112 பேர் திடீர் என மத்திய கிழக்கிலிருந்து நாட்டுக்குத் திரும்பினர்…

159

 

 

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றச்சென்று அந்நாடுகளில் தமது எஜமானிகள் மற்றும் தொழில்புரியும் நிறுவனங்களில் துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளான மேலும் 112 இலங்கையர்கள் சனிக்கிழமை(01)காலை நாடு திரும்பியுள்ளனர்.

தாம் தொழில் பெற்றுச்சென்ற நாடுகளில் தமது எஜமானிகள் மற்றும் தாம் தொழில் புரிந்த நிறுவனங்களில் ஒப்பந்தத்தை மீறும் வகையில் தமக்குரிய சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் தாம் நாடு திரும்பியதாக அந்த பணியாளர்களில் ஒருவர் கூறினார்.

தாம் தொழில் புரிந்த வீடுகளில் உள்ள எஜமானிகளால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளான நிலையில் தமது உயிரை காப்பாற்றிக்கொண்டு இவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர். தமது எஜமானர்களால் பாலியல் வன்முறைகளுக்கு இலக்கானவர்கள்;, திடீர் விபத்துகளுக்கு உள்ளானவர்கள், பல்வேறு நோய்களுக்கு இலக்கானவர்கள் மற்றும் அந்நாடுகளுக்கு செல்வதற்கு வழங்கப்படும் ஆவணங்கள் இல்லாத நிலையில் அந்நாடுகளின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களும் நாடு திரும்பியவர்களில் உள்ளடங்குகினறனர்.

கட்டார் விமானசேவைக்கு சொந்தமான கியூ.ஆர்.662 விமானத்தில் 46 பேர் நாடு திரும்பியதுடன் ஏனையவர்கள் சவூதி அரேபியா, டுபாய் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து திரும்பிய பெண்கள் ஆவர். திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, குருநாகல், அம்பாறை மற்றும் ஏனைய கஷ்ட பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

தாம் பணிபுரிந்த வீடுகளின் உரிமையாளர்களால் தமது ஒப்பந்தத்தை மீறும் வகையில் உரிய சம்பளம் வழங்கப்படாத நிலையில் நாடு திரும்பிய திருகோணமலை தோப்பூர் பிரதேசத்தை சேர்ந்த ஏ.அஸ்வர் கூறுகையில், தாம் ஓர் இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஊடாக நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு சென்ற போது, அங்கு தமது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொழில் வழங்காததால் தாம் அங்குள்ள வெதுப்பகம் ஒன்றில் பணிபுரியும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தார்

நாள்தோறும், மிகப்பெரிய 7 பெட்டிகளில் காணப்படும் மா மூட்டைகளை வெதுப்பகத்திற்கு சுமந்து செல்லவேண்டிய வேலையே தனக்கு தரப்பட்டதாகவும் இது தமது தொழில் ஒப்பந்தத்தை மீறியது என தமது எஜமானரிடம் தெரிவித்து அவரின் ஊடாக அந்நாட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். பின்னர் பணத்தினை செலுத்தி நாடு திரும்பியுள்ளார்.

தம்மை போல கட்டார் நாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்லும் ஏனையவர்களுக்கும் இந்நாட்டில் வைத்து கையெழுத்திடும் ஒப்பந்தத்தில் கூறப்பட்ட வேலைகள் கொடுக்கப்படாமல் ஒப்பந்தத்ததை மீறி ஏனைய வேலைகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

தாம் பணிபுரிந்த வீடுகளின் எஜமானர்களால் தாக்குதல்களுக்கு உள்ளானதுடன் உடல் ரீதியான சித்திரவதைகளுக்கு உட்பட்டதாகவும் நாடு திரும்பிய பெண்களில் பெரும்பாலானோர் கூறுகின்றனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் இதுவரையில் மூன்று பெண்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒரு பெண் பேச முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்நாட்டில் வழங்கப்பட்ட மருந்தினை உட்கொண்டதாலேயே அவருக்கு இந்த நிலைமை ஏற்ப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அந்த பெண் தான் பணிபுரிந்த வீட்டின் எஜமானனால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

ஏனையவர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளின் ஊடாக அவர்களுக்கான அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி செல்வதற்கான பயணக்கட்டணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE