இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்த முனாஸ், புளொட் மோகன், ரெலோ வரதன், ஈ.பி.ஆர்.எல்;.எவ் ராசிக் இப்படி மிகப்பெரிய கொலைக்கும்பல்களின்  மத்தியில், உயிர் அச்சுறுத்தல் நேரடியாகவும் மறைமுகமாகவும் வந்த போதும் அன்று  ஊடகவியலாளர்கள் துணிச்சலுடன் பணியாற்றினர்.

 

 இரா.துரைரத்தினம்!

 

சுதந்திர ஊடகவியலாளனாக இருந்த சிவராம் மறைந்து 12ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் சிவராமின் எதிர்பார்ப்பும், கிழக்கின் ஊடகத்துறையும் என்ற  விடயம் பற்றி பேச வேண்டியது இன்றைய நிலையில் அவசியமாகிறது.

சிவராம் 1990களின் பிற்பட்ட காலத்திலிருந்து சுமார் 15 ஆண்டுகள் ஊடகத்துறையில் ஆளுமை செலுத்தியிருந்தாலும் இறுதி 10 ஆண்டுகள் கிழக்கின் ஊடகத்துறை வளர்ச்சி பற்றி அதீத அக்கறையோடு செயல்பட்டதை நாம் மறக்க முடியாது.

கிழக்கு ஊடகத்துறை பற்றி சிவராமின் எதிர்பார்ப்பு எத்தகையது? கிழக்கில் இன்றைய ஊடகத்துறையின் நிலை என்ன என்பது பற்றியும் ஆராய வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. இது பற்றி விரிவான ஆய்வு ஒன்றை எதிர்காலத்தில் தொடராக எழுத எண்ணியுள்ளேன். அதற்கு முதல் சிவராமின் நினைவு தினத்தில் சுருக்கமாக மட்டக்களப்பின் ஊடகத்துறை பற்றி பார்க்க இருக்கிறேன்.

கிழக்கில் துணிச்சல் மிக்க ஊடகத்துறை அண்மைக்காலத்தில் கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்களின் நடவடிக்கைகளை அவதானிப்பவர்கள் இப்போது கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்களுக்கும் துணிச்சலுக்கும் என்ன தொடர்பு என கேட்க கூடும்.

இன்று இல்லா விட்டாலும்  இலங்கையிலேயே துணிச்சல் மிக்க,.. தேடல் மிக்க ஊடகவியலாளர்கள் ஒரு காலத்தில் கிழக்கில்தான் இருந்தனர் என்பது பலரும் அறிந்த உண்மை.

1890ஆம் ஆண்டில் எம்.எஸ்.பாவாவை ஆசிரியராக கொண்டு வெளிவந்த மாணவன் வாராந்த பத்திரிகை தொடக்கம் இறுதியாக வெளிவந்த தமிழ்அலை வரை மிகச்சொற்பமான பத்திரிகைகளே மட்டக்களப்பிலிருந்து வெளிவந்தாலும், கிழக்கின் ஊடகத்துறை வரலாறு துணிச்சல் மிக்க, ஆற்றல் மிக்க பத்திரிகையாளர்களை கொண்டு பயணித்தது என்பதை மறக்க முடியாது.

1980களில் கிழக்கில் பணியாற்றிய ஜோசப், கதிர்காமத்தம்பி, போன்றவர்கள் அரசியல்வாதிகளுக்கு பின்னால் சென்று துதிபாடும் செய்திகளை எழுதியவர்கள் அல்ல. மக்களின் தேவைகள் பிரச்சினைகளை இனங்கண்டு, செய்திகளை எழுதினார்கள். அரச திணைக்களங்களிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் இருக்கும் ஊழல் மோசடிகளை அப்பலப்படுத்துவதில் முன்னின்றார்கள். 1970களில் பின் மட்டக்களப்பில் அடாவடித்தன அரசியலை ஆளும் கட்சியிலிருந்த ராசன் செல்வநாயகம் நடத்திய போது அதனை எதிர்த்து நின்றவர்கள் ஜோசப், கதிர்காமத்தம்பி போன்றவர்கள்தான்.

இதற்காக கதிர்காமத்தம்பி ராசன் செல்வநாயகத்தின் அடியாட்களால் தாக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. ராசன் செல்வநாயகத்தின் அரசியல் அதிகாரத்தினால் ஜோசப் தன்னுடைய தொழிலையே இழந்தார். இருந்த போதிலும் ராசன் செல்வநாயகத்தின் காலடிக்கு செல்லவில்லை.

துணிச்சலுடன் ஊடகப்பணியை மேற்கொண்டார். ஜோசப் அவர்கள் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மேற்கொண்ட ஊழல்களை அம்பலப்படுத்திய சம்பங்களில் சூறாவளி பூராயம் தொடர் மிக முக்கியமானதாகும். 1978ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிய சூறாவளியை தொடர்ந்து புனர்வாழ்வு மீள் கட்டமைப்பு பணிகள் நடைபெற்றாலும், அதில் பெரும் ஊழலும் மோசடிகளும் இடம்பெற்றன. அப்போது அமைச்சராக இருந்த தேவநாயகம் அவர்களும், அவரின் பக்கபலத்துடன் அரசாங்க அதிகாரிகளான இருந்த மௌனகுருசாமி போன்ற அதிகாரிகள் செய்த ஊழல் மோசடிகளை ஆதாரத்துடன் அவர் வெளிக்கொண்டுவந்த பாங்கு மிகவும் துணிச்சல் மிக்கதும் பாராட்டுக்குரியதுமாகும்.

இன்று புலனாய்வு இதழியல் துறையை கற்பிப்பதற்கு பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால் எந்த புலனாய்வு இதழியல் பட்டத்தையும் பெறாத, ஜோசப் மேற்கொண்ட அந்த புலனாய்வு கட்டுரையை இன்று ஊடகத்துறையில் இருக்கும் இளம் ஊடகவியலாளர்கள் படிக்க வேண்டும். அவர் எவ்வாறு அந்த புலனாய்வை மேற்கொண்டு மூடிமறைக்கப்பட்ட அந்த ஊழல் மோசடிகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார் என்பதை இன்று ஊடக கற்கை நெறிகளை மேற்கொள்பவர்களும், ஊடகத்துறையில் இருப்பவர்களும் அதை படிப்பதன் மூலம் நாம் பலவற்றை கற்றுக்கொள்ள முடியும்.

புலனாய்வு ஊடகத்துறையில் பேராசிரியராக இருக்கும் மிசோரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்ரேவ் வைன்பேர்க் ஊடக புலனாய்வு பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

புலனாய்வு பணிகளை  சட்டப்படி காவல்துறையினர், வழக்கறிஞர்கள், கணக்காய்வாளர்கள் மேற்கொள்கின்றனர். அவர்கள் தனிமனிதர்களாக அல்லாமல் கூட்டுமுயற்சியாக மேற்கொள்கின்றனர். அவர்களை சுற்றி பல பாதுகாப்பு அரண்கள் இருக்கும். ஆனால் ஒரு ஊடகவியலாளர் புலனாய்வு பணியை மேற்கொள்வது என்பது எந்த பாதுகாப்பு அரணும் அற்ற திறந்து வெளியில் நின்று  தேடும் பாரிய முயற்சியாகும்.

ஆனாலும் காவல்துறையினர், வழக்கறிஞர்கள், கணக்காய்வாளர்கள் கண்டு பிடிக்க முடியாதை ஊடகவியலாளர்கள் கண்டு பிடித்து விடுகிறார்கள். புலனாய்வு ஊடகவியலாளர்களுக்கு தேவையான முக்கியமான விடயம் சொந்த முயற்சியும், வாசகர்களுக்கு, பொதுமக்களுக்கு எது முக்கியம் என கருதப்படுகிறதோ அந்த விடயத்தை ஆழமாக தேடும் ஆற்றலுமாகும்.

குற்றம், அரசியல் ஊழல், பொதுநிறுவனங்களில் ஏற்படும் ஊழல் மோசடிகள் பற்றி மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டுவருவதே புலனாய்வு ஊடகத்துறையாகும்.

பல்கலைக்கழகங்களில், ஊடககற்றை நிலையங்களில் இத்துறை பற்றி பயிற்சி பெற்ற ஊடகவியலாளர்களே புலனாய்வு ஊடக களத்தில் இறங்குகின்றனர்.

ஆனால் ஊடக புலனாய்வு என்ற பட்டமோ, பயிற்சியோ எதுவும் இல்லாத நிலையில் அன்று ஜோசப் மேற்கொண்ட அந்த முயற்சி எத்தகைய ஆழம் மிக்கது என்பதை அறிய முடியும். ஊடக புலனாய்வு துறை மாணவர்களுக்கு அவரின் அந்த ஒரு கட்டுரைத்தொடரே மிகப்பெரிய பாடமாக இருக்கும். இவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்கள் வாழ்ந்த பிரதேசம் மட்டக்களப்பு ஆகும்.

அதன் பின்னர் 1990களின் பின்னர் மட்டக்களப்பில் புதிய ஊடக கலாசாரம் ஒன்று உருவாகியது. ஜோசப் அவர்கள் பணியாற்றிய காலம் போல 1990களின் பிற்பட்ட காலம் இருக்கவில்லை.

இராணுவ நெருக்கடி, துணைக்குழுக்களின் கொலை அச்சுறுத்தல், கைது செய்யப்படுபவர்கள் உயிருடன் புதுப்பாலத்தில் ரயர் போட்டு எரிக்கப்பட்ட காலம். சரிநிகர், விடிவானம், தினக்கதிர் போன்ற வாரப்பத்திரிகைகளின் வருகை, தினக்குரல் தினசரி, தமிழ்நெற் இணையத்தளத்தின் வருகை, என்பனவும், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்ற ஒரு பின்புலத்துடன் பத்திரிகையாளர்களின் கூட்டிணைவு, சிவராம் போன்ற பத்திரிகையாளர்களின் ஊக்குவிப்பு என்பன மட்டக்களப்பில் ஊடகத்துறையில் 1980களை விட 1990களின் பிற்பட்ட காலத்தில் புதிய மாற்றத்தை பெற்றிருந்தது.

மட்டக்களப்பில் பல படுகொலைகளை செய்து கொண்டிருந்த இராணுவ புலனாய்வு பிரிவைச்சேர்ந்த முனாஸ், புளொட் மோகன், ரெலோ வரதன், ஈ.பி.ஆர்.எல்;.எவ் ராசிக் இப்படி மிகப்பெரிய கொலைக்கும்பல்களின் களுகு கண்களின் மத்தியில், உயிர் அச்சுறுத்தல் நேரடியாகவும் மறைமுகமாகவும் வந்த போதும் அன்று மட்டக்களப்பில் இருந்த ஊடகவியலாளர்கள் துணிச்சலுடன் பணியாற்றினர். அந்த துணிச்சல்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களில் முக்கியமானவர் சிவராம் ஆகும்.

நடேசன், ஜெயானந்தமூர்த்தி ஆகியோரின் வீடுகளின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல், முனாஸ், ரசீக், ஆகியோரால் அவர்களின் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அச்சுறுத்தலின் பின் நான் உயிர்தப்பி மீண்டுவந்த சம்பவம், இராணுவ கட்டளை தளபதியால் அவரின் முகாமுக்கு அழைக்கப்பட்ட நடேசன், கோபாலரத்தினம் ஆகியோர் அச்சுறுத்தப்பட்டமை, இராணுவ கட்டளை தளபதியின் அலுவலகத்திற்கு அடிக்கடி மட்டக்களப்பில் இருந்த ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவங்கள், ரெலோ இயக்கம் நடுநிசி வேளையில் எனது வீட்டிற்கு வந்து என்னை கொலை செய்ய எடுத்த முயற்சி, தவராசா வீட்டிற்கு புளொட் இயக்கத்தினர் சென்று அச்சுறுத்திய சம்பவம், இப்படி பல சம்பவங்களை அடுக்கி கொண்டு போகலாம். ஆனாலும் இந்த அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சி ஒடுங்கி துதிபாடும் செய்திகளை மட்டும் எழுதிக்கொண்டிருக்கவில்லை.

ராசிக், புளொட் மோகன், முனாஸ் ஆகியோரிடமிருந்து நேரடியாக கொலை அச்சுறுத்தல் வந்த போதிலும் அவர்கள் புரியும் கடத்தல், கொலை, கொள்ளை, கப்பம் பெறும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவதில் அன்று இருந்த ஊடகவியலாளர்கள் பெரும் பங்காற்றினர்.

மட்டக்களப்பு நகரில் இருந்த ராசிக் குழு செய்து வந்த கடத்தல், கப்பம் பெறும் நடவடிக்கைகளை ஆதாரங்களுடன் ஒருமுறை தமிழ்நெற் வெளியிட்டிருந்தது. அதற்கான முழு தகவல்களையும் திரட்டி வழங்கியிருந்தேன். சிவராம் அந்த புலனாய்வு செய்தியை மிக நேர்ந்தியாக தமிழ்நெற்றில் வெளியிட்டிருந்தார்.  அது சர்வதேச மன்னிப்புசபை உட்பட மனித உரிமை அமைப்புக்கள் மட்டத்திற்கு சென்றிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தும் படி அன்று ஆட்சியிலிருந்த சந்திரிக்கா அரசாங்கத்தை மனித உரிமை அமைப்புக்கள் அழுத்தம் கொடுத்தன.

இதனால் நெருக்குதல்களுக்கு உள்ளான ராசிக் அந்த செய்தியை யார் கொடுத்தது என விசாரித்து அறிந்து கொண்டு என்னை தனது முகாமுக்கு அழைத்து அச்சுறுத்தியிருந்தார். கைத்துப்பாக்கியை கையில் சூழற்றிய வாறு ராசிக் சொன்ன ஒரு வார்த்தை, இனி ஒருதடவை எங்களைப்பற்றி செய்தி வெளிவந்தால் துப்பாக்கிக்கு வேலை இருக்காது. உயிருடன்தான் வீதியில் போட்டு எரிப்போம் என எச்சரித்தார்.

ஆனால் ராசிக்குழுவின் அட்டகாசங்கள், மனித உரிமை மீறல்களை நாங்கள் வெளிப்படுத்தி வந்தோம். ஆனால் எங்களை அச்சுறுத்த, உயிருடன் ரயில் போட்டு எரிக்க ராசிக்தான் உயிருடன் இருக்கவில்லை.

மிகத்துணிச்சலான ஒரு காரியத்தை யசி சரிநிகர் பத்திரிகையில் செய்திருந்தார். அந்நேரத்தில் மட்டக்களப்பு நகரில் கொலைகளை புரிந்து கொண்டிருந்த மோகன் குழு பற்றி கட்டுரை எழுதியிருந்தார். அதில் துணிச்சலான விடயம் என்ன என்றால் அந்த கொலைகார மோகன் குழுவை சேர்ந்தவர்கள் மட்டக்களப்பு நகரில் நின்ற போது அவர்களை எப்படியோ புகைப்படம் எடுத்து அதனை பிரசுரித்திருந்தார். பின்னர் மோகன் குழு அந்த புகைப்படத்தை எடுத்தவன் யார் என மட்டக்களப்பில் தேடி திரிந்தனர்.

அதேபோன்று 1990களில் பல படுகொலைகளை புரிந்த முனாஸ் யார் என்ற விபரத்தை நிராஜ் டேவிட் சரிநிகர் பத்திரிகையில் எழுதியிருந்தார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

17.05.2000 அன்று வெசாக் தினத்தில் மட்டக்களப்பு நகரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அங்கு வந்த 233ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் ஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறுவர்கள் உட்பட 19பொதுமக்களை சுட்டுக்கொன்றனர். அந்த 19பொதுமக்களும் விடுதலைப்புலிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்றே அரசாங்கம் அறிவித்தது. அதனையே சகல ஊடகங்களும் சொல்லிக்கொண்டிருந்தன. அந்த சம்பவம் நடந்து காயப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போது காயப்பட்டவர்களில் உடல்களில் துப்பாக்கி ரவைகள் காணப்படுவதாக அங்கு கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். இதனையடுத்து காயப்பட்டவர்கள் சிலரிடம் நேரடியாக பேசிய போதுதான் உண்மை தெரியவந்தது.

குண்டுத்தாக்குதல் நடந்த பின் பாதுகாப்பு கருதி கடை ஒன்றிற்குள் ஓடிச்சென்று பதுங்கியிருந்த போது அங்கு வந்த இராணுவத்தினரே தங்களை சுட்டதாகவும் தங்களுடன் இருந்த பலரும் அதில் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர். ஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறுவர்கள் வானில் வந்து இறங்கிய போது அங்கு வந்த இராணுவத்தினர் அவர்கள் மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். ஆனால் அரசாங்கத்தின் உத்தரவுப்படி கொல்லப்பட்டவர்கள் அனைவரும் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டதாகவே வைத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்கள் என மரணச்சான்றிதழில் பதிவு செய்தால் மட்டுமே நிவாரண நிதி கிடைக்கும் என்பதால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் மௌனமாக இருந்து விட்டனர்.

ஆனால் காயமடைந்தவர்களிடம் பெற்ற தகவல்களை வைத்து அந்த கொலைகளை இராணுவத்தினரே புரிந்தனர் என்பதை தமிழ்நெற்றிற்கு செய்தியாக அனுப்பியிருந்தேன். தமிழ்நெற் மட்டுமே அந்த கொலைகளை யார் புரிந்தார்கள் என்ற விபரத்தை வெளியிட்டது. இதற்காக பின்னர் நான் இராணுவத்தினரால் விசாரிக்கப்பட்டேன்.

கிழக்கில் நடந்த கூட்டுப்படுகொலைகளில் மிக முக்கியமானது சத்துருக்கொண்டான் படுகொலை. அந்த படுகொலையில் காயங்களுடன் உயிர்தப்பிய தலைமறைவாக வாழும் ஒரேஒருவர் சிவகுமார் என்பவராகும். நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும் உண்மைநிலை வெளியில் வராதமல் இருந்தது. சிவகுமார் என்பவரை தேடி கண்டுபிடித்து அவரிடம் நடந்த உண்மைகளை விளக்கமாக கேட்டு 185க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொலை செய்த கொலையாளிகள் யார் என்ற விபரங்களை வெளியிட்ட துணிச்சலை மறக்க முடியாது. அந்த துணிச்சலின் முக்கிய பங்கு யசியை தான் சாரும்.

சத்துருக்கொண்டான் படுகொலையின் வெளிவராத உண்மைகள் விடிவானம், சரிநிகர், தமிழ்நெற் ஆகிய ஊடகங்களில் வெளிவந்தது.

இப்பொழுது மட்டக்களப்பில் தனியே பிள்ளையான்குழு மட்டுமே ஆயுதக்குழுவாக இருக்கிறது.

ஆனால் 1990களுக்கும் 2004ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இராணுவ புலனாய்வு பிரிவு, பற்பொடி கொம்பனி குழு, மோகன் குழு, புளொட், ராசிக்குழு, ரெலோ வரதன் குழு, ஜிகாத்குழு, என பல ஆயுதக்குழுக்களின் கொலை அச்சுறுத்தல்களின் மத்தியில் தான் ஊடகவியலாளர்கள் பணியாற்றினர். ஆனால் அதற்காக அரசுக்கும், அரசுடன் இணைந்திருக்கும் துணைக்குழுக்களுக்கும் துதி பாடிக்கொண்டிருக்கவில்லை. இதற்கு தமிழ்நெற் போன்ற ஊடகங்கள் களம் அமைத்து கொடுத்தன. சிவராம் போன்ற ஊடகவியலாளர்கள் அச்சம் என்பது மடமையடா, என ஒரு தென்பையும், பலத்தையும் தந்தனர். எந்த நேரமும் மரணம் எமது காலடிக்கு வரலாம் என உணர்ந்து கொண்ட போதிலும் இன்று மட்டக்களப்பில் உள்ளது போல துதிபாடும் செயலை அன்று இருந்த ஊடகவியலாளர்கள் செய்யவில்லை.

சிவராம் இன்று உயிருடன் இருந்தால் மட்டக்களப்பில் இருக்கும் ஊடகவியலாளர்களின் அரசுக்கும், துணை இராணுவ குழுக்களுக்கும் துதிபாடும் ஊடகவியலாளர்களின் செயலை கண்டு நெஞ்சுவெடித்து செத்திருப்பான்.

கடத்தல்களும், கொலைகளும் இன்று மட்டக்களப்பில் குறைந்திருக்கலாம். ஆனால் அச்சுறுத்தல், கடத்தல், கப்பம் பெறுதல், ஊழல் மோசடிகள், முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது என சொல்லமுடியாது. பிள்ளையான்குழு, இராணுவ புலனாய்வு பிரிவினரால் இப்போதும் கப்பம் பெறும் வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கொலைகளும், கொள்ளைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

திமிலைதீவில் மிகப்பெரிய வங்கிக்கொள்ளை நடந்தது. அந்த கொள்ளையில் யார் ஈடுபட்டார்கள், அவர்களின் பின்னணி என்ன என்ற விபரங்கள் எதனையும் மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்கள் வெளிக்கொணரவில்லை.

சிறுமி ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஆனால் சிலர் கைது செய்யப்பட்டு அக்கொலையின் பின்னணியில் இருந்தவர்கள் தெரியாதவாறு கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் அக்கொலை தொடர்பாக ஏனைய விபரங்கள் அனைத்தும் மூடிமறைக்கப்பட்டு விட்டது. திருமலையில் சிறுமி ஒருவர் கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆனால் அந்த கொலையின் சூத்திரதாரிகள் பற்றி யாரும் உண்மையை வெளிக்கொணரவில்லை.

மட்டக்களப்பில் பிள்ளையான் குழு சாராய கடைகள் உட்பட வர்த்தக நிலையங்களில் மேற்கொண்டுவரும் கப்பம் தொடர்பாக எந்த ஒரு பத்திரிகையாளர்களும் உண்மைகளை வெளிக்கொண்டுவரவில்லை.

இதை விட அண்மையில் நடந்த ஒரு சம்பவம். கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவரை தெரிவு செய்வதற்காக தமக்கு நெருக்கமான ஒருவரைத்தான் தெரிவு செய்ய வேண்டும் என கிழக்கு பல்கலைக்கழக பேரவையை சேர்ந்த உறுப்பினர்களின் வீடுகளுக்கு வெள்ளைவானில் வென்ற பிள்ளையான்குழு அச்சுறுத்தியிருந்தது.

மட்டக்களப்பில் இன்றும் கப்பம் பெறும் அடாவடித்தனம் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது. இதில் ஒரு சம்பவத்தை கூட மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்கள் வெளியிடவில்லை. மட்டக்களப்பு மாநகரசபையால் கட்டப்பட்ட சந்தைக்கட்டிடத்தில் உள்ள கடைகளை வழங்குவதில் நடந்த மோசடி, மட்டக்களப்பு மாநகரசபையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடக்கும் மோசடிகள், உட்பட பல கொலை, கொள்ளை, கப்பம் பெறும் சம்பவங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன.

ஆனால் இப்படி எந்த சம்பவங்களும் நடக்காதது போல மகிந்த சிந்தனையின் கீழ் மட்டக்களப்பில் பிள்ளை பிறந்தது, மகிந்த சிந்தனையின் கீழ் படுவான்கரையில் கிழவி பூப்பெய்தினாள்,  என்ற முட்டாள்தனமாக செய்திகளை எழுதிக்கொண்டிருக்கும் மட்டக்களப்பு செய்தியாளர்களை பார்த்து முதுகெலும்பில்லாத மடையனுகள், ஆற்றிலை விழுந்து சாகுங்கடா என்றுதான் சிவராம் திட்டியிருப்பான்.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு இதை எழுதலாம். இங்கு இருப்பவர்களுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்வியை மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்கள் கேட்கலாம். இப்போது இருப்பதை விட மிகமோசமான நெருக்கடி இருந்த காலம் 1990முதல் 2000வரையான காலமாகும். சிவராம், போன்ற ஊடகவியலாளர்கள் உயிருடன் இருந்த போது ஆற்றிய பங்கின் ஒரு வீதத்தையாவது செய்தால் மட்டுமே  நாங்களும் ஊடகத்துறையில் இருந்தோம் என்ற வரலாற்றை எதிர்காலம் பதிவு செய்யும் என்பதை இன்று மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.