வெஸ்ட்இண்டீசிடம் தோல்வி: பேட்ஸ்மேன்கள் மீது டோனி பாய்ச்சல்

153

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்னில் மோசமாக தோற்றது.

முதலில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன் குவித்தது. சாமுவேல்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 116 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 126 ரன்னும், ராம்தின் 61 ரன்னும் எடுத்தனர்.

முகமது ஷமி 4 விக்கெட்டும், ஜடேஜா, அமித் மிஸ்ரா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் 41 ஓவரில் 197 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி 124 ரன்னில் மோசமாக தோற்றது.

தொடக்க வீரர் தவான் அதிகபட்சமாக 68 ரன்னும், ஜடேஜா 33 ரன்னும் எடுத்தனர். ராம்பால், சாமுவேல்ஸ், பிராவோ தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் தான் இருந்தது. எங்களது பேட்ஸ்மேன்கள் தான் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டனர். மோசமான பேட்டிங்கால் தோல்வி அடைந்தோம். இந்த ஆடுகளத்தில் 322 ரன் எடுக்கக் கூடிய இலக்கு தான்.

கடைசி சில ஓவர்களில் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப் படுத்தினர். இல்லையென்றால் வெஸ்ட் இண்டீஸ் இதைவிட அதிகமான ரன்களை குவித்து இருக்கும்.

வெஸ்ட்இண்டீஸ் அணி மிகவும் சிறப்பான நிலையில் உள்ளது. பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது.

இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

வெற்றி குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராவோ கூறும்போது, வீரர்களின் கூட்டு முயற்சியால் வெற்றி கிடைத்தது. குறிப்பாக சாமுவேல்ஸ் பேட்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. ராம்தின் அவருக்கு உறுதுணையாக இருந்தார். பவுலர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அடுத்தப் போட்டிக்கு லெண்டில் சிம்மன்ஸ் உடல் தகுதி பெறுவார் என்றார்.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் வெஸ்ட்இண்டீஸ் 1–0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2–வது போட்டி டெல்லியில் வருகிற 11–ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

SHARE