10ஆவது வரவு – செலவுத்திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

103

 

download மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் எதிர்வரும் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த வரவு – செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை 2015 ஜனவரியில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ள மஹிந்த அரசு, அத்தேர்தலை வெல்வதற்கான வியூகங்களுடன், 2015ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை முற்கூட்டியே சமர்ப்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இன்றைய வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு 2ஆயிரத்து 500 ரூபா வரையிலான அளவில் சம்பள உயர்வு கிடைக்கும் என்று தகலவ்கள் தெரிவித்தன. குறிப்பாக அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்திலும் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவிலும் அதிகரிப்புக்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் தனியார் துறைக்கும் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு யோசனை முன்வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, ஓய்வூதியம் பெறுகின்றவர்களுக்குமான கொடுப்பனவும் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் பல்வேறு சேவைக் கட்டணங்களும் குறைக்கப்படலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அடுத்த வருட ஜனாதிபதித் தேர்தலுக்கான மஹிந்த அரசின் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் பல நிவாரணங்கள் பொது மக்களுக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது. எனினும், வழமைபோன்று இந்த வரவு – செலவுத் திட்டத்திலும் பாதுகாப்பு செலவீனங்களுக்கு அரசால் அதிக நிதி ஒதுக்கப்படும் என்று புத்திஜீவிகளும், எதிர்க்கட்சியினரும் கருத்து வெளியிட்டுள்ளனர். இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 10ஆவது வரவு – செலவுத்திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

budget-2015

SHARE