மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

93
மலையகத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக பிரதான நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும், அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ.குமாரசிறி தெரிவிக்கின்றார்.

லக்ஷபான நீர்தேக்கத்தில் 3 வான்கதவுகள் நேற்று இரவிலிருந்து திறக்கப்பட்டுள்ளது.

அத்தோடு காசல்ரீ மற்றும் விமலசுரேந்திர ஆகிய நீர்த்தேக்கங்களின் மேலதிக நீர் வெளியாகுவதோடு மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும் திறக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.

கொஸ்லாந்தை மீட்புப் பணிகளில் மோப்ப நாய்கள்

கொஸ்லாந்த மண்சரிவில் உயிருடன் புதையுண்டவர்களை தேடும் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன.

கொஸ்லாந்த, மீரியபெத்த மண்சரிவுக்குள்ளான பிரதேசத்தில் மீட்புப் பணி மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

நேற்றைய தின மீட்புப் பணிகளின் போது கூடுதலான இயந்திரங்கள் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டும் ஒரு சடலம் கூட மீட்கப்படவில்லை.

மீட்புப் பணிகளில் இராணுவத்தின் சுமார் 700 விசேட கமாண்டோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வான்படையின் விசேட எயார் மொபைல் பிரிகேட்டின் 52 விமானப்படை அதிகாரிகளும் மீட்புப் பணியில் துணை செய்கின்றனர்.

எனினும் எதிர்பார்த்தபடி சடலங்களை மீட்கும் பணியில் முன்னேற்றம் கிட்டவில்லை. இதனையடுத்து இன்று காலை முதல் மோப்ப நாய்களை ஈடுபடுத்தி மீட்புப் பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

SHARE