தமிழ் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்: அனந்தி

97

 

யுத்தம் முடிவடைந்து சமாதானமும் நல்லிணக்கமும் ஏற்பட்டுள்ளது என கூறிக்கொள்ளும் இலங்கை அரசாங்கம், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வருடக்கணக்காக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனைகள் ஏதுமின்றி விடுதலை செய்யவேண்டும் என வடமாகாண சபை அனந்தி சசிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்

anandhi-cycle-717x480அனந்தி சசிதரனால் வியாழக்கிழமை (16) அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றியும் எந்தவொரு முன்னேற்றமும் இதுவரையில் காணப்படவில்லை. 1983இல் இருந்து இன்றுவரை சிறையில், தமிழ் இளைஞர்கள் மட்டும் படுகொலை செய்யப்பட்டும் துன்புறுத்தப்பட்டும் வருவது அனைவரும் அறிந்த விடயம். 

சிறையில் திடீர் திடீரென தமிழ் அரசியல் கைதிகள் மரணமடைவதும் அதற்காக அரச தரப்பினில் நியாயங்கள் கூறப்படுவதும் உண்மைகள் மறைக்கப்படுவதும் அடிக்கடி நடக்கின்ற விடயங்கள் ஆகும். 

இலங்கை தமிழரசுக் கட்சி மாநாட்டின் போதும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இன்று வரை எந்தவிதமான ஆக்கபூர்வமான பதிலும் கிட்டியிருக்கவில்லை. சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் படும் துன்பங்கள் நிறையவே. 

சட்டமும் நீதியும் இந்தநாட்டில் தமிழர்களுக்கு மட்டும் புதைகுழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டதா? மனிதம் மரணித்தபூமியில் நீதியையும் நியாயத்தையும் நாங்கள் எங்கே தேடமுடியும்? நரகம் என்ற ஒன்று இருப்பது என்றால் அது இலங்கையில் தமிழர்களுக்காக இருக்கும் சிறைக்கூடம் மட்டுமே என்பதே உண்மையாகும். 

போதிய உணவோ, மருத்துவமோ, சுகாதார வசதியோ, சட்ட உதவியோ இன்றி நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சிறையில் வாடுவதை நாம் அனைவரும் கண்டும் காணாது மௌனம் காப்பது மனவேதனையை அளிக்கிறது.

தமிழ் அரசியல் கைதிகள் பாரபட்சமாக சிறையில் அடைக்கப்படுவது, துன்புறுத்தப்படுவது, சித்திரவதை செய்யப்படுவதும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். 

சிங்கள கைதிகள், தமிழ் அரசியல் கைதிகளை அடிப்பது, துன்புறுத்துவது, நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் தமிழ் அரசியல் கைதிகள் சிறை காவலாளிகளால் துன்புறுத்தப்படுவதும் நிறுத்தப்பட வேண்டும்.

அத்துடன், காலவரையறை விதிக்கப்பட்டு சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களின் நல்லெண்ணத்தை இந்த அரசு பெற்றுக்கொள்ள வேண்டுமானால் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும்.

அவ்வாறில்லாமல் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் மக்களை அணி திரட்டி அகிம்சை வழி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி வரும் என்பதையும் தெரிவிப்பதோடு அனைத்து தமிழ் உறவுகளையும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு குரல் கொடுங்கள் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

SHARE