கூட்டமைப்பை பதிவு செய்தால் தமிழரசுக் கட்சிக்கு ஆபத்து

155

 

 

தமிழரசுக் கட்சியில் தற்போது இருக்கக்கூடிய தலைவர்கள் TNAயை பதிவு செய்வதன் ஊடாக ஏற்படப்போகும் பிரச்சினைகள் பற்றி அறையில் இருந்து சிந்தித்துள்ளனர் எனலாம். காரணம் என்னவென்றால் தமிழரசுக்கட்சியினுடைய செல்வாக்கு இக்கட்சிகளை பதிவுசெய்வதன் ஊடாக அற்றுப்போகும் நிலைமை உருவாகும். அக்கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் தெரிவு செய்யப்படும் பொழுது பெரும்பான்மை வகிக்கக்கூடிய தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர்கள் நிர்வாகத்தில் இணைத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

ஆயுதப்போராட்டத்தின் வழியே வந்தவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப் பெற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலை ஏற்படும் என்கின்ற காரணத்தினாலும், அதிக அதிகாரங்கள் தம் கையை விட்டு நழுவிப்போகின்ற காரணத்தினாலும் இதுபோன்றதான பல நன்மை தீமைகளை தமிழரசுக் கட்சி இழக்கநேரிடும்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இவ்வாயுதக்குழுக்களை (ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி) குறிப்பிட்ட காலம் வரை ஓரங்கட்டி வைத்திருந்தன. காரணம் இவர்கள் தமிழ் மக்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் எதிராக இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டவர்கள். காலங்காலமாக இக்கருத்துக்கள் இருப்பதன் காரணமாக இவர்களையும் இணைத்து பதிவு செய்தால் வுNயுயிற்கு எதிராக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினுடைய கட்சி (தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி) முன்னிலைப்படுத்தப்பட்டுவிடும் என்கின்ற காரணமும் கூட.
வடகிழக்கில் செறிந்து வாழக்கூடிய தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியினுடைய கோட்பாடுகளையே ஆதரித்துவருகின்றனர். காலப்போக்கில் இவ்வாதரவுகள் அற்றுப்போகும்.

கூட்டமைப்பாக பதிவு செய்யப்படுமாயின் எந்தவொரு பிரச்சினைகளிலும் தீர்மானமெடுக்கப்படுமாயின் அக்கட்சியைப் பிரதிபலிக்கும் முக்கியஸ்தர்களை வரவழைத்தே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதனால் தமிழரசுக் கட்சி சுயமாக முடிவுகளை எடுத்து கள்ளத்தனமாக கூடி தீர்மானங்களை எடுக்கமுடியாத சூழ்நிலை உருவாகும்.
அரசாங்கத் தரப்பினைப் பொறுத்தவரையில் ஆயுதக் கலாசாரமற்ற அமைப்புக்களையே தற்பொழுது இணைத்துக்கொண்டுள்ளது. காலப்போக்கில் இவ்வாயுத கலாசாரத்தினை சார்ந்தவர்களை உள்ளடக்குவதனூடாக கட்சிக்குள் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டு கட்சியிலுள்ளவர்கள் அரசுடன் இணைந்து செயற்படும் ஆபத்தான சூழ்நிலை உருவாக்கப்படும்.

காலங்காலமாய் கட்டிக்காத்துவந்த தமிழரசுக்கட்சி சின்னாபின்னமாக உடைக்கப்பட்டு, தமிழ் மக்களுக்குரிய இலட்சனை இல்லாது அமைச்சுப் பதவிகளை மாத்திரம் பெற்றுக்கொண்டு அரசின் நிகழ்ச்சிநிரலுக்கேற்ப செயற்படும் ஆபத்து உருவாகும். இதிலொரு விடயம் என்னவென்றால் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை இரண்டிற்கும் அப்பாற்பட்டே தற்பொழுது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருக்கக்கூடிய தமிழரசுக் கட்சியினர் செயற்பட்டுவருகின்றனர். காரணம் என்னவெனில், ஆயுதமேந்திப் போராடி இதுவரையிலும் எந்தவொரு பிரதிபலிப்புக்களையும் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. தற்பொழுது அவைகளை சற்று மௌனித்துவிட்டு அஹிம்சை வழியிலான போராட்டங்களை ஆரம்பிப்பதன் ஊடாக தமிழ்மக்களுக்கேற்ற தீர்வினை பெற்றுக்கொள்ளமுடியும். அதனைக் கருத்திற்கொண்டே எமது நிகழ்ச்சி நிரல்கள் தற்பொழுது சென்றுகொண்டிருக்கின்றது.

எமது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கெதிராக 08 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. அதனைச் சீர்செய்யும் வகையிலும் எமது இராஜதந்திர நகர்வுகள் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளனர் அதேநேரம் தொடர்ந்து சில காரணங்களைப் பார்க்கின்றபொழுது சுமந்திரன், சம்பந்தன், மாவை சேனாதிராஜா தற்பொழுது மாகாணசபையில் இருக்கக்கூடிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், வைத்தியர் சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம் இன்னும் தமிழரசுக் கட்சிக்கு விசுவாசமாக செயற்படக்கூடியவர்களை இணைத்துக்கொண்டு, இவ் TNA கட்சியை பதிவுசெய்தால் தாம் கூறுவதற்கு தலையாட்டாதவர்கள் எதிர்ப்பலைகளை இதன் காரணமாக எழுப்புவார்கள். இதனால் கட்சியில் பல முரண்பாடுகள் ஏற்பட்டு கட்சி பலவீனமடையக்கூடும்.

முதலமைச்சரின் கருத்துத் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் தற்பொழுது இருக்கக்கூடியவரும் அதன் ஊடகப்பேச்சாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன், முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஒரு எச்சரிப்பின் செய்தியாக ஆயுதமேந்திப் போராடிய அமைப்புக்களை வன்முறையாளர்களாக விமர்சிப்பது மீண்டும் எம்மை இவ்வாயுத அமைப்புக்களை சீண்டிப் பார்க்கும் செயல் என்று பொருட்படவும் இவ்வாறான பேச்சுக்களை முதலமைச்சர் கூறுவது இதுவே இறுதித் தருணமாக இருக்கவேண்டும் என எச்சரித்ததோடு 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஆயுதங்களைக் களைந்துவிட்டு ஜனநாயக வழியில் இறங்கியிருக்கின்றோம்.

எங்கள் கட்சிகள் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளாக இருக்கின்றன. மேலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலகட்டத்தில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபொழுது எங்களையும் இணைத்துக்கொண்டே புலிகள் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். 30 வருடங்களுக்கு முன்னைய எங்கள் வழிகளைச் சுட்டிக்காட்டுவது நடைமுறைக்கும், ஜனநாயகத் தன்மைக்கும் முரணானதாகவே இருக்கின்றது. ஆயுதப்போராட்டம் தீண்டத்தகாததாகவும், அந்த வழியில் இருந்தவர்கள் தீண்டத்தகாதவர்களாகவும் அமையப்பெறுவதாகவே முதலமைச்சரின் கருத்துக்கள் அமையப்பெறுகின்றது.

முதலமைச்சர் ஒரு விடயத்தினை புரிந்துகொள்ளவேண்டும். ஆயுதப்போராட்டப் பாதையில் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள் உயிர்த்தியாகம் செய்ததன் பின்னரே தமிழகத்தில் மட்டுமல்ல சர்வதேசம் முழுவதும் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை தெரிந்துகொண்டது. கண்களை மூடி நீதிசொல்லும் முதலமைச்சர் சற்று சிந்திக்கவேண்டும் என்ற உண்மை உரைக்குமளவிற்கு சுரேஸ் பிரேமச்சந்திரனின் கருத்து அமையப்பெற்றுள்ளது. முதலமைச்சரின் கருத்தின்படி விடுதலைப்புலிகள் அமைப்பினைச் சார்ந்தவர்களும் இதன் கருத்தில் உள்ளடக்கப்படுகின்றார்கள்.

இவ்வாறான கருத்துக்களின் ஊடாக தமிழ்மக்கள் மத்தியில் எதிர்ப்பினைச் சம்பாதித்து முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுகின்றாரோ எனவும் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகின்றது. விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் மீண்டும் செயற்படுமாயின் முதலமைச்சரின் தலைக்கு ஆபத்தாக அமையும் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது. வரலாறுகளை புரட்டிப்பார்ப்பது முதலமைச்சருக்கு நல்லது. கூட்டமைப்பினை பதிவுசெய்வதன் ஊடாக இந்தியா தனது ஆதரவினை முழுமையான அளவில் செயற்படுத்தாத நிலை உருவாகும்.

அவ்வாறு ஒரு குடையின் கீழ் பதிவு செய்து ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு கூட்டமைப்பினர் செயற்படுவதற்கு ரெலோ, புளொட், ஈபி.ஆர்.எல்.எப் தவிர்ந்த ஏனைய தமிழ்க்கட்சிகள் முட்டுக்கட்டையாக அமையும் எனலாம். இவ்வாறான காரணங்களை பார்க்கின்றபொழுது கூட்டமைப்பை பதிவு செய்வதனால் தமிழரசுக் கட்சிக்கு ஆபத்து. அது தீமையை விளைவிக்கும் என்ற அடிப்படையில் அதனைப் பதிவு செய்யாமல் இழுத்தடிப்புச் செய்துகொண்டிருக்கின்றார்கள் எனலாம்.

 

 

SHARE