்தார்.
அருள்தந்தை செபமாலை அவர்கள் பிரிட்டோவிடம் அவ்விடையத்தை கூறிவிட்டு, “இத மக்களின் முடிவுக்கே விட்டுறுவம். இப்ப எங்களிட்ட சொன்னத, நீங்களே மக்களிட்ட சொல்லுங்க.” என்று சுமந்திரன் எம்.பியிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
சுமந்திரனோ, “இன்டைக்கு சனிக்கிழம கச்சேரி பூட்டு. உங்களுக்குத்தெரியும் தானே. அங்க ஒருத்தரும் இல்லை. அங்க போயும் பிரயோசனம் இல்ல. அதால நாங்க மாவை அண்ணையிட்ட மகஜர குடுப்பம். அவர் திங்கள் கிழம ஜனாதிபதியிட்ட குடுக்கிறதுக்குரிய ஒழுங்குகள செய்வார்.” எண்டு மக்களிடம் கூற, மக்களோ சுமந்திரனின் பேச்சுக்கு உடன்பட மறுத்து, கச்சேரி வரைக்கும் போயேத்தீர வேண்டும் என்று வாதிட்டுக்கொண்டிருந்தனர்.
இதன்போது, அனந்தியும் ரவிகரனும், “இல்ல சுமந்திரன் அண்ணே, அங்க ஆக்கள் இருக்கிறாங்களோ இல்லையோ, நாங்க கச்சேரி வரைக்கும் போய் சேர்றதில தான் இந்த போராட்டத்தின்ட வெற்றியே தங்கியிருக்கு.” என்று மறுத்துப்பேசினர். (இந்த சம்பாசனைகள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, இன்னொரு புறம் வீதியில் அமர்ந்தவாறு சிவாஜிலிங்கமும், இந்திரராசாவும் அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர்.)
அனந்தியும், ரவிகரனும் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்ட வீரகேசரி நாளிதழ் பத்திரிகையின் செய்தியாளர், (மாவை, சுமந்திரன், வினோ, சத்தியலிங்கம், டெனிஸ்வரன் போல அவரும் எங்கேயோ அவசரமாக போக வேண்டும் போல) “எங்க மாவை அண்ண? மகஜர் வாங்கிறத படம் எடுக்கோணும்” என்று, கையில் கமராவோடு கண்களால் அங்கும் இங்கும் தேடியவாறு கேட்க, அதற்கு சுமந்திரன், “அவருக்கு தலைச்சுத்து, வாகனத்துக்குள்ள Rest எடுக்கிறார். என்னட்ட தாங்கோ. அவரிட்ட நான் குடுக்கிறன்.” என்று கேட்டார். வினோநோகராதலிங்கம் எம்.பி, அமைச்சர்கள் சத்தியலிங்கம், டெனிஸ்வரன் ஆகியோரும் அதனை ஆமோதித்து பேசிக்கொண்டிருந்தனர்.
இதன்போது, காணாமல் போகச்செய்யப்பட்ட தனது மகனைத்தேடும் (மகனின் ஒளிப்படத்தை கையில் ஏந்தியிருந்த) பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர், “அதென்ன மேடையில மணிக்கணக்கா பேசேக்க தலைச்சுத்துதில்ல. ஆர்ப்பாட்டம் எண்டு வந்தா மட்டும் தலைச்சுத்துது அவருக்கு?” என்று கேட்க, கூட்டத்துக்குள் மீண்டும் குழப்பம் ஏற்பட்டு விட்டது.
சிறிது நேரத்துக்குப்பின்னர் மாவை.சேனாதிராசா எம்.பியை அவ்விடத்துக்கு அழைத்து வந்தார்கள். அவரும், “சனிக்கிழமை… கச்சேரி பூட்டு…” என்று சுமந்திரன் பாடியதையே மக்களிடம் றிப்பீட் செய்தார்.
மீண்டும் அந்த குடும்பஸ்தர், “என்னய்யா? கச்சேரி பூட்டு, சனிக்கிழமை என்டு உங்களுக்கு இப்பத்தானா தெரியும்? இதுக்குத்தானே நாங்க வெளிக்கிட்டு றோட்டுக்கு வரேக்க முதலே,  மண்டபத்துக்க வைச்சு பிரஜைகள்குழுக்காரர் உங்களிட்ட கேட்டீச்சினம் என்ன செய்வம் எண்டு? இப்ப சொல்லுறத, அப்ப அங்க வைச்சு சொல்லியிருக்கலாம் தானே. இப்ப வந்து நிண்டு கொண்டு கச்சேரி பூட்டு, சனிக்கிழமை அது இது என்டு சாட்டுப்போக்குச்சொல்லுறீயள்.” என்று அந்தப்பெரிய மக்கள் கூட்டத்துக்குள் முகத்துக்கு நேரே கேட்டு விட்டார்.
உண்மை கசந்ததால் சங்கடப்பட்ட சுமந்திரன், 
பொலிஸார் தந்த இரண்டு வாய்ப்புகளையும் மக்கள் நீங்களே வீணடித்ததாகவும், மக்கள் நீங்களே ஒழுங்குமுறையை மீறியதாகவும் மக்களில் குற்றம் சுமத்தியும், பொலிஸாரின் செயல்பாட்டை நியாயப்படுத்தியும் அநீதிக்கு சார்பாக பேசிய பேச்சை ஒலி வடிவத்தில் (Voice Record) இணைத்துள்ளோம். கேட்டுப்பாருங்கள்.
பலத்த இழுபறி நிலைமை, வலியுறுத்தல்கள், அழுத்தத்துக்குப்பின்னர் மாவை.சேனாதிராசாவின் கைகளை மகஜர் சென்றடைந்தது. அவர் மகஜரை வாங்குவதை மீடியாக்கள் படம் எடுத்ததும், அவரும் எம்பிக்கள் சுமந்திரன், வினோ, அமைச்சர்கள் சத்தியலிங்கம், டெனிஸ்வரன் ஆகியோரும் அங்கிருந்து அவசரமாக “நெல்லி ஸ்டார்” ஹோட்டலுக்கு கிளம்பி போய் விட்டார்கள். கிளம்பும் போது அமைச்சர் டெனிஸ்வரன் அருள்தந்தை செபமாலை அவர்களை நோக்கி, “பாதர்! நாங்க வெளிக்கிடப்போறம். அவங்கள (மக்கள) விட்டுட்டு வாங்க போவம்” என்று கூப்பிட்டதையும் அவதானிக்க முடிந்தது.
ஆனால், வவுனியா வைத்தியசாலை பக்கமாக (வடக்கு பக்கம் நோக்கி) செல்ல விடாமல் பொலிஸார் தடுத்திருந்த நிலையில், தெற்கு பக்கமாக திரும்பி வவுனியா மணிக்கூட்டு கோபுரத்தை நோக்கிப்பேரணியாக சென்றடைந்த பாதிக்கப்பட்ட மக்களும், அருள்தந்தை மற்றும் பிரிட்டோ பெர்ணான்டோவும், அவர்களது குழுவினரும் பசித்து களைத்திருந்தபோதும் கூட, வவுனியா மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டப்பகுதியில் பிற்பகல் 4.30 மணிவரை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களுடன் கூட்டமைப்பின் அனந்தி சசிதரன், ரவிகரன், சிவாஜிலிங்கம், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், மனோ கணேசனின் கட்சி பாஸ்கராவும் பங்குபற்றியிருந்தனர்.
கவனியாதோர் கவனத்துக்கு:
முதலாவதாக,
அரசு மற்றும் அநீதிக்கு எதிராக தமது கோபம், வெறுப்பு, விரக்தி, ஏமாற்றம், கவலை, அழுகை, இயலாமை, ஆற்றாமை, இவ்வாறான பெரும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு போராட்டத்தில் ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பது சாதாரண மனிதப்பிறவிகளால் முடியாத ஒரு காரியம்.
ஏதோ ஒன்றை காரணம் காட்டி, அரச பயங்கரவாதம் மக்களை தாக்கப்பாயும் போது, அச்சந்தர்ப்பத்தில் மக்களுக்காக பரிந்து பேசி, வாதாடி, மக்களின் செயல்பாட்டை நியாயப்படுத்தி, அவ்விடத்தில் மக்களுக்கு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வை கூடுதலாக அளிப்பதே நல்ல மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பான மக்கள் பணியாகும். அதைவிடுத்து “வீட்டை எரிக்க முற்படுபவனுக்கு கொள்ளிக்கட்டை எடுத்துக்கொடுக்கும்” பாத்திரத்தை வகிக்கக்கூடாது.
இரண்டாவதாக,
அநேகமான ஆர்ப்பாட்டங்கள் மகஜர் கையளிப்புடனேயே முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றன. எனவே மகஜர் கையளிக்கப்பட்டாலே மக்கள் களைந்து செல்வார்கள். மக்கள் களைந்து சென்றால் மாத்திரமே தாமும் அங்கிருந்து புறப்பட்டுச்செல்ல முடியும். இல்லாவிட்டால் மக்களோடு மக்களாக தாமும் நிற்க வேண்டும் என்ற காரணத்தினாலும்,
முன்னதாக நகரசபை உள்ளக மண்டபத்தில் நடைபெற்ற உணர்வுப்பகிர்வு நிகழ்ச்சியில், தனது துயரத்தை பகிர்ந்து கொண்ட மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த தாய் ஒருவர்,
“பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணம் வந்தவேளை, யாழ்.பொதுநூலகம் முன்பாக தாம் போராட்டம் நடத்தியதாகவும், பொலிஸார் மறியல் போட்டு தம்மை நூலகத்தை நோக்கி முன்னேறிச்செல்ல விடாது தடுத்ததாகவும்,
எனினும் தாம் மறியலை உடைத்துக்கொண்டு நூலக வாசலை அண்மித்த போது இரண்டு வாகனங்கள் புறப்பட்டுச்சென்று விட்டதாகவும், அதைத்தொடர்ந்து மூன்றாவதாக வந்த வாகனத்துக்குள் பிரதமர் கமரூன் இருப்பதாக நினைத்து தாம் அதனை முற்றுகையிட்ட போது, அதற்குள் சம்பந்தன் ஐயா இருந்ததாகவும், தாம் கண்ணீருடன் கத்திக்கதறி அழுவதை பார்த்தும்கூட, இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்
 
“சம்பந்தன் ஐயா! உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்ற மாதிரி” எங்களைக்கண்டு கொள்ளாமலேயே போய்விட்டார். என்று கூறியதை
அழித்து துடைத்து, தாம் மகஜரை பெற்றுக்கொள்ளும் ஒளிப்படங்கள், மறுநாள் காலை செய்திப்பத்திரிகைகளின் முகப்பை அலங்கரிக்க வேண்டும் என்பதாலுமே, மகஜரை பெற்றுக்கொள்வது தொடர்பில் கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன.
 
சம்பந்தனின் தவறுக்காக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக்கோரிய மாவை.சேனாதிராசா!
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, காணாமல் போகச்செய்யப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் ஒன்றுகூடி, யாழ்.பொதுநூலகம் முன்பாக நடத்திய கவனயீர்ப்புப்போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், அம்மக்களை கண்டும் காணாததுமாகச்சென்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் செய்கை தொடர்பில், தான் “சம்பந்தனுக்காக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருவதாக” இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா கேட்டுக்கொண்டார்.
கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் போய் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் கடந்த 30.08.2014 சனிக்கிழமை அன்று வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் காணாமல் போகச்செய்யப்பட்டோரை தேடும் உறவுகளின் இணையத்தினதும், வடமாகாண பிரஜைகள் குழுக்களினதும் ஏற்பாட்டில் அனுஸ்டிக்கப்பட்டது.
வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள், தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சர்வமதத்தலைவர்கள், சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்கள், காணாமல் போகச்செய்யப்பட்ட உறவுகளைத்தேடும் தமிழ் முஸ்லிம் சிங்கள குடும்பங்கள், உறவினர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள், சமுக ஆர்வலர்கள் என எழுநூறுக்கும் மேல்பட்ட மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் வடக்கிலும் தென்னிலங்கையிலும் இருந்து கலந்துகொண்ட தமிழ் முஸ்லிம் சிங்கள இன மக்களின் உணர்வுப்பகிர்வு நிகழ்ச்சி இடம்பெற்றது.
“சம்பந்தன் ஐயா சம்பந்தமே இல்லாமல் போய் விட்டார்.” அபலைத்தாயின் கண்ணீர்க்கதை!   
இந்த நிகழ்ச்சியில், தனது துயரத்தை பகிர்ந்து கொண்ட மன்னார் மாவட்டத்தைச்சேர்ந்த தாய் ஒருவர்,
“பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணம் வந்தவேளை, யாழ்.பொதுநூலகம் முன்பாக தாம் போராட்டம் நடத்தியதாகவும், பொலிஸார் மறியல் போட்டு தம்மை நூலகத்தை நோக்கி முன்னேறிச்செல்ல விடாது தடுத்ததாகவும், எனினும் தாம் மறியலை உடைத்துக்கொண்டு நூலக வாசலை அண்மித்த போது இரண்டு வாகனங்கள் புறப்பட்டுச்சென்று விட்டதாகவும், அதைத்தொடர்ந்து மூன்றாவதாக வந்த வாகனத்துக்குள் பிரதமர் கமரூன் இருப்பதாக நினைத்து தாம் அதனை முற்றுகையிட்ட போது, அதற்குள் சம்பந்தன் ஐயா இருந்ததாகவும், தாம் கண்ணீருடன் கத்திக்கதறி அழுவதை பார்த்தும்கூட, “சம்பந்தன் ஐயா! உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்ற மாதிரி” எங்களைக்கண்டு கொள்ளாமலேயே போய்விட்டார்.
ஐயாமாரே! நாங்க உங்களிட்ட அப்பிடி என்னத்த கேட்கப்போறம். எங்கட பிள்ளைகளை கண்டுப்பிடிச்சு தாங்க எண்டு, உங்களிட்ட நாங்க கேட்கப்போறதில்ல. உங்களால அது முடியாது எண்டும் எங்களுக்குத்தெரியும். சரி நீங்க வாகனத்த விட்டு கீழ இறங்காட்டியும் பரவாயில்ல. கண்ணாடியையாவது பதிச்சி எங்கள நோக்கி கையைத்தானும் அசைச்சி, “நான் உங்கள் கூடவே இருக்கிறன்” என்ற நம்பிக்கையை கூடத்தானுமா தரக்கூடாது?” என்று கண்ணீர் மல்கக்கேட்டபோது,   சபையில் இருந்த எல்லோரும் கண் கலங்கினர்.
பின்னர் குறித்த நிகழ்ச்சியில் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதே, மாவை.சேனாதிராசா சம்பந்தனின் தவறுக்காக, தான் சம்பந்தன் சார்பாக காணாமல் போகச்செய்யப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களிடமும், உறவினர்களிடமும் பகிரங்க மன்னிப்புக்கோருவதாக கூறி, பொதுமன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
எங்கே சென்று முடியும் இந்த மன்னிப்பு கலாசாரம்? 
ஏற்கனவே கடந்த 2012ம் வருடம் மே மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு மேதின நிகழ்ச்சியில், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் சிங்கக்கொடியை தூக்கி அசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தமைக்கு தமிழ் தேசிய ஊடகங்களும், தமிழ் மக்களும் கடும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தபோது, சம்பந்தனின் செய்கை தொடர்பில், தான் சம்பந்தனுக்காக பகிரங்க மன்னிப்புக்கோருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா (04.05.2012 அன்று) கேட்டுக்கொண்டதும்,
அதற்கு சம்பந்தன், “எனக்காக யாரும் மன்னிப்பு கோர தேவையில்லை. அதற்கான அவசியமும் இல்லை. எனக்காக மன்னிப்பு கேட்க உவர் யார்? எனக்கென்று சுயபுத்தியிருக்கு. என் புத்திக்கு என்ன செய்யணும், ஏது செய்யணும் என்று எனக்குத்தெரியும். என்ன வச்சு யாரும் சுயவிளம்பரம் தேட வேண்டாம்.” என்று மறுத்துப்பேசி, தனது செயலை நியாயப்படுத்தி, மாவையை கடும் எச்சரிக்கை செய்திருந்ததும் தெரிந்ததே.
இந்நிலையில், மாவை.சேனாதிராசா சம்பந்தன் சார்பில் மீண்டும் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். இருந்துதான் பார்ப்போமே, இனி என்ன தான் நடக்கப்போகிறது. இதற்கும் சம்பந்தனின் மறுப்பறிக்கை வருமா? வராதா என்று?
-கவரிமான்-
SHARE