2015ம் வருடத்துக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் இன்று (29.10.2014) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆற்றிய உரையின் முழுவிவரம்.  

91

சிறீலங்கா நாடாளுமன்றத்தில் இன்று (29.10.2014) நடைபெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரது உரையின் முழுவிவரம். 

வணக்கம்!
ஜனாதிபதியும், நிதி அமைச்சருமாகிய மகிந்த ராஜபக்ஸ அவர்கள், பத்தாவது தடவையாக வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார். நானும் பத்து வருடங்களுக்கு மேலாக இந்த கௌரவமிக்க சபையில் அங்கம் வகிக்கின்றேன்.
 
உண்மையில் எந்த மக்களின் பிரதிநிதியாக இந்த சபைக்கு வருகை தந்துள்ளேனோ, அந்த மக்களுக்கு இந்த வரவு செலவு திட்டத்தால் எவ்வித  நன்மையும் கிடைத்து விடப்போவதில்லை. இதற்கு முன்னரும் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டங்களினால், எதுவித அதிசயமும் நிகழ்ந்து விடவில்லை.   
 
தமிழ் மக்கள் மீதான வன்முறைத்தாக்குதல்களை மிகத்தீவிரமாக கட்டவிழ்த்து விட்ட சிறீலங்கா அரசு, 2009ஆம் வருடம் மிகப்பெரிய மனிதப்பேரவலத்துடன் யுத்தத்தை முடிவுறுத்தியுள்ளது. மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனிதகுலப்படுகொலைகளுடன் முடிவுறுத்தப்பட்டிருக்கும் கொடிய யுத்தத்தின் பாதிப்புகளிலிருந்து எமது மக்கள் இன்னும் மீட்சி பெறவில்லை. 
 
இன்றும்கூட, தமது பூர்வீக நிலபுலங்களுக்கு திரும்ப முடியாமல் அகதி முகாம்களிலும், தற்காலிக கூடாரங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நெறி தவறிய இந்த யுத்தம் எமது மக்களுக்கு ஏற்படுத்திய இழப்புகள், அழிவுகள், பாதிப்புகள், வலிகள், அவலங்கள் தொடர்பில், மகிந்த ராஜபக்ஸ அரசின் புரிதல்கள் தான் என்ன? இவை தொடர்பில் இந்த அரசு எதை விளங்கிக்கொண்டுள்ளது?
 
இளம் வயதில் விதவைகள் ஆக்கப்பட்டோர், அங்கவீனர்களாக்கப்பட்டோர், பலவந்தப்படுத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டோர், சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சட்டத்துக்கு முரணாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் இளைஞர் யுவதிகள், எவ்வித நீதி விசாரணையும், குற்றங்களும் இன்றி தமது இளம்பராய வாழ்க்கை காலத்தை சிறைக்கூடங்களுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், பெற்றோரை இழந்து தங்கிவாழும் சிறுவர் சிறுமிகள், தனித்து விடப்பட்டுள்ள மூத்த பிரஜைகள், பெண்களை தலைமைத்துவமாகக்கொண்ட குடும்பங்கள், தொழில் ஆதாரமின்றி அல்லலுறும் முன்னாள் போராளிகள், இப்படி சிதைக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட ஒரு சமுகமாகவே நாம் நிகழ்காலத்தில் சீவித்துக்கொண்டிருக்கின்றோம். 
 
நெஞ்சை அழுத்தும், அபத்தமான அருவருப்பான, யுத்த சம்பவங்களின் எச்ச சொச்ச சாட்சியங்களாக, துயரக்காட்சிகளாக, இனியும் இழப்பதற்கு தம்மிடம் எதுவுமற்றவர்களாக எமது மக்கள் ஊழிக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். யுத்தத்தால் உடல், உளம், பொருளாதார ரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள எமது மக்கள் மீது, இந்த அரசு கொண்டுள்ள கரிசனை தான் என்ன?  
 
புத்தகப்பைகளை தோளில் தாங்கிக்கொண்டு பள்ளிக்குப்போகும் பிள்ளைகளுக்கு பதிலாக, உடல்களில் துப்பாக்கிச்சன்னங்களையும், எறிகணைச்சிதறல் துண்டுகளையும் சுமந்துகொண்டு பள்ளிக்குப்போகும் ஆசியாவின் அதிசயத்தை நாம் இன்று இலங்கையில் காணுகின்றோம். 
 
வன்னி பெருநிலப்பரப்பில் எமது விவசாயிகள் தன்னிறைவு பொருளாதாரத்தோடு பெருவாழ்க்கை வாழ்ந்தவர்கள். பசித்து வந்தாருக்கு மனம் ஒப்பி உணவளித்தவர்கள். இல்லாதோர்க்கும் உவந்தளித்து இல்லாமையை இல்லாமல் செய்தவர்கள். “வந்தாரை வாழ வைக்கும் பூமி” என்று சிறப்பிக்கப்பட்ட வன்னி பிரதேச விவசாய விளைநிலங்களின் இன்றைய நிலைமை என்ன? விவசாயத்தை தமது ஜீவனோபாய தொழிலாக கொண்டுள்ள மக்களின் நிலைமை தான் என்ன? 
 
தத்தமது பூர்வீக நிலபுலங்களில் உழுது உண்டு பசியாறி உறங்கி களித்திருந்த எமது மக்களின் வாழ்தலுக்கான மூலங்களை பெயர்த்து பிய்த்தெறிந்து, செழுமை மிகுந்த விவசாய விளைநிலங்களை இராணுவ தேவைகளுக்காக ஆக்கிரமித்து, வறுமை, பசி, பட்டினிச்சாவுக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு இந்த வரவு செலவு திட்டம் என்ன பரிகாரம் சொல்லுகிறது?    
 
இறுதி யுத்தத்தில் ஏற்படுத்தப்பட்ட இலட்சக்கணக்கான உயிர் இழப்புகளுக்கும், பில்லியன் கணக்கான சொத்தழிவுகளுக்கும் ஐந்தாண்டுகள் கடந்தும் நஸ்ட ஈடுகள் வழங்கப்படவில்லை. தமது வாழ்விடங்களிலிருந்து எமது மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட பின்னர், அம்மக்களுக்கு உரித்துடைய விவசாய உபகரணங்கள், மீன்பிடி உபகரணங்கள், ஆலை இயந்திரங்கள், பட்டறை இயந்திரங்கள், கனரக வாகனங்கள், பாரஊர்திகள், சிற்றூர்திகள் முழுமையாகவோ, அன்றி பகுதியாகவோ தென்னிலங்கைக்கு கடத்திக்கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. பெருந்தொகையான உழவு இயந்திரங்களும், உழவு மற்றும் பசு மாடுகளும் இவ்வாறு கடத்தி செல்லப்பட்டன. ஆனால் அவற்றுக்குரிய இழப்பீட்டை வழங்குவதற்கு இந்த வரவு செலவு திட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை.  
 
தற்போது வன்னிப்பெருநிலப்பரப்பில் மாரி மழைக்காலம் ஆரம்பித்துள்ளது. தற்காலிக கொட்டகைகள், தறப்பாள் குடில்கள் சகிதம் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய குடியேற்ற பகுதிகளும், மாதிரிக்கிராமங்களும் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. கடும் காற்றுடன் கூடிய கனமழை அங்கு வசித்துவரும் எமது மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது. உயிர் வாழ்வதற்கான உணவு தேடல்களும், அதற்கான தொழில் வாய்ப்புகளும் இன்றி அவர்கள் அவஸ்தைப்படுகின்றனர். ஏனைய மக்களுடனும், நகரப்பகுதியுடனும் சமுகத்தொடர்பு அறுக்கப்பட்டவர்களாக அவர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர்.  
 
“மீளக்குடியேற்றம் அனுப்புகின்றோம்” என்று கூறிக்கொண்டு, எமது மக்களை அவர்களுக்கு உரித்துடைய, உயிர் வாழ்வதற்கு ஊட்டம் அளிக்கக்கூடிய, நீண்டகால பயன்தரும் வளங்களை கொண்ட பூர்வீக நிலங்களுக்கு அனுப்பாமல், மனிதர்கள் வாழுவதற்கு பொருத்தமற்ற பிறிதொரு இடத்தில், அதாவது காடு வெட்டி புதிதாக ஏற்படுத்தப்பட்ட குடியேற்றங்களிலும், வெட்ட வெளிகளிலும், மர நிழல்களுக்கு கீழும் கொண்டு சென்று இறக்கி விட்டுள்ள இந்த அரசு, அந்த மக்களின் தொழில் வருமானத்துக்கு, நிரந்தர வாழ்வாதாரத்துக்கு இந்த வரவு செலவு திட்டத்திலும் பரிந்துரை செய்யவில்லை.      
 
நீதியைக்கொன்று, சமத்துவத்துக்கு சவக்குழி வெட்டி, தனி மனித உரிமைகள், சுயகௌரவ வாழ்வை புதைத்து, இராணுவ அடக்குமுறைகளுக்குள்ளும், முற்றுகைக்குள்ளும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு, இந்த வரவு செலவு திட்டம் இன்னுமொரு இடியாக தலையில் இறங்கியுள்ளது.  
 
இது எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட வஞ்சிப்பு வரவு செலவு திட்டம் இதுவாகும். வன்மத்தின் உச்சகட்ட வரவு செலவு திட்டம் இதுவாகும். இனக்குரோதத்துக்கு நல்ல எடுகோளாகும். 
 
பொதுவாகவே இலங்கை அரசியல் நிலைமைகள், முக்கியத்துவம் பெற்றுள்ள  பொருளாதார முன்னெடுப்புகள் பற்றிய தேவைகள் மீது அதிக ஆதிக்கம் செலுத்துவதை பல சந்தர்ப்பங்களில் காண முடிகின்றது. இந்த அரசாங்கம் தயாரித்துள்ள வரவு செலவு திட்டத்துக்கு பின்னால், இந்த நிலைமைகள் தெளிவாகவே புலப்படுகின்றன. அது ஜனாதிபதியின் செல்வாக்குக்கு உள்பட்டதாகவும் உள்ளது. 
 
தற்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. அதற்கு ஆதாரமாகவும் இந்த வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் வாக்கு சுவீகரிப்பை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் தான் இது என்பது மறுப்பதற்கில்லை. எமது மக்களை ஏறி மிதித்த, ஏய்த்துப்பிழைத்த வரவு செலவு திட்டமே இதுவாகும். 
 
இலங்கை பல்லின, பல்மொழி, பல்மத, பல்கலாசார தொகுதிகளின் கூட்டிணைப்பு ஆகும். ஆனால் இதனை உள்கிடக்கையாகக்கொண்டு இலங்கை தேசிய வாதம் எழுச்சி பெறவில்லை. இலங்கை தேசியம் என்பது, பெருன்பான்மை சமுகத்தின் தேசியம் என்று சித்திரிக்கப்பட்டே வந்துள்ளது. ஏனைய சிறுபான்மைச்சமுகங்களை, சிங்கள பௌத்தர்கள் அல்லாத சமுகங்களை நசுக்கி, ஒடுக்கி அடக்கி ஆளும் அரசாங்கங்கள் தான், இன்றுவரைக்கும் ஆட்சியில் இருந்து வந்துள்ளன. இனவாதத்தையும், வன்முறையையும் தோற்றுவித்து, அதனை ஊக்குவித்து, சர்வாதிகார ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பவர்கள், இப்போதும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக தான் இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள். 
 
தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை காண்பதற்கான உரையாடல்களில் ஈடுபடுவதற்கான தத்தமது பொறுப்பைக்கூட மறுதளிப்பவர்கள் தான், இன்றைய ஆட்சியாளர்களாகவும் உள்ளனர். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு, நியாயமான கோரிக்கைகளுக்கு, அரசியல் அபிலாசைகளுக்கு மாறாகவே, இந்த அரசாங்கம் செயல்பட்டு வந்துள்ளது. தமிழ் மக்களின் இருப்புக்கான அடையாளம் சார்ந்த பிரச்சினைகளை, வாழ்வுரிமை விவகாரத்தை பயங்கரவாதமாக சித்திரித்து காட்டும் ஆதிக்க அரசியலை தான் காலம் காலமாக செய்துகொண்டிருக்கின்றது. இந்த ஆதிக்க அரசியலின் ஆணி வேர் தான், இந்த வரவு செலவு திட்டத்திலும்  மையமாக இழையோடியுள்ளது. 
 
விடுதலைப்புலிகள் அமைப்பினரை அழித்து விட்டோம். இனி அபிவிருத்தி தான் எங்கள் ஒற்றை இலக்கு என்று, இந்த அரசை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் கூறுகின்றனர். ஆனால் ஆயுதம் தாங்கிய தமிழ் போராளிக்குழுக்கள் தமிழர் தாயகப்பகுதிகளில் உருவாக்கம் பெற்றதற்கான காரணங்களை அவர்கள் சிந்திக்க தவறிவிட்டுள்ளனர். யுத்தத்துக்கு காரணமான அரசியல் சூழமைகள் மறக்கப்பட்டு, மக்களுக்கான அபிவிருத்தியே இங்கு பிரதான பிரச்சினையாக காட்டப்படுகின்றது. 
 
உண்மையில் தேசிய ஒடுக்குமுறை எனும் அரசியலின் விளைவாகவே, ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது. அதன் உச்சகட்ட பெறுபேறே தமிழ் மக்களின் நலனில், பாதுகாப்பில் கரிசனை கொண்டுள்ள சர்வதேச நாடுகளின் தலையீடுகள் ஆகும். பிரித்தானியாவின் ஆட்சியில் இலங்கை இருந்தபோது, வீதி வசதிகள், போக்குவரத்து வசதிகள், மின்சார வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள் முழுமைப்படுத்தப்பட்டிருந்தன. அன்று இந்த சேவைகள், வசதிகள் எல்லாம் இருந்த போதிலும்கூட, அவர்களிடமிருந்து விடுதலையை கோரினீர்கள். இன்று நாம் அடக்குமுறை, ஒடுக்குமுறை எனும் அடிமைச்சகதிக்குள்ளிருந்து, ஆதிக்க அரசியலிருந்து விடுதலை கோரும்போது மட்டும், வீதி வசதிகள், போக்குவரத்து வசதிகள், மின்சார வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகளை காரணம் காட்டுவது எப்படி நியாயமாகும்? 
 
அதிலும், தமிழர் தாயகப்பிரதேசங்களில் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் குடியேற்றங்கள், சட்டவிரோத காடழிப்புகள், காணி அபகரிப்புகள், பௌத்த மயமாக்கல்கள், இராணுவ வல்வளைப்புகள், இயற்கை வள கனிய வளச்சுரண்டல்கள் சீரான நிகழ்ச்சிநிரலின் பிரகாரம், தமிழர் குடிநிலைப்பரம்பலை சடுதியாக மாற்றியமைக்கும் வகையில், இயந்திரகதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான, தன்னாட்சி அலகுக்கான போராட்டத்தின் தேவை, அதன் அவசியம் இன்னும் இன்னும் மேலெழுந்து வீரியம் பெற்று, கூர்மை பெறுவது தவிர்க்க முடியாததொன்றாகிறது. 
 
ஸ்கொட்லாந்து நாட்டு பொதுமக்களின் விடுதலை வேட்கைக்கான மனவிருப்பறியும், கருத்தறியும் பொதுவாக்கெடுப்புக்கு சந்தர்ப்பம் வழங்கிய ஜனநாயகத்தின் உச்ச மதிப்பு தன்மையை வெளிப்படுத்திய பிரித்தானியா போன்ற நாடுகளை விமர்சிப்பதற்கு, சிறீலங்கா அரசுக்கு எந்த யோக்கியதையும் கிடையாது. ஜனநாயகத்தின் மிகச்சிறந்த பண்புகளை மாசு மருவற்று வெளிப்படுத்த சிறீலங்கா அரசு அவர்களிடமிருந்து கற்றுத்தேற வேண்டியுள்ளது. 
அவர்களை முன்மாதிரியாகக்கொண்டு ஈழத்தமிழர்களின் சுயாட்சி உரிமைக்கான பொதுசனவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதே, உலகெல்லாம் பரந்து வாழும் தமிழ் மக்களின் ஒருமித்த வலுவான கோரிக்கையாகும். சர்வதேச பிரகடனங்களை, மனித மாண்பு விழுமியங்களை, மனித உரிமைகளை மதித்தல், பாதுகாத்தல், பின்பற்றல், அவற்றை கௌரவிப்பது தொடர்பில் சிறீலங்கா அரசின் வெளிப்படத்தன்மையை, பொறுப்புணர்ச்சியை சர்வதேச நாடுகள் அளவீடு செய்வதற்கு, இதுவே ஒரு கருவியாகவும் பயன்படுத்தப்படுதல் வேண்டும். 
 
இலங்கை ஒற்றையாட்சி நாடாகவும், மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரத்தை உடையதாகவும், இருக்க வேண்டும் என்பதற்காக, சமஸ்டி அரசியல் பற்றிய பேச்சுக்குக்கூட, தவறான அர்த்தம் போதிக்கப்படுகின்றது. சிறுபான்மை இனங்கள், அரசு அதிகாரத்திலும் அரசியலிலும் சம பங்கினைப்பெற வேண்டும். அரசியல் யாப்பு ஒருமைவாதத்திலிருந்து, பன்மைவாதம் நோக்கி நகர்த்தப்பட வேண்டும் என்பது சமஸ்டி அரசியலின் முக்கிய கூறாகும். அந்த வகையில் நாம் சமஸ்டி அதிகார அலகினை கோருவதில் தவறேதுமில்லை. அதற்கு நியாயமான காரணங்கள் எம்மிடம் பல உண்டு.   
 
யுத்தத்தால் உருக்குலைக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு, விசேச திட்டங்களை வழங்குவது தொடர்பில் சிந்திப்பதற்குக்கூட இடமளிக்காமல், பேரினவாத சித்தாந்தம் புரக்கேறியுள்ளது. பெரும்பான்மை சமுகத்தின், அதிலும் குறிப்பாக வாரிசு முதலாளித்துவ நலன்களை பாதுகாப்பதிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மிகவும் கவனமெடுத்து செயல்பட்டு வருகின்றார். இதுபற்றி இந்த சபையிலுள்ள சிங்கள உறுப்பினர்கள் என்னை விடவும், விரிவாக பேசக்கூடிய தகுதியை கொண்டுள்ளனர். 
 
மக்கள் நல அரசுக்குரிய விழுமியங்கள், நடைமுறைகள் சார்ந்தில்லாமல், ஆட்சியாளர்களின் குறுகிய இலாப நோக்கங்களுக்கு, அவர்களின் அரசியல் இருப்புக்கு பயன்தரக்கூடிய வரவு செலவு திட்டமே, இந்த வருடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 
 
மகிந்த ராஜபக்ஸ அரசின் ஆதாரம் என்பது, தனிச்சிங்கள பௌத்த பெரும்பான்மை இனம் என்பதாக சுருங்கி விட்டது. இந்த மாயையை பழுதில்லாமல் பாதுகாக்கவே இந்த வரவு செலவு திட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, விடுதலை ஜனநாயக பண்புகளை இல்லாதொழிக்கும் செயல்திட்டம் இந்த அரசின் கொள்கையாக உள்ளது. குறிப்பாக, சர்வஜன வாக்குரிமை, தேர்தல் அரசியல், பாராளுமன்ற அரசியல், சமுக நல அரசு நிலைபெறுவதற்கு முனைப்பு காட்டும் சூழலில், சிங்கள ஆட்சியாளர்கள் தமது ஆதரவாளர்களுக்கு சலுகைகளை வாரி இறைக்கும் புரவலர்களாக மாறிப்போயுள்ளனர். 
 
பௌத்தர்கள் அல்லாத சமுகங்களுக்கும் கிடைக்க வேண்டிய நியாயமான சேவைகளை, பங்கீடுகளை பறித்தெடுத்து, அவற்றையும் பௌத்தர்களுக்கு மட்டுமே அள்ளி வழங்கும் புரவலர்களாக இவர்கள் பணிசெய்ய தலைப்பட்டுள்ளனர். இவ்வாறானதொரு புரவலர் அரசியல் மேலாதிக்க பின்புலத்தில் தான், மகிந்த ராஜபக்ஸ அரசும் அதிகாரத்துக்கான போட்டியில் மிகத்தீவிரமாக பங்குகொண்டு வருகின்றது. 
இந்தப்போட்டி அரசியல் காரணமாகவே, எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளையும், சேவைகளையும் கூடத்தர மறுத்து, தமது சமுகம் சார்பு நலன்களை மேம்படுத்துவதற்கான வரவு செலவு திட்டத்தை எங்கள் மீது திணித்துள்ளது. இது எமது மக்களின் நலனுக்கு விரோதமான, பாதகமான வரவு செலவு திட்டமாகும். ஆதலால். மக்கள் நல அரசியல் நீக்கம் செய்யப்பட்ட, பேரினவாத அரசியல் நோக்கு சார்ந்து செய்யப்படும் எந்த திட்டங்களும், அபிவிருத்திகளும் எமது மக்களுக்கு எவற்றையும் கொண்டு வந்து சேர்க்காது.   
 
நான் இந்த சபையில் அங்கத்துவம் வகிக்கும் காலம் தொடங்கி இன்றுவரை,  வரவு செலவு திட்ட விவாதங்கள் ஆயினும், ஏனைய துறைகள் சார்ந்த எந்த விவாதங்கள் ஆயினும், அவை தமிழ் மக்களுக்கு நம்பிக்கையான, காத்திரமான, பொருத்தமான தெரிவுகளை முன்வைக்கத்தவறியுள்ளன. இந்த வரவு செலவு திட்ட விவாதம் கூட, சம்பிரதாயபூர்வமான சடங்கு நிகழ்வாகவே பார்க்கப்பட வேண்டும். அந்த வகையில் வேதனைப்படுவதை விடவும், எமது மக்களுக்கு வேறு ஏதும் மார்க்கம் உண்டோ?
 
-நன்றி-
     
SHARE