இனிது இனிது வாழ்தல் இனிது!

147

தன்னம்பிக்கையால் ஜெயித்தவர்களைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டே இருப்பதன் மூலம் வீட்டுக்குள், குழந்தைகள் உள்பட பாசிட்டிவ் மனநிலையை விதைக்கலாம்!‘அன்பில் மூழ்குகிற போது, அத்தனை பயங்களும் காணாமல் போகின்றன…பயத்தில் ஆழ்கிற போது அத்தனை அன்பும் காணாமல் போகிறது…’திருமண வாழ்க்கைக்கு மிகப் பொருத்தமான பொன்மொழி இது. திருமணம் என்கிற உறவை அற்புதமான விஷயமாக சித்தரிக்காமல், அதைப் பற்றிய நெகட்டிவ் எண்ணங்களை ஏற்படுத்தி, பயத்தையும் பீதியையும் கிளப்பி, நடக்காத விஷயங்களை நினைத்துக் கவலை கொள்ளச் செய்யும் விஷயங்களே நம்மைச் சுற்றிலும் அதிகம். இதில் டி.வி. சீரியல்களின் பங்கு முக்கியமானது. நம் வாழ்க்கையில் நடந்துவிடக் கூடாதே என நாம் நினைக்கிற விஷயங்கள், சின்னத்திரை தொடர்களில் சர்வ சாதாரணமாக நடக்கும்.

அவற்றைப் பார்த்து நம் கவலைகள் அதிகரிக்கும். பாசிட்டிவான எத்தனையோ விஷயங்களைத் தவிர்த்து நெகட்டிவ் சிந்தனையிலேயே மனம் மூழ்கும். நிகழ்காலம் மறந்து, எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் காலம் கரையும்.திருமணத்துக்கு முன்பே, அந்த உறவைப் பற்றிய எதிர்மறையான எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் வளர்த்துக் கொள்பவர்கள், கடவுளை நம்புவதைவிடவும், அதிகமாக பிரச்னைகளை நம்புவார்கள். நடப்பதெல்லாம் தீமைக்கே என்றே நினைப்பார்கள். ஒரு பிரச்னை நடப்பதற்கான சாத்தியம் வெறும் 10 சதவிகிதம் என்றால், இவர்கள் அதைத் தம் பயத்தினால் 90 சதவிகித சாத்தியத்துக்குத் தள்ளுவார்கள்.  பயத்தைப் போல பயப்பட வேண்டிய விஷயம் வேறு இருக்காது என்பார்கள்.

கணவன் – மனைவிக்காகவே சொல்லப்பட்ட வாசகம் இது.‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்றும் ‘கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்’ என்றும் காலங்காலமாக போதிக்கப்பட்ட கருத்துகளை மனதில் கொண்டு, ஒருவித முன் அனுமானத்துடன், திருமண உறவுக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள் பலரும். திருமணத்துக்குப் பிறகு கணவன் – மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வரும். உடனே, அந்தச் சூழலுக்குக் காரணமே தனக்கு அமைந்த தவறான வாழ்க்கைத் துணைதான் எனக் கற்பனை செய்து குழப்பிக் கொள்கிறவர்களும் இருக்கிறார்கள்.

வாழ்க்கைத் துணையைக் கிண்டலடித்தும் கேலி பேசியும் வெளிவருகிற ஜோக்குகளும்எஸ்.எம்.எஸ் தத்துவங்களும் கூட இத்தகைய மனப்போக்கு கொண்டவர்களை மேலும் தூண்டி விடும். திருமண உறவை பிரச்னைகள் இன்றி நகர்த்திக் கொண்டு போக, கணவன், மனைவி இருவரின் அணுகுமுறையும் மனமுதிர்ச்சியும் அவசியம். ‘எனக்கு வாய்ச்சது சரியில்லை’ என்கிற புலம்பல், தன் தவறுகளைத் திருத்திக் கொள்வதிலிருந்து தப்பிக்கத் தனக்குத் தானே சொல்லிக் கொள்கிற சமாதானமாக மட்டுமே இருக்கும். கணவர்கள் ஒரு படி மேலே போய், குடிப்பழக்கத்துக்கு ஆளாவதுடன், அதற்கு முழுக் காரணமும் தம் எதிர்பார்ப்புக்கேற்றபடி அமையாத மனைவியே என்றும் வீண் பழியைச் சுமத்துவார்கள்.

ஒரு கவலையோ, பயமோ அதிகமாகும் போது, அந்த உணர்வை நிறுத்திவிட்டு, பசி, கோபம், தனிமை, உடல்நலமின்மை என அதற்கு ஏதேனும் காரணம் இருக்குமா என யோசியுங்கள். நமது கவலையைப் பற்றி வருந்துகிற நாம், அடுத்தவர் கவலையை எப்போதும் ரசித்துப் பார்க்கிறோம். அதனால்தான் மற்றவரின் பிரச்னைகளையும் கவலைகளையும் பேசுகிற டி.வி. சீரியல்களும், சினிமாக்களும், பத்திரிகை செய்திகளும் எப்போதும் நம் சுவாரஸ்யத்துக்குரியவையாக இருக்கின்றன.

என்னதான் தீர்வு?

நல்வழிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு பல பெற்றோரும், குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே பயத்தை ஊட்டி வளர்க்கிறார்கள். பேய், பூதத்தைக் காட்டித் தொடங்குகிற அந்த பயம், வளர்ந்து பெரியவர்களானதும்  ஓஸோனில் விழுந்த ஓட்டையைப் பற்றியும் அணு உலை வெடித்தால் எப்படித் தப்பிப்பது என்பது பற்றியும் பெரிய பயங்களுடன் வாழ நிர்ப்பந்திக்கிறது. எச்சரிக்கையாக வாழ்வது என்பதை மீறி, பயப்பட எப்போதும் ஏதோ ஒரு காரணத்துடன் பயணப்படப் பழக்குகிறோம்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், பிரார்த்தனை செய்யலாம். ‘உனக்காக நான் வேண்டிக் கொள்கிறேன்’ என்கிற அந்த வார்த்தைகளில் அடுத்தவரது கவலையை அவர்களிடமிருந்து எடுத்துவிட முடியும். ‘உன் கவலைக்காக நான் வேண்டிக் கொள்கிறேன். இனி உனக்கு அந்தக் கவலை தேவையில்லை’ எனச் சொல்கிற இந்த டெக்னிக், கணவன்-மனைவி உறவில் பெரிதும் உதவும்.தன்னம்பிக்கையால் ஜெயித்தவர்களைப் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டே இருப்பதன் மூலம் வீட்டுக்குள், குழந்தைகள் உள்பட பாசிட்டிவ் மனநிலையை விதைக்கலாம்.

நேர்மையாக வாழ்வோருக்கு பயங்கள் இருப்பதில்லை. இந்த விதி தம்பதியருக்கும் பொருந்தும். கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ செய்கிற விஷயங்கள்தான் பயத்துக்கான அடிப்படை. தம்பதியருக்குள் நேர்மை காணாமல் போவதால்தான் பிரிவு முதல் கொலை வரை எல்லாம் நடக்கிறது.நமது பயத்துக்கான விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும். அப்படிப் பேசும்போது பெரும்பாலும் நெகட்டிவாகத்தான் பேசுவோம். பரவாயில்லை. பிறகு அதே விஷயங்களை பாசிட்டிவாக எப்படிப் பார்க்க முடியும் என யோசிக்கலாம். பாசிட்டிவான அணுகுமுறையை, ஐடியாக்களை ரெக்கார்ட் செய்து வைத்து மறுபடி மறுபடி கேட்பது கூட, பயம் போக்கும் நல்ல பயிற்சியாக அமையும். கடைசியாக ஒரு வார்த்தை…

பயம் என்பது என்ன? 

உண்மையைப் போலத் தோற்றமளிக்கக்கூடிய கற்பனை அல்லது பொய்யான எதிர்பார்ப்பு. அது நடப்பதற்கான சாத்தியக்கூறு 90 சதவிகிதம் இருக்காது. திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்கிற  யூகத்தில் 10 சதவிகித பயத்தை, 90 சதவிகிதமாக ஊதிப் பெரிதாக்கி, மணவாழ்க்கையின் மகிழ்ச்சியைக் குலைத்துக் கொள்ள வேண்டாம்.

SHARE