தமிழ்த்தேசியத்தின் உரிமைகளை மீறி அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலுக்கேற்ப தமிழரசுக்கட்சி செயற்படுகின்றது

159

விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்களைக் கடந்துள்ள இந்நிலையில் அரசாங்கத்துடன் இணக்கப்பாட்டு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக்கட்சியினர் செயற்பட்டுவருகின்றனர். குறிப்பாகச் சொல்லப்போனால் மாகாணசபை உருவாக்கப்பட்ட காலந்தொட்டு தெரிவுக்குழு என்கின்ற போர்வையில் இலங்கையரசு அரசியல்க்கட்சிகளை ஒன்றிணைத்து அதனூடாக அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான அரசியலையே எதிர்ப்பு அரசியலாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் செய்துவந்தார்.

இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கான தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை இவற்றிற்காக போராடி வந்த விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அடியோடு ஒழித்துவிடும் நோக்கில் அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு உறுதுணையாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியை அரசாங்கம் இலகுவாகப் பயன்படுத்தி வருகின்றது. குறிப்பாகச்சொல்லப்போனால் சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன் போன்றவர்கள் அதிகாரப்போக்குடையவர்களாக செயற்பட்டுவருவதாக ஏனைய கட்சிகளின் அங்கத்தவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் ஊடகப்பேச்சாளராக அங்கம் வகிக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன் அதன் செயற்பாடுகள் குறித்தும், நிகழ்ச்சிநரல்கள் மற்றும் வெளிநாட்டுப் பேச்சுக்கள் தொடர்பிலும் கருத்து வெளியிடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சுமந்திரன் அல்லது மாவை இருவரில் ஒருவரே நடைபெறுகின்ற சில முக்கிய பேச்சுக்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுகின்றனர். அப்படியாயின் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் ஊடகப்பேச்சாளராக அங்கம் வகிக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன் எதற்கு? பேச்சளவில் மாத்திரம் இவர் இருக்கின்றாரா என சந்தேகங்களும் எழுகின்றன. அண்மையில் தமிழரசுக்கட்சியின் மகாநாடு வவுனியாவில் நடைபெற்றபோது பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பன உள்ளடக்கப்படவில்லை. அதனைவிடுத்து வேறு தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அஹிம்சை வழியில் போராட்டங்களை ஆரம்பிக்கப்போவதாக மாவை சேனாதிராஜா அவர்கள் தெரிவித்திருந்த கருத்துக்கள் வரவேற்கத்தக்கது மட்டுமல்லாது அடுத்த தமிழரசுக்கட்சியின் மகாநாடு முடிவடைவதற்குள் தமிழ்மக்களுக்கான தீர்வினை இலங்கையரசு வழங்கவேண்டும் இல்லாவிட்டால் இலங்கையரசிற்கு தக்க பாடம் புகட்டுவோம் என அக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

2   6 7 8 9 10 11 12 13
மாவை சேனாதிராஜா அல்லது சம்பந்தன் இருவரும் தமிழரசுக்கட்சியில் பழமைவாய்ந்தவர்கள். அதனது நெளிவு சுழிவுகளை நன்கு அறிந்தவர்கள். இவர்களுக்குப் பின் கட்சியை கொண்டுசெல்வது கடினம். ஆகவே இவர்களுடைய காலத்தில் தமிழ்மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்வது அவசியமாகக் கருதப்படுகின்றது. இதனைக்கருத்திற்கொண்டு தமிழ்மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் இதர கட்சிகளின் செயற்பாடுகளை சுயமாக செயற்பட அனுமதிக்கவேண்டும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கென்று ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது. அதன் கட்டமைப்புகளுக்கமைய அந்தந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் அந்தந்த கடமைகளைச் செய்ய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் அனுமதிக்கவேண்டும். சிங்கள தேசம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சின்னாபின்னமாக உடைக்கும் திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. அது இன்று நேற்றல்ல. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஆரம்பகால கட்டத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை, முள்ளிவாய்க்கால் படுகொலை, இனவழிப்பு என்றெல்லாம் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, இன்று இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் எனக் கூறிவருகின்றது. இதற்கு உடந்தையாக சிங்கள இனவாதத்துடன் இரண்டறக் கலந்தவரான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் செயற்பட்டு வருகின்றார். நேற்றைய தினம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு யாழில் அவசரமாகக் கூடி இராஜதந்திரப் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளது. கட்சியிலுள்ளவர்கள் கட்சியின் சட்டதிட்டங்களை மீறி செயற்படுவதாக சம்பந்தன் அவர்களால் கூறப்பட்டுள்ளது. அதற்கான முன் நடவடிக்கைககைள எடுப்பதே இதனது நோக்கமாகும்.

சும்பந்தன், மாவை சேனாதிராஜா இருவரையும் தொடர்ந்து கட்சிகளை வழிநடத்திச் செல்லக்கூடிய அல்லது இலங்கையரசிற்கு சோரம் போகாத தலைவர் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதனம், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரவனபவான், கிழக்கு மாகாணத்தில் பொன்.செல்வராசா ஆகியோரும் கருதப்படுகின்றனர். ஏனையவர்களுடைய நிலவரங்கள் இலங்கையரசிற்கு சோரம் போகும் தன்மைகளைக் கொண்டதாக தமது செயற்பாடுகளை கடந்த காலங்களில் முன்னெடுத்து வந்ததாகவும், இலங்கையரசுடன் ஒட்டுக்குழுக்களாக செயற்பட்டவர்களாகவும் மக்களால் கருதப்படுகின்றது. இவர்களினுடைய கருத்தின் படி தமிழர் விடுதலைப்போராட்டத்தில் தியாகத்துடனும் அதனது உண்மைத்தன்மையினை அறிந்தும் நாம் இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுகின்றோம்.

download

ஆனாலும் அதிகாரங்கள் அனைத்தையும் தமிழரசுக்கட்சி தம்பக்கம் வைத்துக்கொண்டு ஏனைய இதர கட்சிகளை நசுக்கப்பார்க்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளை தமிழரசுகட்சி முன்னெடுத்துவருகின்றது. தொடர்ந்தும் இவ்வாறு செயற்படுவார்களானால் எமது கட்சிகள் தனித்தனியே இயங்கவேண்டிய சூழ்நிலை உருவாகும் எனவும் இக்கட்சியிலுள்ள முக்கிய உறுப்பினர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர். தமிழரசுக்கட்சி தமிழ்மக்களுக்கான பிரதிநிதித்துவத்தினைக் கொண்டுள்ள நிலையில் அவர்களினுடைய செயற்பாடுகள் தமிழ்த்தேசியத்தினை ஒன்றிப்போவதாகவே அமையவேண்டும். பிரபாகரனின் போராட்டத்தினால் தான் இன்று தமிழ்மக்களைச் சர்வதேசம் உற்றுப்பார்த்துள்ளதே தவிர தமிழரசுக்கட்சியினால் அல்ல.

எந்தவொரு நாட்டினை எடுத்துக்கொண்டாலும் கொரில்லா வடிவில் உருவெடுத்த இயக்கங்கள் அனைத்துமே தமது விடுதலை இலக்கை நோக்கியே போராடி வந்திருக்கின்றன. அது எவ்வாறெனில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட இனத்திற்கெதிராக வன்முறைகளைக் கட்டவீழ்த்து விடும்பொழுது அதனை எதிர்த்து போராடும் விதமாகவே விடுதலை வீரர்கள் உருவெடுத்தனர். பெரும்பான்மை இனத்தினைக் கொண்ட சிங்கள அரசு தனது உரிமையை வென்றெடுக்கும் நிகழ்ச்சிநிரலுக்கேற்ப அரசியலைக் கொண்டுசெல்லும். அதற்கெதிராகவே தமிழரசுக்கட்சியினுடைய செயற்பாடுகள் அமையப்பெறவேண்டும்.

அதனைவிடுத்து பயந்த வாழ்க்கை வாழ்வோமாகவிருந்தால் மீண்டும் எமது தமிழினம் சிங்கள தேசத்தினால் அடக்கப்படும். இதன் காரணமாக 21ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழினம் மீண்டும் ஆயுதமேந்திப்போராட நேரிடும். இவற்றை எல்லாம் தவிர்ப்பதற்கு தமிழரசுக்கட்சி தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி செயற்படவேண்டும். தமிழ் மக்களை நம்பவைத்து கழுத்தறுக்கக்கூடாது. சிந்தித்துச்செயற்படவேண்டிய காலத்திற்குள் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது. சர்வதேசமே விடுதலைப்புலிகளுடைய போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. மீண்டும் சர்வதேசம் அல்லது இந்தியாவை நம்பி பேச்சுவார்த்தைகளில் முட்டாள்த்தனமாக இறங்கிவிடக்கூடாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் சிங்கள பௌத்தர்களின் ஆலோசனைக்கேற்பவே அவருடைய செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றார். தமிழரசுக்கட்சி தமிழ்வாதிகளை உட்கொண்டு தமிழ் உணர்வாளர்களையும், தேசியத்தில் அக்கறையுடையவர்களையும் அருகில் வைத்துக்கொள்வதன் மூலம் தமிழ் மக்களுடைய உரிமைகளை வென்றெடுக்க முடியுமே தவிர, அரசிற்கு ஒத்துப்போவதாயின் அது அழிவின் பாதையையே தோற்றுவிக்கும்.

– இரணியன் –

SHARE