ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விடுதலைப் புலிகள் விரைவில் பகிரங்கமாக அறிவிப்பார்கள்- ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பப்பட்ட ஈமெயில்

163

London-to-geneva-050314-seithy (4)விடுதலைப் புலி ஆதரவாளர்களால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பப்பட்ட ஈமெயில் ஒன்று தன்னிடம் சிக்கியுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் அரச ஊழியர்களுக்கு ஜனசெவன வீடமைப்புக் கடன் மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் விமல் வீரவங்ச மேற்கண்ட பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விடுதலைப் புலிகள் விரைவில் பகிரங்கமாக அறிவிப்பார்கள். அதற்கான மாநாடு ஒன்று மலேசியாவில் நடைபெற உள்ளது.

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர் சார்ள்ஸ் ஞானகோனின் சகோதரர் இதனை ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் படி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பான மின்னஞ்சல் கூட எங்களிடம் உள்ளது.

தற்போது ரணில் விக்கிரமசிங்கவும் சிங்கப்பூரில் சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளார். அவர் புலிகளின் மாநாட்டில் கலந்து கொள்வாரா என்பது குறித்து தெரியாது. ஆனாலும் அவருக்கு ஆதரவளிக்கவே சார்ள்ஸ் ஞானகோன் உள்ளிட்ட புலிகளின் ஆதரவாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதே சார்ள்ஸ் ஞானகோன் என்பவர் தான் சட்டவிரோதமான முறையில் ஐ.தே.க. வின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு பெருந்தொகைப் பணத்தை அனுப்பி வைத்த விவகாரத்துடன் தொடர்புடையவர்.

இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ள தொடர்பு குறித்து எல்லோரும் அறிந்தே வைத்திருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

SHARE