இலங்கைக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வு

124
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தனது இந்திய சுற்றுப்பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு நாடு திரும்பியதால், இலங்கை கிரிக்கெட் அணியை இந்தியாவில் விளையாட வருமாறு பி.சி.சி.ஐ. கேட்டுக்கொண்டது.

இதை ஏற்ற இலங்கை கிரிக்கெட் நிர்வாகம், இந்தியாவில் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட ஒப்புக்கொண்டது. இதனையடுத்து இன்று ஐதராபாத்தில் பி.சி.சி.ஐ தேர்வுக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல் மூன்று போட்டிகளில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மூன்று போட்டிகளிலும் இருந்து கேப்டன் தோனிக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அவருக்கு பதிலாக கோலி கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ள விர்திமான் சகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆல் ரவுண்டர் அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

அணி வீரர்கள் விவரம்: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், அஜிங்கியா ரகானே, சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, விர்திமான் சகா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, முரளி விஜய், வருண் ஆரோன், அக்சார் படேல்.

SHARE