கடன் விவகாரத்தில் அர்ஜென்டினா அரசு நீதிமன்ற அவமதிப்பை செய்துள்ளது: அமெரிக்க நீதிபதி தீர்ப்பு

127
பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக அர்ஜென்டினா வெளி முதலீட்டாளர்களிடமிருந்து வாங்கியிருந்த 100 பில்லியன் டாலர் கடனை கடந்த 2001-ம் ஆண்டில் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அதன் பங்குதாரர்களுக்கு குறிப்பிட்ட அளவு பணத்தைத் திருப்பிக்கொடுப்பதாக ஒரு உடன்பாட்டினை அந்த நாடு எட்டியது. குறைந்த மதிப்பு பத்திர பரிமாற்றங்களை சில முதலீட்டாளர்கள் ஏற்றுக்கொண்டபோதும் அவர்களுக்கு வட்டி ஏதும் வழங்கப்படவில்லை.

ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த என்எம்எல் கேபிடல் மற்றும் அரேலியஸ் கேபிடல் நிர்வாகம் என்ற இரு நிதி நிறுவனங்கள் தாங்கள் அளித்த 1.5 பில்லியன் டாலர் தொகையையும் முழுவதுமாகத் திருப்பி அளிக்கும்படி வலியுறுத்தின. அதுபோல் உடன்படிக்கை மூலம் சீரமைக்கப்பட்ட பத்திரங்களுக்கு மட்டும் அர்ஜென்டினா பணம் செலுத்துவதாக இருந்ததையும் வழக்கு தொடுத்தன்மூலம் தடுத்து நிறுத்தின.

இந்த வழக்கின் மூலம் சர்ச்சையில் சிக்கிய அர்ஜென்டினாவின் செயல்பாடு குறித்து ஜூலை மாதம் நடத்தப்பட்ட விசாரணை முடிவில் இந்த நிதி நிறுவனங்களின் பாக்கியை அர்ஜென்டினா செலுத்த வேண்டும் என்று நீதிபதி தாமஸ் கிரீசா தீர்ப்பு வெளியிட்டார். ஆனால் இதனை ஏற்க அர்ஜென்டினா மறுத்துவிட்டது. மேலும் நேற்று அமெரிக்காவிற்கான அர்ஜென்டினா தூதுவர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.

அதில் தங்கள் நாட்டின் மீது நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு வழங்கப்படுமேயானால் அது அந்நாட்டு உள்துறை விவகாரங்களில் அமெரிக்கா சட்ட விரோதக் குறுக்கீடுகளை மேற்கொண்டதாக எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டபடி அர்ஜென்டினா, நிதி நிறுவனங்களுக்கு பணத்தை திருப்பித் தராததால் இது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படுகின்றது என்றே நீதிபதி கிரீசா குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுகுறித்த அபராதத்தை பின்னாளில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE