செட்டப் பொக்ஸ்கள் பற்றிய சில உண்மைகள்!

தொலைக்காட்சிகளில் TV, HD, HDMI, USB, MULTI MEDIA, VIDEO GAME, WIFI, INTERNET என்று வித விதமான இணைப்புக்கள் வந்துவிட்டன. D2H என்கிற செயற்கைக்கோள் ஒளிபரப்புக்குப் பயன்படும் செட்- டப் பொக்ஸுகளும் கையடக்க அளவில் நவீன வசதிகளுடன் வந்துவிட்டன. ஆனால் கேபிள், செட்- டப் பொக்ஸ், டிஷ் அண்டனா என இதில் ஒரு சிறு பிரச்சினை என்றாலும் அவற்றை எப்படிச் சரி செய்வதெனத் தெரியாமல் இருப்பவர்கள் நம்மில் ஏராளம். தொழில்நுட்ப தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் இன்றைய தலைமுறையில் கூட ஒளிபரப்பு தடைபட்டால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள்.

டிவியில் ஒளிபரப்பு இல்லை என்றதும் நுகர்வோர் குறை தீர்ப்பு மையங்களுக்குப் போன் செய்வதைத் தவிர்த்து, முதலில் டிவியின் இணைப்பு சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அண்டனாவில் இருந்து வருகிற கேபிள் சரியாக இருக்கிறதா எனப் பார்ப்பது முக்கியம். காரணம் எலி கடித்து விட வாய்ப்பிருக்கிறது.

குடை வடிவத்தில் இருக்கும் டிஷ் அண்டனா பயன்படுத்துபவர்களின் முக்கியப் பிரச்சினையே அலைவரிசை மாறி விடுவதுதான். காற்றிலோ, பறவைகளின் அசைவிலோ கூட அலைவரிசை மாறிவிட வாய்ப்பிருக்கிறது. சேமித்து வைக்கப்பட்டிருக்கிற அலைவரிசைகளில் ஒரு புள்ளி மாறினாலும் கூட 200 அலைவரிசைகளில் ஐம்பது அலைவரிசைகளை எடுக்காமல் போக வாய்ப்பிருக்கிறது.

அண்டனாவை வாங்கும் போதே எந்தப் பாதிப்பும் வராத இடத்தில் பொருத்துவதே சிறந்தது. அண்டனா சார்ந்த பிரச்சினை எனத் தெரியவந்தால் தொழிநுட்ப உதவியாளரை அணுகுவதே சிறந்தது.

மழை நேரங்களில் செட்டிலைட் ஒளிபரப்பில் சிறிது தடங்கல் இருப்பது உண்மைதான். டிவியில் படம் வரவில்லை என்று செட்- டப் பொக்ஸை ஓஃப் செய்து மீண்டும் ஒன் செய்வது, கேபிள் வயரைத் துண்டித்து மீண்டும் இணைப்பது எல்லாம் செய்யக் கூடாத விஷயங்கள். சேவை வழங்கும் நிறுவனங்களைப் பொறுத்து ERROR CODE எண்கள் மாறுபடும். செட்- டப் பொக்ஸ் ERROR E 48-32 எனக் காட்டுகிறது என வைத்துக் கொள்வோம்.

பொக்ஸை ஓஃப் செய்துவிட்டு ஸ்மார்ட் கார்டை வெளியே எடுத்து ஒரு முறை துடைத்து மீண்டும் செலுத்தி ஒன் செய்தால் பிரச்சினை சரியாக வாய்ப்பிருக்கிறது. அப்படியும் சரியாகவில்லை என்றால் செட்- டப் பொக்ஸை ரீசெட் செய்து ஒட்டோ ஸ்கேன் செய்தால் பிரச்சினை சரியாக வாய்ப்பிருக்கிறது. எல்லா நிறுவன செட்- டப் பொக்ஸ்களிலும் பாஸ்வேர்ட் என்பது 0000 அல்லது 1234 ஆகத்தான் இருக்கும். அப்போதும் பிரச்சினை சரியாகவில்லையெனில் கஷ்டமர் கேயாரைத் தொடர்பு கொள்ளுங்கள். மழை நேரங்களில் கேபிள் வயர்களில் குறைந்த அழுத்த மின்சாரம் பாயவும் வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

செட் டாப் பொக்ஸ்

கேபிள் வயர் வழியாக செட்- டப் பொக்ஸ்க்குள் தண்ணீர் போக வாய்ப்பிருக்கிறது. அப்படித் தண்ணீர் போக நேர்ந்தால் பொக்ஸ் பழுதாகிவிடும். அப்படியான நேரங்களில் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் பழைய பொக்ஸை பெற்றுக் கொண்டு புதிய பொக்ஸை மாற்றித் தருகிறார்கள். கடையில் புது பொக்ஸ் வாங்கிக் கொள்கிறேன் என்பவர்கள் ஒரு நிமிடம் கவனிக்கவும். உங்களின் ஸ்மார்ட் கார்ட் எண் உங்களின் செட்- டப் பொக்ஸ் எண்ணோடு இணைக்கப்பட்டிருக்கும்.

பொக்ஸ் பழுதானால் நிறுவனங்களே புதிய பொக்ஸை பழைய ஸ்மார்ட் கார்டோடு இணைத்துத் தருகிறார்கள். அப்படியான பிரச்சினைகளைச் சரி செய்வதற்கு சில D2H நிறுவனங்கள் அந்த வேலையைச் சில தனியார் முகவர்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். முகவர்கள் வேலை செய்கிற சிலர் செட்- டப் பொக்ஸ் பிரச்சினை எனச் சொல்லி பொக்ஸ் வாங்கி போகவும் வாய்ப்பிருக்கிறது. அப்படிப் போகிற பொக்ஸ் திருப்பித் தர கால தாமதமாகலாம். பொக்ஸில் ஏதேனும் பிரச்சினை என்றால் நீங்களாகவே சேவீஸ் செண்டர்களுக்குக் கொண்டு செல்வதுதான் நல்லது. இல்லையெனில் வீண் மன உளைச்சல்களுக்கு ஆளாகவும் வாய்ப்பிருக்கிறது.