கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் முத்தான மூலிகைகள்

 

இன்றைக்கு கூந்தல் வளர்ச்சிக்கும், கூந்தலுக்கு நறுமணம் ஊட்டவும் எண்ணற்ற ஷாம்பு, கிரீம் என விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றின் வருகைக்கு முன்னரே பண்டைய காலத்தில் கத்தாளைச்சாறு, பூந்திக்கொட்டை, கரிசலாங்கண்ணி, மருதாணி என எண்ணற்ற மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஷாம்பு, சோப்பு போன்றவைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு முடி கொட்டுவதை தவிர்க்கவும், கூந்தலின் வளர்ச்சிக்கும் இன்றைக்கும் அந்த மூலிகைகளை பயன்படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

வெந்தயம்

கூந்தலினை பட்டுப்போன்ற மென்மையாக்குவதில் வெந்தயம் சிறந்த மூலிகையாகும். வெந்தயத்தை இரவு நேரத்தில் ஊறவைத்து காலையில் அதனை மைய அரைத்து தலையில் ஊறவைத்து குளிக்கலாம். இதனால் தலைக்கு குளிர்ச்சி ஏற்படும். கூந்தல் பட்டுப்போல மாறும்.

மருதாணி

கூந்தலை கருமையாக்குவதில் மருதாணி சிறந்த மூலிகை. இது இளநரையை தடுக்கும். கூந்தலில் பொடுகு ஏற்படாமல் தடுக்கும். கூந்தலின் வேர்கால்களை வலுவாக்கி உதிர்வதை தடுக்கும்.

கற்றாழை

கற்றாழை சிறந்த மூலிகையாகும். கூந்தல், சருமம் போன்றவற்றினை பாதுகாக்க சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. கற்றாழையின் உள்ளிருக்கும் சாற்றை எடுத்து தலையில் தேய்த்து வர முடி உதிர்ந்து வழுக்கையானவர்களுக்கு புதிய முடி முளைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கூந்தலின் வறட்சியை போக்கி மென்மையாக்குவதில் கற்றாலை முக்கிய பங்காற்றுகிறது.

கடுக்காய், நெல்லிப் பொடி

முடி உதிராமல் இருக்க அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். இதேபோல் கறுப்புஎள், நன்னாரி, நீல வண்ண அல்லி. செம்பருத்தி, அதிமதுரம், இவைகளின் சாற்றை தலையில் தடவி வந்தால் முடி செழித்து, கருமையாக வளரும். கடுக்காய் பொடி, நெல்லிக்காய் பொடி, இவற்றை பாலில் ஊற வைத்துக் குளித்தால், முடி உதிர்வது நிச்சயமாக நிற்கும்.