2015ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம்: பாதுகாப்பு செலவீனம் குறைப்பு- 10வது வரவு செலவுத்திட்டம்

117

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2015ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, தற்போது அதன் மீதான வாசிப்பை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்.

இது இலங்கையின் 69 வது வரவு செலவுத் திட்டம் என்பதோடு, நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்படும் 10வது வரவு செலவுத்திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரவு செலவுத் திட்ட வாசிப்பின்போது,

சுற்றுலா மற்றும் முதலீடுகளின் அபிவிருத்திகளினால் பொருளாதாரம் 8 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், 5.5 சதவீதமாக இருந்த பாதுகாப்பு செலவீனங்களை 3 சதவீதமாகக் குறைத்து அதனை உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துடன் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்வருமாறு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு, நான் மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன் என இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவிய தீவிரவாதத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையே தவிர குறிப்பிட்ட ஒரு இனத்திற்கு எதிரான நடவடிக்கை அல்ல எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

மேலும் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மாணவர்கள் 25,000 பேருக்கு விடுதி வசதிகளை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நடப்பு வருடத்தில் ஏற்றுமதி வருவாய் 11,500 மில்லியன் அமெரிக்க டொலரை தாண்டவுள்ளதாகவும், இலவச சுகாதார சேவை செலவீனங்களுக்காக 150 பில்லியன் ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 18 -30 வயதுக்கு இடைப்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை 15 சதவீதத்திலிருந்து 13.1சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் கிராமப் புறங்களில் கடமைபுரியும் அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு 100,000 மோட்டார் சைக்கிள்கள் வழங்கியுள்ளதோடு, நாடளாவிய ரீதியில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருவதாகவும், விடுதலைப் புலிகள் அழித்த பொதுமக்களின் வீடுகளில் 100,000 வீடுகளை மீண்டும் கட்டிக்கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், குடியிருப்புகளுக்கான நீர் வழங்கள் திட்டத்தில், முதல் 25 அலகுகளுக்கு அறவிடும் கட்டணத்தை 10 வீதத்தால் குறைக்கவுள்ளதாகம் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விசேட வரி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், சினோ சூதாட்ட விடுதிக்குள் பிரவேசிப்பதற்கான கட்டணமாக ஒருவருக்கு தலா 100 அமெரிக்க டொலர்களை அறவிட தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனிநபர் வருமானத்தை 2015ம் ஆண்டில் 4000 அமெரிக்க டொலராகவும் 2020இல் 7500 அமெரிக்க டொலராகவும் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரமானியமான 350 ரூபா தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும், ஒரு கிலோ நெல்வின் உத்தரவாத விலையை 34இல் இருந்து 40 ஆக உயர்த்த எதிர்பார்த்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் பால் மாவின் விலையை 100 ரூபாவால் குறைக்கவும், யோகட்டின் விலையை 3 ரூபாவால் குறைக்கவும் அவர் இதன்போது யோசனை முன்வைத்தார்.

மேலும் பசும்பாலை 60 ரூபா வரை விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.

ரயில்வே ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கென 2,000 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்படவுள்ளதாகவும், கடன் வாங்குவது குறைக்கப்படுமென்றும் வரவு – செலவுத் திட்ட பற்றாக்குறை 2017ஆம் ஆண்டு 3 வீதம் குறையுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அடுத்த வருட திட்டங்களில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். 2015ம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டில் அனைத்து அதிவேகப் பாதைகளின் நிர்மாணப் பணிகளும் முற்றுப் பெற்றிருக்கும் என்று வரவுசெலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் கதிர்காமம் வரையான புகையிரதப் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அடுத்த வருட இறுதிக்குள் இது சாத்தியப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தற்போது மாத்தறை வரையுள்ள புகையிரதப் பாதை கதிர்காமம் வரை நீடிப்பதற்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாவும், ஆயுர்வேத வைத்தியர்களுக்கு 5000 ரூபாவும் விஷேட கொடுப்பனவும், சிறுநீரக பாதிப்புள்ள நோயாளர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபா வழங்கவுள்ளதாவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பல்கலைக்கழகத்திற்குச் செல்ல முடியாத மிக குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு 50ஆயிரம் ரூபா புலமைப்பரிசில், மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு மாதாந்தம் 4ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதன்படி ஏற்கனவே கொடுக்கப்பட்ட தொகையுடன் 1500 ரூபாவினால் மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமுல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

வற் வரியை 11 வீதமாக குறைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். மேலும் நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளின் வைத்தியப் பரிசோதனைகளுக்காக 500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் முதியவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு 2015 ஜனவரி முதல் 1000த்தில் இருந்து 2000 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

வெளிநாட்டில் பணி புரியும் இலங்கையர்களுக்கு விசேட ஓய்வூதியத்திட்டம் ஒன்றை வழங்கவும் இதன்போது ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 3000 ரூபாய் வழங்கப்படவுள்ளதுடன், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவாக மாதாந்தம் 750 ரூபாய் வழங்கப்படும் எனவும், இலங்கையிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்தும், விசேட நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரச சேவையாளர்களுக்கு தகுதி அடிப்படையில் 2500 ரூபா முதல் 10000 ரூபாவரை சம்பள அதிகரிப்பை எதிர்வரும் ஜனவரி முதல் மேற்கொள்வதாக ஜனாதிபதி அறிவித்தார்.

இராணுவம் மற்றும்  பொலிஸ் சேவையில் பணிபுரிவோரின்  பெற்றோருக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 1,000 ரூபாவை எதிர்வரும் 2015 இலிருந்து வழங்குவதாகவும், முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் காப்புறுதித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

SHARE