மோடி ஓதிய மந்திரமும், கட்டவிழும் சதியும்

105

MODI TAMIL DELEGATIONடில்லியில் கொங்கிரஸ் கோலோச்சிய பொழுது அதன் அரவணைப்பில் இறுமாந்திருந்து, கொங்கிரசின் ஆட்சி முடிவுக்கு வந்ததும் மோடியின் அணைப்பிற்காகத் தவம்கிடந்த சம்பந்தருக்கும், அவரது பரிவாரங்களுக்கும் ஒருவாறாகத் தனது கடைக்கண்ணை மோடி காண்பித்து விட்டார்.

தவம் நிறைவேறிய மகிழ்ச்சியிலும், வரம் கிடைத்த குதூகலிப்பிலும் காலுக்கு மேல் காலைப் போட்டுக் கொண்டு சம்பந்தர் அடிக்கும் கொட்டத்திற்கும், மகிந்தர் அழைத்தால்தான் பேச்சு இல்லாவிட்டால் நாங்களாக வலிந்து பேச்சுக்களுக்குப் போக மாட்டோம் என்று அவரது ‘பட்டத்து இளவரசர்’ சுமந்திரன் ஏவும் காகித ஏவுகணைகளுக்கும் அளவே இல்லாது போய்விட்டது. போதாக்குறைக்கு தமிழ் மக்களின் பக்கம் நூற்றுக்கு நூறு வீதம் இந்தியா நிற்கின்றது என்று தங்களிடம் மோடி உறுதியளித்ததாகவும் ஒரு குண்டை சம்பந்தர் தூக்கிப்போட்டுள்ளார்.

நூற்றுக்கு நூறு வீதம் தமிழ் மக்களோடு இந்தியா நிற்பது உண்மையென்றால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகத்தால் தொடங்கப்பட்டிருக்கும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காது இந்தியா முட்டுக்கட்டை போடுவதை தமிழ் மக்கள் மீதான இந்தியாவின் ‘பாசத்தின்’ எத்தனையாவது விழுக்காட்டிற்குள் நாம் கணக்கெடுக்க வேண்டும் என்பதை சம்பந்தர் விளக்குவது நல்லது.

இவை ஒரு புறமிருக்க புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை நோக்கியும் குண்டொன்றை சம்பந்தர் தூக்கிப் போட்டுள்ளார். அதாவது மிதவாத அரசியலைத் தழுவி நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடும்போக்குப் பாதையில் பயணிக்கும் புலம்பெயர் தமிழர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று தம்மிடம் மோடி கேட்டுக் கொண்டதாக சம்பந்தர் கூறியதுதான் அது.

2009 மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையிலான ஆயுதப் போராட்டம் இடைநிறுத்தம் பெற்றதற்குப் பின்னரான சூழமைவில் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை மிகப் பெரும் அச்சுறுத்தலாகவே சிங்களம் முன்னிலைப்படுத்தி வருகின்றது. ‘புலிகளின் எச்சங்கள்’, ‘புலம்பெயர்ந்த புலிகள்’, ‘புலிச்சார்புப் புலம்பெயர்ந்தோர்’ என்றெல்லாம் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களைக் குறி வைத்துக் கடந்த ஐந்து ஆண்டுகளாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் புலிப்பூச்சாண்டியை சிங்களம் கிளப்பி விட்டாலும்கூட, உண்மையில் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களால் சிங்களத்தின் தேசிய பாதுகாப்பிற்கு இற்றவரைக்கும் எவ்வித அச்சுறுத்தலும் நிலவவில்லை என்ற பார்வையே தமிழீழ மக்கள் அதிகமாக வாழும் மேற்குலக நாடுகளில் நிலவுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட புலம்பெயர் தேசங்களில் இயங்குவதாகக் கூறப்படும் பதினாறு தமிழ் அமைப்புக்கள் மீதும், நானூற்று இருபத்து நான்கு தனிநபர்கள் (தற்பொழுது நானூற்று இருபத்தொரு பேராகக் குறைந்துள்ளது) மீதும் தடைவிதித்துக் கடந்த 21.03.2014 அன்று சிறப்பு வர்த்தமானி அறிவித்தலை சிங்களம் விடுத்த பொழுது, இது புலம்பெயர் தேசங்களில் இருந்து எழும் தமிழ் மக்களின் உரிமைக் குரலை நசுக்கும் முயற்சியென்ற கருத்தையே உடனடியாகவே பிரித்தானியாவும், கனடாவும் வெளியிட்டிருந்தன. அத்தோடு குறிப்பிட்ட பதினாறு அமைப்புக்களும், தனிநபர்களும் ஆபத்தான பயங்கரவாதிகள் என்றும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் சிங்களம் விடுத்த கோரிக்கைகளையும் மேற்குலக நாடுகள் உதாசீனம் செய்தன.

புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வசிக்கும் தமிழீழ மக்களை சாராம்சத்தில் நான்கு வகையான பிரிவினராகப் பகுக்கலாம். முதலாவது வகையினர் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு முற்று முழுதாக எதிரானவர்கள். சிங்களத்தோடு அல்லது சிங்கள – இந்திய அரசுகளின் கைக்கூலிகளான ஒட்டுக்குழுக்களின் பின்னணியைக் கொண்டவர்கள் இவர்கள். இவர்கள் எப்பொழுதுமே சிங்கள – இந்திய அரசுகளின் அடிவருடிகளாக இயங்குவதில் குதூகலம் காண்பவர்கள். இந்தப் பிரிவினர் அடிப்படையில் ஒரு சிறிய குழுவினர் மட்டுமே.

இரண்டாவது வகையினர் தமிழ்த் தேசிய அரசியலில் நாட்டம் இல்லாதவர்கள். தாம் உண்டு, தமது குடும்பம் உண்டு என்று குறுகிய வட்டத்திற்குள் வாழ்பவர்கள். கோடை காலத்தில் தாயகத்திற்கு விடுமுறையில் செல்வார்கள். பின்னர் வெளிநாடு திரும்பி தாமும், தமது வாழ்வும் என்றபடியாகச் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள். இப்படிப்பட்டவர்களும் முன்னைய பிரிவினரைப் போன்று சிறிய குழுவினரே.

மூன்றாவது வகையினர் தமிழ்த் தேசியத்தின்பால் பற்றுக் கொண்டவர்கள். ஆனால் அதற்காக எதனையும் இழக்கத் துணியாதவர்கள். இவர்களுக்குத் தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி. ஆனால் அதற்காகத் தமது வியர்வையையோ, குருதியையோ சிந்தும் துணிவு இவர்களுக்கு இல்லை. அடிக்கடி தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை இவர்கள் விமர்சிப்பது உண்டு. அதேநேரத்தில் தேவை வரும் பொழுது தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களைப் புரிந்து கொண்டு குறைந்தபட்ச உதவிகளை வழங்குவதற்கு இவர்கள் பின்னிற்பது கிடையாது. அதேநேரத்தில் தம்மை நடுநிலைவாதிகள் போன்று காண்பித்துக் கொண்டு அடிக்கடி தாயகத்திற்கான தரிசனங்களை இவர்கள் மேற்கொள்வார்கள். இவர்கள்தான் புலம்பெயர் தேசங்களில் அதிக அளவில் இருக்கின்றார்கள்.

நான்காவது வகையினர் தமிழ்த் தேசியத்திற்காகத் தமது வாழ்வை அர்ப்பணிக்கும் துணிவும், தேசாபிமான உணர்ச்சியும் கொண்டவர்கள். தமிழீழ மண்ணில் ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில் அதன் அச்சாணியாகப் புலம்பெயர் தேசங்களில் திகழ்ந்தவர்கள். இவர்களின் செயற்திறனிலும், உத்வேகத்திலுமே புலம்பெயர் தேசங்களில் உள்ள மூன்றாவது வகையினரின் அரசியல் எழுச்சியும், வீழ்ச்சியும் தங்கியுள்ளது.

இந்த நான்காவது தரப்பினரையே ‘புலிகளின் எச்சங்கள்’, ‘புலம்பெயர் புலிகள்’, ‘புலிச்சார்புப் புலம்பெயர்ந்தோர்’ போன்ற முத்திரைகளைக் குத்தி சிங்களம் புலிப்பூச்சாண்டி கிளப்புகின்றது. இவர்களைக் கடும்போக்குத் தேசியவாதப் புலம்பெயர் தமிழர்கள் என்று மேற்குலக நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் விளிப்பது உண்டு. ஆனாலும் இவர்களைத் தூக்கியெறிவதற்கு மேற்குலகம் தயாராக இல்லை.

மேற்குலகைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் நேரடி வழிகாட்டல் இல்லாத இன்றைய சூழமைவில், இந்த நான்காவது தரப்பினரை ஒன்றிணைத்து வைத்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் உயிர்வடிவம் கொடுக்கப்பட்ட தமிழீழ விடுதலை என்ற சித்தாந்தமே. இந்த நான்காவது தரப்பினரும், இவர்களை ஒன்றிணைத்து வைத்திருக்கும் தமிழீழ விடுதலைச் சித்தாந்தமும் இப்போதைக்கு இல்லாதொழிக்கப்படத் தேவையில்லை என்ற பார்வை மேற்குலகிற்கு இருக்கின்றது. அதுவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் இடைநிறுத்தம் பெற்றுள்ள இன்றைய சூழமைவில், அதன் தொடர்ச்சியாக இன்னுமொரு ஆயுதப் போராட்டம் தோற்றம் பெறாத பின்புலத்தில், ஈழத்தீவில் தமது பொருண்மிய நலன்களை நிவர்த்தி செய்வதற்குத் தேவையான அழுத்தங்களை சிங்களத்தின் மீது பிரயோகிப்பதற்கு இந்த நான்காவது தரப்பினரின் இருப்பும், அவர்களால் பேணிப் பாதுகாக்கப்படும் தமிழீழ விடுதலைச் சித்தாந்தமும் மேற்குலகிற்கு இன்றியமையாததாக உள்ளது. இதன் காரணமாவே இவர்களை கடும்போக்குத் தேசியவாதப் புலம்பெயர் தமிழர்கள் என்று மேற்குலக கொள்கை வகுப்பாளர்கள் விளித்தாலும்கூட, சிங்களம் கிளப்பும் புலிப்பூச்சாண்டியை அவர்கள் கணக்கில் எடுப்பதில்லை.

ஆனால் இந்த நான்காவது தரப்பினரை எப்படியாவது வழிப்படுத்தித் தமது எடுபிடிகளாக மாற்றிவிட வேண்டும் என்பதில் சிங்களமும், இந்தியாவும் நெடுங்காலமாகவே துடியாய்த் துடித்து வருகின்றன. இது மே 18 இற்குப் பின்னர் ஏற்பட்ட ஆசையல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியிலேயே ஏற்பட்ட ஆசை இது. ஆனால் அது அப்பொழுது சாத்தியப்படவில்லை.

மே 18 இற்குப் பின்னர் தலைமைச் செயலகம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயர்களில் பல்வேறு சதிக்குழுக்களை உருவாக்கி இந்த நான்காவது தரப்பினரைப் பலவீனப்படுத்துவதற்கு பல முயற்சிகளை சிங்கள – இந்திய அரசுகள் எடுத்த பொழுதும் அவையும் கைகூடவில்லை.

இதுவிடயத்தில் சிங்களத்தின் ஆசை உலகறிந்த ஒன்றுதான். ஆனால் இந்தியாவின் ஆசை இற்றைவரைக்கும் மூடுமந்திரமாகவே இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது ஒட்டகம் வெளியே வந்துவிட்டது. மோடி என்ற இந்து மதவாதியின் வடிவத்தில் இந்த ஆசை இப்பொழுது வெளிப்பட்டுள்ளது. இங்கு மோடி வெறும் கைப்பாவைதான்: அதாவது இந்திய கொள்கை வகுப்பாளர்களின் மூலோபாயத்திற்குத் தனது இந்து மதவாத சித்தாந்தத்திற்குள் நின்று செயல்வடிவம் கொடுப்பவர்தான் மோடி.

மோடியின் வாயில் இருந்து உதிர்ந்து, சம்பந்தரின் செவிக்குள் நுழைந்து, அவரது வாயின் வழியாகப் புலம்பெயர்வாழ் தமிழர்களை நோக்கி இந்தியாவின் ஆரிய சித்தாந்த மந்திரம் ஓதப்படுவதற்கு முன்னரே அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் முயற்சிகளை இந்திய கைக்கூலிகள் எடுக்கத் தொடங்கியிருந்தனர். இவ்வாறான ஒரு முயற்சி இந்திய உள்ளகப் புலனாய்வு அமைப்பான ஐ.பி. நிறுவனத்தின் முகவரான விசுவநாதன் உருத்திரகுமாரன் ஊடாக 2009 மே 18 இற்குப் பின்னர் எடுக்கப்பட்டது.

எனினும் இச் சதி முயற்சியை முறியடித்ததில் புலம்பெயர் தமிழ்த் தேசிய ஊடகங்கள் வகித்த பாத்திரம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, 2010ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து இந்த ஊடகங்களை இலக்கு வைத்து காதும் காதும் வைத்தாற் போன்று சில காய் நகர்த்தல்கள் இந்திய உளவு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டன. வலுவான கொள்கைத் திட்டத்துடன் இயங்கும் புலம்பெயர் தமிழ்த் தேசிய ஊடங்களை உடைப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொண்ட இந்திய உளவு நிறுவனங்கள், ஊடகங்களின் பெயரில் இயங்கும் கட்டாக்காலி இணையங்கள் சிலவற்றை தமிழ்த் தேசிய ஊடகங்களாக முன்னிலைப்படுத்தி, அவற்றின் மூலம் கருத்தியல் போரைத் தொடங்கின.

இதன் ஓர் அங்கமாகப் பெங்களூரைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் பரந்தன் ராஜனின் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவின் ஐரோப்பிய பிரதிநிதியான இலண்டனில் வசிக்கும் குடு முஸ்தாபா என்பவரின் நண்பரான இலண்டனை தளமாகக் கொண்டு இயங்கி வரும் கண்ணன் என்பவருக்குச் சொந்தமான கட்டாக்காலி இணையம் உள்வாங்கப்பட்டது. கண்ணன் என்ற இந்த நபர் கடன் அட்டை மோசடிகளில் ஈடுபட்டதன் காரணமாகக் கடந்த காலங்களில் இந்தியாவிற்கு செல்வதற்குப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவரை அணுகிய ஈ.என்.டி.

எல்.எப் பிரதிநிதி குடு முஸ்தாபா, இப் பயணத் தடையை எடுப்பதற்குத் உதவி புரிய முன்வந்தார். இதன் தொடர்ச்சியாக 2010ஆம் ஆண்டு ஜுன் மாதம் கண்ணன் இந்தியா சென்றார். அங்கு சென்றதும் கண்ணனுக்கு இந்திய உளவு நிறுவனங்களால் என்னென்ன கீதா உபதேசங்கள் வழங்கப்பட்டிருக்கும் என்பதை வாசகர்கள் அனுமானித்துக் கொள்வதற்கு அதுவொன்றும் அண்டவெளி சாத்திரம் போன்று கடினமான ஒரு விடயம் அல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து திரும்பியதும் பிரித்தானியாவில் தமிழ் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் பலவற்றில் கலந்துகொண்ட இவர், குடு முஸ்தாபாவை உள்வாங்குமாறு சம்பந்தப்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் போட்டார். எனினும் அதற்கு தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் மசியவில்லை. இந்நிலையில் இவ்வாண்டு ஊடக மாநாடு என்ற போர்வையில் ஈ.என்.டி.எல்.எவ் குடு முஸ்தாபாவை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இவரால் இலண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் குடு முஸ்தாபா கலந்து கொள்வதை முன்னரே அறிந்து கொள்ளாது சில தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் பங்கேற்று மூக்குடைபட்டதுதான் வேடிக்கையானது.

கடந்த மாதம் ஈழமுரசு பத்திரிகையின் சகோதர ஊடகமான சங்கதி-24 இணையம் மீது இணையவழி துடைத்தழிப்புத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு இருபத்து நான்கு மணிநேரத்திற்கு முன்னர் ஊடக இல்லத்தையும், அதனால் நிர்வகிக்கப்படும் ஊடகங்களிலும், அதில் பணியாற்றுவோரையும் வசைபாடும் செய்தியன்று ஈ.என்.டி.எல்.எப் குடு முஸ்தாபாவின் நண்பரான கண்ணனின் கட்டாக்காலி இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இச்செய்தி வெளிவந்த சில மணிநேரங்களில் ‘நாய்களே’ என்று விளிக்கும் மின்னஞ்சல் ஒன்றும் ஊடக இல்லத்திற்கு கண்ணனால் அனுப்பி வைக்கப்பட்டது. இவை நடைபெற்ற இருபத்து நான்கு மணிநேரத்திற்குள் சங்கதி-24 இணையம் தாக்கித் துடைத்தழிக்கப்பட்டு ஆறு நாட்களுக்கு அதன் சேவைகள் முடக்கப்பட்டன.

ஆனாலும் இவற்றை உடைத்தெறிந்து மீண்டும் சங்கதி-24 இணையம் கருத்தியல் களத்தில் புதுப்பொலிவுடன் களமிறங்கியுள்ளது. இப்பொழுது ஊடக இல்லத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், நிர்வாகிகளின் விபரங்களை (குறிப்பாக அவர்களின் புகைப்படங்களை) திரட்டும் முயற்சியில் ஈ.என்.டி.எல்.எவ் குடு முஸ்தாபாவின் நண்பர் கண்ணன் இறங்கியிருப்பதாகவும், இதற்காக தமிழகத்தில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமான ஊடகவியலாளர்களை அணுகியிருப்பதாகவும் நம்பகமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

ஏற்கனவே இவ்வாறான முயற்சியன்று 2009ஆம் ஆண்டிலிருந்தே கோத்தபாய ராஜபக்சவால் எடுக்கப்பட்டது. இம்முயற்சியின் விளைவாகவே கடந்த மார்ச் மாதம் நானூற்று இருபத்தொரு புலம்பெயர்வாழ் தமிழர்களைப் பயங்கரவாதிகளாக சிங்களம் பிரகடனம் செய்தது. ஆனால் அத்தோடு தனது முயற்சிகளை சிங்களம் கைவிடவில்லை. அண்மைக் காலங்களில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் சிலரைப் பயன்படுத்தியும் இம்முயற்சிகளை சிங்களம் எடுத்து வருகின்றது.

இவற்றுக்குப் பலம்சேர்க்கும் வகையில் இப்பொழுது ஈ.என்.டி.எல்.எவ் குடு முஸ்தாபாவின் நண்பர் கண்ணன் எடுத்திருக்கும் முயற்சிகள் அமைந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏனென்றால் குடு முஸ்தாபாவைக் கௌரவித்து இலண்டனில் கண்ணன் நடத்திய நிகழ்வில் முக்கிய அதிதிகளாக டக்ளஸ் தேவானந்தாவின் நண்பரும், 2007ஆம் ஆண்டு யுத்தம் தீவிரமாக நடைபெற்ற பொழுது இலண்டனில் மகிந்தரை சந்தித்தவருமான நபர் ஒருவரும், ஊடகவியலாளர் என்ற போர்வையில் இயங்கும் சிங்கள உளவாளி ஒருவரும் கலந்து கொண்டிருந்தனர். எனவே புலம்பெயர் தமிழர்களை வழிப்படுத்துமாறு சம்பந்தரிடம் நரேந்திர மோடி மந்திரம் ஓதிய பின்புலத்தில் கட்டவிழும் இந்நிகழ்வுகள் எவ்விதமான நாசகார நோக்கங்களைக் கொண்டவையாக இருக்கக்கூடும் என்பதை அனுமானிக்கும் பொறுப்பை வாசகர்களிடமே விட்டு விடுகின்றோம்.

– கலாநிதி சேரமான்

SHARE