வித்தியாவை எவ்வாறு கடத்திப் படுகொலை செய்தனர்? அதிர்ச்சி தகவல்!!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு யாழ் மேல் நீதிமன்றில் ட்ரியல் அட் பார் முறையில் நடந்துவரும் நிலையில் வழக்கின் முக்கிய திருப்புமுனையாக ஐந்தாம் இலக்க சாட்சியாளரின் வாக்குமூலம் பதிவாகியுள்ளது.

இதன்படி நேற்றுக் காலை 9.30க்கு ஆரம்பமான விசாரணைகளின்போது அரச தரப்பு சாட்சியாளராக ஐந்தாம் இலக்க சாட்சியாளரான நடராசா குகனேசன் சாட்சியமளித்துள்ளார்.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மேற்படி சாட்சியாளரிடம், மாணவி வித்தியாவிற்கு காதல் தொடர்பு இருந்ததா? என வினவியுள்ளார்.

அதற்கு குறிப்பிட்ட சாட்சியாளர் பதிலளிக்கையில், “புங்குடுதீவு பிரதேச சபையில் சாரதியாக பணியாற்றிய பெரியதம்பி என்றழைக்கப்படும் உசாந்தன் என்ற 5ஆம் இலக்க சந்தேகநபரே வித்தியாவை ஒருதலைப்பட்சமாக காதலித்துள்ளார்” என்றார்.

இங்கு மேலும் குறிப்பிட்ட சாட்சியாளர்,

பெரியதம்பியின் விருப்பத்தை வித்தியா தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். வித்தியா பாடசாலைக்கு செல்லும் போதும் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் போதும் பெரியதம்பி மோட்டார் சைக்கிளில் பின் தொடர்வார். அவருடன் நானும் சென்று வந்துள்ளேன்.

அந்தச் சம்பவம் நடப்பதற்கு ஒன்றரை மாதத்திற்கு முன்னதாக ஒரு சந்தர்ப்பத்தில், வித்தியா தனது பாதணியைக் கழற்றி பெரியதம்பியை நோக்கி எறிந்தார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து பெரியதம்பி என்னையும் அழைத்துக்கொண்டு வித்தியாவின் வீட்டுக்கு சென்று வீட்டில் எவரும் இருக்காததால் திரும்பி வந்துவிட்டோம்.

பெரியதம்பி கள்ளுக் குடிப்பதற்காக வழமையாக ஒரு இடத்திற்கு செல்வார், அவருடன் நானும் அங்கு செல்லும் பழக்கத்தை கொண்டிருந்தேன்.

ஒரு நாள் அங்கிருந்த ரவி என்பவரிடம் வித்தியா மீதான தனது காதல் தொடர்பில் பெரியதம்பி கூறியபோது உதவிகள் தேவைப்படின் தம்மால் செய்ய முடியும் என ரவி குறிப்பிட்டார்.

அதாவது, மாணவி வித்தியாவைக் கடத்தித்தர முடியும் எனவும் அதற்கு 20 ஆயிரம் ரூபா முதல் 23 ஆயிரம் ரூபா வரை செலவாகலாம் என ரவி என்பவர் கூறினார்.

ஆனாலும் அந்த் நேரத்தில் பணப்பரிமாற்றம் இடம்பெறவில்லை, சம்பளம் கிடைத்ததும் பணம் வழங்குவதாக பெரியதம்பி குறிப்பிட்டார்.

என்று நீதிமன்றத்தில், குறிப்பிட்ட சாட்சியாளர் நடராசா குகனேசன் சாட்சியம் அளித்துள்ளார்.”

தொடர்ந்தும் மேலதிக சாட்சியங்களைக் கூறினால் வீட்டில் தனியாக இருக்கும் தனது தாய் மற்றும் தங்கையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகலாம் என அவர் தெரிவித்ததையடுத்து, தாம் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள் மூவரும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுடன் சுமார் 10 நிமிடங்கள் கலந்துரையாடினர்.

பின்னர் மன்றிலிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் சாட்சியம் பதிவு செய்யப்படும் வரை நீதிமன்றத்திலிருந்து வெளியேற வேண்டும் என பணிக்கப்பட்டதன் பின்னர் மூடிய மன்றில் அவர் சாட்சியம் வழங்கினார்.

அவர் வழங்கிய மேலதிக சாட்சியானது அதிர்ச்சிதரும் விடயமாக காணப்பட்டது.

அன்றைய நாட்களில் 12ம் திகதி எனது வீட்டிற்கு வந்த சந்திரகாசனும் பெரியதம்பியும் வித்தியாவுடன் கல்யாணம் பற்றிப் பேச வேண்டும் என்று கூறி என்னைக் கூட்டிச் சென்றார்கள்.

ஆனால் அன்று வித்தியாவுடன் இன்னுமொருவர் வந்ததால் எதுவும் பேசவில்லை. அடுத்த நாள் வித்தியா பாடசாலை செல்லும் பாதையான சின்ன ஆலடிப் பகுதிக்குச் சென்றோம்.

அதன்பின்னர் அவர்கள் என்னைப் பற்றைக்குள் ஒளிந்திருந்து நடப்பவற்றைப் பார்க்குமாறு கூறினார்கள்.

அந்த நேரத்தில் ரவி என்பவரும் தவக்குமார் என்பவரும் வந்து சேர்ந்தார்கள். சைக்கிள் ஓடிக்கொண்டு வந்த வித்தியாவை சந்திரகாசனும் பெரியதம்பியும் வழிமறித்தார்கள்.

உடனே வித்தியாவைத் தூக்கி பற்றைக்குள் கொண்டு சென்று ஆடைகளைக் கழற்றினார்கள்.

அப்போது வித்தியா அணிந்திருந்த கண்ணாடியை பெரியதம்பி கழற்றினான். ”நான் உன்னைக் காதலிக்கிறேன், உனக்கு விருப்பமில்லையா?” என்று அவன் வித்தியாவைப் பார்த்துக் கேட்டதும் வித்தியா உடனே அழுது கத்தத் தொடங்கினாள்.

உடனடியாக அவளது வாயைப் பொத்தி தூக்கிச் சென்ற பெரியதம்பியும் சந்திரகாசனும் மாறிமாறி வன்புணர்வு மேற்கொண்டார்கள். இந்த நேரத்தில் சுரேஷ் என்பவன் வித்தியாவின் சைக்கிளைத் தூக்கிச் சென்றான்.

அதன்பின்னர், சந்திரகாசன், பெரியதம்பி, செந்தில், ரவி, ஆகியோர் வித்தியாவை பாழடைந்த வீட்டிற்குள் தூக்கிச் செல்லும்போது நான் கத்திக் கொண்டு வெளியே வந்தேன்.

உடனே பெரியதம்பி கத்தியைக் காட்டி என்னை மிரட்டினான். அவள் அணிந்திருந்த ஆடைகள், சப்பாத்து அனைத்தும் வெள்ளை நிறத்திலானவை.

பள்ளிக்கூடப் பிள்ளையடா, விடுங்கோடா என கேட்டேன். அவர்கள் நான்கு பேரும் அவளை வன்புணர்ந்தார்கள்.

வித்தியா அப்போது படுத்த நிலையிலேயே இருந்தாலும் சத்தம் எதுவும் போடவில்லை. கை, கால்களை பெரியதம்பி, சந்திரகாசன் ஆகியோர் பிடித்திருந்தார்கள்.

பெரியதம்பியும், அடுத்து சந்திரகாசனும் அதற்கடுத்து செந்திலும் என மாறி மாறி வன்புணர்ந்தார்கள்.

அப்போது அவள் மயங்கிப்போனாள். சந்திரகாசனும் பெரியதம்பியும் அவளை டச் போனில் வீடியோ படம் எடுத்தார்கள்.

அந்த வீடியோவை சுவிஸ்குமார் என்பவர் சுவிஸ் நாட்டிற்கு கொண்டு போகப் போவதாக கதைத்தார்.

அதன் பின்பு அவளைத் தூக்கிக்கொண்டு சென்று ஐம்பது மீட்டர் தூரத்தில் இருந்த அலரி மரத்தில் கட்டினார்கள்.

பிறகு நான் எட்டரை மணிபோல கள்ளுச் சீவச் சென்றுவிட்டேன். பின்னர் ஒன்பதேகால் மணி அப்பிடி பெரியதம்பி, சந்திரகாசன், சுரேஸ் மூன்றுபேரும் எனது வீட்டிற்கு வந்து கள்ளு வாங்கிக் குடித்தார்கள்.

மாலையும் வந்து கள்ளுக் கேட்டார்கள். நான் சீவப் போகவில்லை என்பதால் கள்ளு இல்லை என்றேன்.

பயம் காரணமாக நான் இதுபற்றி யாரிடமும் கூறவில்லை. பெரியதம்பியோட சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் காசுக்காரர்கள்.

அதைவிட பொலிஸில் செல்வாக்குள்ளவர்கள் என்பதனால் பயந்து யாரிடமும் சொல்லாது மறைத்தேன்.

அடுத்த நாள் நான் வித்தியா இறந்து கிடந்த இடத்திற்கு சென்றேன். அங்கே பொலிஸாரும் சம்பந்தப்பட்டவர்களும் நின்றிருந்தார்கள்.

பெரியதம்பியும் சுவிஸ்குமாரும் மச்சான்மார். வீடியோ படத்தை சுவிஸ்குமாரிடம் கொடுத்ததாக பெரியதம்பி என்னிடம் சொன்னார்.

அதைவிட சுவிஸ்குமாரை எனக்கு யாரென்றே தெரியாது, சுரேஸ்கரனே எனக்கு அவரை அறிமுகப்படுத்தினார். என்று சாட்சியமளித்த நடராசா குகனேசன்,

வழக்கின் எதிரிகளான பெரியதம்பி எனப்படும் துஷாந்தன், சந்திரகாசன், செந்தில் எனப்படும் தவக்குமார், ரவி எனப்படும் ஜெயக்குமார், சுரேஷ்கரன், சுவிஸ்குமார் எனப்படும் சசிக்குமார், சசிதரன், குகநாதன் எனப்படும் நிஷாந்தன், கோகிலன் எனப்படும் கண்ணன் என ஒவ்வொருவரையும் தனித்தனியாக அடையாளம் காட்டினார். அதனையடுத்து வித்தியாவின் துவிச்சக்கரவண்டியையும் அடையாளம் காட்டினார்.