சரித்திர சாதனைக்கு மீண்டும் தயாராகும் ஜிம்பாப்வே. 262 ஓட்டங்கள் முன்னிலை

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா சோலோவாக அசத்த அந்த அணி வலுவான நிலையில் உள்ளது.

இலங்கை வந்துள்ள ஜிம்பாப்வே அணி 5 ஒருநாள், ஒரே ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் ஒருநாள் தொடரில் மிரட்டிய ஜிம்பாப்வே அணி, 3-2 என தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடக்கிறது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 293 ஓட்டங்கள் எடுத்து 63 ஓட்டங்கள் பிந்தங்கியிருந்தது.

இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி, கூடுதலாக 53 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், 346 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. ஜிம்பாப்வே அணி சார்பில் கிரீமர் அதிகபட்சமாக 5 விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு வழக்கம் போல டாப் ஆர்டர் வீரர்களான மசகாட்சா (7), சக்கபாவா (6), முசகாண்டா (0), எர்வின் (5) சொதப்பினர். வில்லியம்ஸ் (22) ஏமாற்றினார்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அசராமல் இலங்கை பந்துவீச்சை ராசா பதம் பார்த்தார். இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த மூர் 40 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். பின் வந்த வாலர் துணையுடன் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ராசா, அரைசதம் கடந்தார்.

வாலரும் அரைசதம் கடக்க, இந்த ஜோடியை பிரிக்க, இலங்கை பந்து வீச்சாளர்கள் மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் வீணானது.

மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்சில், 6 விக்கெட்டுக்கு, 252 ஓட்டங்கள் எடுத்து 262 ஓட்டங்கள் என்ற வலுவான முன்னிலையில் உள்ளது.

நாளைய நான்காவது நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளை வரை தாக்குப்பிடித்து விளையாடினால் 350 ஓட்டங்களை தொட வாய்ப்புள்ளது. அப்படி 350 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றுவிட்டால் மற்றொரு சரித்திர சாதனைப் படைக்க அந்த அணி தயாராகிவிடும்.

இலங்கை அணி சார்பில் ஹெராத் அதிகபட்சமாக 4 விக்கெட் கைப்பற்றினார்.