பிரபாகரன் பெயரை ஒரு நாளைக்கு நூறுமுறை உச்சரித்து, இந்த அரசின் ஆட்கள் பொய் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளார்கள் – பருப்பு இம்முறை வேகாது.

192

நானும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனும், கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் நீச்சலடித்து குளித்து ஜலக்கிரீடை செய்தோம் என கடந்த 2010ம் வருட ஜனாதிபதி தேர்தலின் போது நாடு முழுக்க சென்று பொய் பிரச்சாரம் செய்தவர்தான் விமல் வீரவன்ச.

wa1

அத்தகைய ஒரு சீடி குறுவெட்டு புலிகளின் அலுவலகத்தில் இருந்து இராணுவத்தால் கைப்பற்றபட்டது என்றும், அது தற்போது தன்வசம் இருக்கின்றது என்றும் அவர் அப்போது சொன்னார்  என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

அதன்பிறகு பாராளுமன்றத்தில் அவரை கண்டு நான் அந்த சீடி குறுவெட்டை எனக்கும் காட்டும்படி கேட்டேன். நான் எப்படி நீச்சல் அடித்தேன் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று அவரிடம் சொன்னேன்.

ஆனால், கடைசிவரை அப்படி ஒரு குறுவெட்டை எனக்கு அவர் காட்டவில்லை. அப்படி ஒரு சீடி இருக்குமானால், நான் அரசியலில் இருந்தே விலகி விடுகின்றேன் என நான் அதன்பிறகு பலமுறை கூறியுள்ளேன்.

இப்போதும் அதை நான் அவரிடம் கேட்கின்றேன். ஆனால், இதுவரையில் விமல் வீரவன்ச எனக்கு அந்த சீடியை காட்டவில்லை. இவர் ஒரு பொய்யர்.

கீழ்த்தரமான அரசியல் தேவைகளுக்காக, புனையப்பட்ட கதைகளை பகிரங்கமாக வெட்கமில்லாமல் சொல்கின்றவர். தான் ஒரு கேவலமான பொய்க்காரன் இல்லை என்றால் அவர் இப்போதாவது அந்த சீடியை எனக்கும், நாட்டு மக்களுக்கும் காட்ட வேண்டும். இப்போதும் நான் அவருக்கு சவால் விடுக்கிறேன்.

அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து இருந்தால் நான் அதை பகிரங்கமாக சொல்வேன். ஆனால் அப்படி சம்பவம் ஒருபோதும் நிகழவில்லை என்பது எனக்கு தெரியும்.

இப்போது இதே விமல் வீரவன்சதான், இந்த ஆட்சியின் சார்பாக, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புலிக்கதைகளை அவிழ்த்துவிட்டு பொய் சொல்லும் பணியை தலைமை தாங்கி நடத்த நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த பொய்யரின் கதைகளை நம்பி ஏமாற இந்தமுறை சிங்கள மக்கள் தயாராக இல்லை.

இன்று இந்த அரசாங்கத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவராக, புலிகளின் தலைவர் பிரபாகரன் மாறியுள்ளார் என்று தோன்றுகிறது. அவரது பெயரை ஒரு நாளைக்கு நூறுமுறை உச்சரித்து, இந்த அரசின் ஆட்கள் பொய் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் நீதிமன்ற இடைக்கால தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் புலிகளின் மீதான தடை நீக்கப்படவில்லை. 28 நாடுகளை கொண்ட இந்த ஒன்றிய உறுப்பு நாடுகளை புலித்தடை தொடர்பாக ஆவணங்களை முன்வைக்கும்படி நீதிமன்றம் கோரியுள்ளது.

இதை வைத்து கொண்டுதான் இவர்கள் இங்கே இப்போது அரசியல் செய்கிறார்கள். இந்த தீர்ப்புக்கும், எதிர்க்கட்சிகளுக்கும், ரணில் விக்கரமசிங்கவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள். இப்படி பொய்களை உருவாக்கி சொல்லும் குழுவின் தலைவர்தான் விமல் வீரவன்ச.

இதற்கு ஒரு காரணம் உள்ளது. இந்த ஆட்சி தேர்தலில் மக்கள் முன்னால் சென்று, நல்லாட்சியை பற்றியோ, மனித உரிமைகளை பற்றியோ, ஊடக சுதந்திரத்தை பற்றியோ, ஊழல் ஒழிப்பு பற்றியோ பேச முடியாது. இவர்களிடம் எஞ்சி இருப்பதெல்லாம், புனையப்பட்ட புலிக்கதைகள் மாத்திரமே.

ஆகவேதான், இன்று இந்த அரசாங்கத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவராக, புலிகளின் தலைவர் பிரபாகரன் மாறியுள்ளார் என்று கூறுகிறேன். ஆனால், இந்த முறை இந்த புலி பருப்பு வேகாது.

SHARE