. அம்மா இல்லாம இங்கேயிருந்து கிளம்பமாட்டோம்!” என்று உணர்ச்சிவசப்பட்டார் கலையரசன்.

277
 kalaignar jayalalitha merina beach

கர்நாடகாவுக்கு சுற்றுலா வருபவர்கள் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் இப்போது பரப்பன அக்ரஹாராவும் சேர்ந்திருக்கிறது. ஜெயலலிதா அடைக்கப்பட்டிருக்கும் சிறையைப் பார்க்க வேண்டும்என்பதற்காக டிராவல்ஸ் பஸ்கள் பரப்பன அக்ரஹாரா பக்கம் ஒரு ரவுண்ட் வந்து திரும்புகிறது.

இங்கதான் அம்மாவை புடிச்சு வெச்சுருக்காங்க…” என்று சொல்லி பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் செல்லும் சாலையை வேடிக்கை பார்த்தபடியே டிராவல்ஸ் பஸ்ஸில் ஏறி கிளம்புகிறது ஒரு கூட்டம். தர்மபுரி பக்கமிருந்து மைசூருக்கு சுற்றுலா வந்த கிராமத்து மக்கள் அவர்கள். ஏதோ டூர் வந்த ஜெயலலிதாவை கர்நாடக அரசு பிடித்துவைத்துக் கொண்டதைப் போலவே அவர்களின் பேச்சும் எண்ணமும் இருந்தது.

என் தாயெனும் கோயிலை காக்க மறந்துட்ட பாவியடி கிளியே!

வடசென்னையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் கலையரசன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் நடைப்பயணமாகவே பரப்பன அக்ரஹாரா வந்து சேர்ந்தனர். ”நிறையப் பேரு கிளம்பினோம். ஆனால், எல்லோராலும் நடக்க முடியலை. பாதியிலேயே திரும்பிட்டாங்க. அம்மா இல்லாம இங்கேயிருந்து கிளம்பமாட்டோம்!” என்று உணர்ச்சிவசப்பட்டார் கலையரசன்.

பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வரும் அ.தி.மு.க நிர்வாகிகள் அங்குள்ள சிறைக் காவலர் குடியிருப்புப் பகுதியில்தான் காரை நிறுத்திவிட்டு காத்திருக்கிறார்கள். இந்தச் சமயத்தில் காரில் சப்தமாகப் பாடல்களை ஒலிக்கவிடுகின்றனர். ‘அம்மான்னா சும்மா இல்லடா… என் தாயெனும் கோயிலை காக்க மறந்துட்ட பாவியடி கிளியே…’ என அம்மா சென்டிமென்ட் பாடல்கள் காரில் சப்தமாக ஒலித்தபடியே உள்ளன. ”இந்தப் பாட்டு சத்தத்துல வீட்டுல இருக்கவே முடியலை!” என்று அங்கே குடியிருக்கும் பெண்கள் புகார் செய்ய… இப்போது கெடுபிடி இன்னும் அதிகமாகிவிட்டது.

சந்திர கிரகணத்துக்கு முன்பு….

சந்திர கிரகணத்துக்கு முன்பு எப்படியும் ஜாமீன் வாங்கிவிட வேண்டும்!’ என்று சொல்லி வந்திருக்கிறார் ஜெயலலிதா. கடந்த 7-ம் தேதி நிச்சயம் ஜாமீன் கிடைத்துவிடும் என மிகுந்த நம்பிக்கையோடு காத்திருந்தார்கள் சிறையில் உள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் நால்வரும். மதியமே அவர்களுக்கு பெயில் கிடைத்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது. 8-ம் தேதி சந்திர கிரகணம் என்பதால் எவ்வளவு நேரம் ஆனாலும் 7-ம் தேதி இரவே நம் வீட்டுக்கு சென்றுவிட வேண்டும் என்று முடிவு செய்து தயார் நிலையில் இருந்தார்கள். ஆனால், பெயில் கிடைக்கவில்லை என்றதும் நான்கு பேரும் ரொம்ப அப்செட் ஆகி விட்டார்கள். ஜாமீன் இல்லை என்ற தகவல் ஜெயலலிதாவை ரொம்பவே அப்செட் ஆக்கியதாகச் சொல்கிறார்கள். சந்திர கிரகணம் அன்று ஜெயலலிதா தன் அறையைவிட்டு வெளியே வரவே இல்லையாம். கிரகண நேரம் முடிந்ததும், குளித்து முடித்துவிட்டு சில மந்திரங்களை உச்சரித்துவிட்டுதான் இரவு உணவு எடுத்துக் கொண்டாராம்.

ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரா, ”ஊழல் என்பது மனித உரிமை மீறல், மனித சமுதாயத்துக்கு எதிரானது. நாட்டின் முன்னேற்றத்தை சீரழித்து விடும்” என்று குறிப்பிட்டதைத் திரும்பத் திரும்ப டி.வி-யில் பார்த்திருக்கிறார். அன்று யாரிடமும் பேசவில்லையாம். மாலை அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ‘ப்ரஷர் கொஞ்சம் அதிகமா இருக்கு. அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்!’ என்று சசிகலாவிடம் சொன்னார்களாம்.

தீபாவளிக்குள் அக்கா வீட்டுக்குப் போகணும்!

உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்காக ஜெயலலிதாவிடம் கையெழுத்து வாங்க வழக்கறிஞர்கள் சிறைக்குள் சென்றார்கள். அவர்களை சந்தித்தது சசிகலாதான்! வழக்கறிஞர்கள் கொண்டு வந்த பிரசாதங்களை வாங்கிக்கொண்டவர், வக்காலத்து பேப்பரையும் அவர்தான் வாங்கிக்கொண்டு போய் ஜெயலலிதாவிடம் கையெழுத்து வாங்கி வந்தாராம். ‘உச்ச நீதிமன்றத்திலும் சூழ்நிலை சரியில்லைன்னு அக்கா நினைக்கிறாங்க. எப்படியாவது முயற்சி செஞ்சு ஜாமீன் வாங்கிடுங்க. தீபாவளிக்குள்ள அக்கா வீட்டுக்குப் போகணும்!’ என்று வழக்கறிஞர்களிடம் கடுமையாகவே சொன்னாராம் சசிகலா.

சுதாகரனிடமும் கையெழுத்து வாங்க அவருடைய வழக்கறிஞர்கள் உள்ளே சென்றனர். அப்போது சுதாகரன், ”நான் ரொம்ப நல்லா இருக்கேன். எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. வீட்டுல இருந்ததைவிட இங்கேதான் நான் அமைதியாக தியானம் செய்றேன். எனக்கு பெயில் இல்லைன்னு சொன்னதைப் பத்தி எந்தக் கவலையும் இல்லை. ஆனால், அவங்களை நினைச்சாதான் பாவமா இருக்கு. எனக்கு பெயில் மறுத்தாலும் பரவாயில்லை. அவங்களை விரைவில் வெளிய விட்டுடணும்” என்றாராம். அவங்க என்று அவர் சொன்னது ஜெயலலிதாவை.

உள்ளே ஜெ… வெளியே வேலுமணி!

சிறைக்கு வெளியே காத்திருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் தினமும் மதியம் சிக்கன் பிரியாணியும், வெரைட்டி ரைஸும் அவைத்தலைவர் மதுசூதனன் காரில்தான் செல்கிறது. பெங்களூரில் உள்ள பிரபல அசைவ ஹோட்டல் ஒன்றிலிருந்து தினமும் சாப்பாடு கொண்டுவரும் பொறுப்பை அவரே கவனித்துக் கொள்கிறார். உள்ளாட்சி, சட்டம், நீதி மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் வேலுமணி ஒவ்வொரு நாளும் காலையில் தவறாமல் ஆஜராகிவிடுகிறார். மாலை வரை யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மரத்தடியில் உட்கார்ந்து விடுகிறார். அவருக்கும் மதிய உணவு அங்கேயே வருகிறது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட பிறகு பரப்பன அக்ரஹாராவுக்கு வரும் தொண்டர்கள் கூட்டம் ரொம்பவே குறைந்துவிட்டது. அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள்.

நாங்களும் பிரச்சினையை ஆரம்பித்தால்…

இந்த விவகாரத்தைத் தமிழர் – கன்னடர் பிரச்சினையாகத் திசை திருப்பும் முயற்சிகள் ஒருபக்கம் நடந்தன. தமிழகத்தில் கர்நாடக பேருந்துகளைத் தாக்குவதும், கன்னடர்களின் ஹோட்டல்களை அடித்து நொறுக்குவதும் அரங்கேறியது. இதனால் கர்நாடகத் தமிழர்களிடம் பதற்றம் உண்டானது. இந்தச் சூழ்நிலையில் கடந்த 8-ம் தேதி கன்னட ஜாக்குருதி வேதிகே அமைப்பை சேர்ந்த மஞ்சுநாத் தேவா, ”தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நட்பு உணர்வு உள்ளது. அதை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவை கர்நாடக அரசு கைது செய்யவில்லை. உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனி நீதிமன்றம்தான் தண்டனை வழங்கியிருக்கிறது. இதற்கும் கன்னடர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். நாங்களும் பிரச்சினையை ஆரம்பித்தால் அது கலவரமாகிவிடும்” என்று எச்சரித்துள்ளார்.

 

SHARE