சியாச்சின் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெற பாக். பாராளுமன்ற குழு தலைவர் யோசனை

138
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இமயமலையில் உள்ள சியாச்சின் பனிசூழ்ந்த பகுதி ஆகும். இதுதான் உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள போர்க்களம் என்று கருதப்படுகிறது. குளிர்காலத்தில் சில சமயங்களில் இங்கு மைனஸ் 50 டிகிரி குளிர் நிலவும். இந்த பகுதியில் இரு நாடுகளின் படைகளும் உள்ளன. அந்த பகுதியின் பாதுகாப்புக்காக இரு நாடுகளுமே அதிக அளவில் பணம் செலவிட வேண்டி உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி இங்குள்ள பாகிஸ்தானின் கயாரி ராணுவ முகாம் மீது பனிப்பாறைகள் சரிந்து விழுந்ததில் 140 வீரர்கள் உயிர் இழந்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதியும், பாதுகாப்பு துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் தலைவருமான முஷாகித் உசேன், சியாச்சின் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மற்றும் உயிர் இழப்புகளை தடுப்பது தொடர்பாக சில யோசனைகளை தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சியாச்சின் பகுதி கடந்த 30 ஆண்டுகளாக அர்த்தமில்லாத போர்க்களமாக இருந்து வருகிறது. அங்கு ஏற்படும் உயிர் இழப்புகளில் 90 சதவீதம் அங்குள்ள மோசமான பருவநிலை காரணமாகவே ஏற்படுகிறது. அங்குள்ள கயாரி ராணுவ முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டு 140 பேர் பலியான சம்பவத்தில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரு நாடுகளுமே சியாச்சின் பகுதியில் இருந்து தங்கள் படைகளை வாபஸ் பெற வேண்டும். அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான பணம், ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை விரயம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். படைகளை வாபஸ் பெறுவதன் மூலம் ராணுவ வீரர்களின் உயிர் இழப்பையும் தடுக்க முடியும்.

படைகளை வாபஸ் பெற்று விட்டு சியாச்சினில் அமைதிப் பூங்கா ஏற்படுத்தி, அங்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யலாம்.

இவ்வாறு முஷாகித் உசேன் கூறினார்.

SHARE