ஏமாற்றப்பட்ட இரணைதீவு மக்கள் பொய்த்துப்போன இராஜாங்க அமைச்சரின் உறுதிமொழி

பொய் வாக்குறுதிகளைக் கூறி அரசாங்கம் தம்மை ஏமாற்றி வருவதாக கிளிநொச்சி இரணைதீவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இரண்டு வாரங்களுக்குள் காணிகள் விடுவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், 19 நாட்களை கடந்த போதும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், பூர்வீக இடத்திற்குச் சென்று குடியேறவும், அங்கு தங்கியிருந்து தொழில் புரியவும் அனுமதிக்குமாறு வலியுறுத்தி இரணைதீவு மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் இரணைதீவு மக்களை கடந்த ஜுன் மாதம் 28ம் திகதி சந்தித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியுடன் பேசி தீர்வினைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்தார்.

எனினும், இதுவரை இரணைதீவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் எந்தவித தீர்வும் எட்டப்படாத நிலையில், போராட்டம் 70 நாட்களை கடந்தும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் வார்த்தைகள் எல்லாம் பொய் வாக்குறுதிகளாகவே காணப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரணைதீவு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1992ம் ஆண்டு இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், முழங்காவில் இரணை மாதா நகரில் வாழ்ந்து வருகின்றனர்.

2009ம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் மக்கள் பலர் சொந்த நிலங்களில் மீள்குடியேறிய போதிலும் இரணைதீவு மக்களின் காணிகள் இன்றுவரை விடுவிக்கப்படாது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதன் பின்னர் தமது வாழ்வாதாரமான கடற்தொழிலை மேற்கொள்வதற்கும் தமது பூர்வீக நிலத்தில் சென்று குடியேற வேண்டும் என வலியுறுத்தியும் இரணைதீவு மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

கிராம மட்டத்திலும் பூநகரிப் பிரதேச செயலகம், கிளிநொச்சி மாவட்டச் செயலகம் என்பவற்றில் நடைபெற்ற கூட்டங்களில் பூர்வீக நிலத்திற்குச் செல்வதற்கு அனுமதிக்குமாறு தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இரணைதீவிற்குச் செல்வது என இணைத் தலைவர்களால் முடிவுகள் எடுக்கப்பட்டன.

இருப்பினும் இதற்கு கடற்படை அனுமதிக்கவில்லை என காரணம் கூறப்பட்ட போதும், சில அரசியல்வாதிகள் இரணைதீவிற்குச் சென்றதுடன், மக்களிற்கும் இரணைதீவிற்குச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தனர்.

இதுவரை தமது சொந்த இடத்திற்கு சென்று வாழ்வதற்கான அனுமதி கிடைக்காத நிலையில், மக்கள் தமது போராட்டத்தைக் கைவிடாது தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி..

இராஜாங்க அமைச்சருடன் கிளிநொச்சிக்கு படையெடுத்த அரசியல் முக்கியஸ்தர்கள்

இரணைதீவு மக்களுக்கு உறுதியளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்