உள்ளக பொறிமுறை என்று சர்வதேசம் தமிழரை ஏமாற்றி விட்டது – சுரேஸ் பிறேமச்சந்திரன்

 

உள்ளக பொறிமுறை என்று சர்வதேசம் தமிழரை ஏமாற்றி விட்டது – சுரேஸ் பிறேமச்சந்திரன்

ஒரு தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்ததுக்கு பிற்பாடு மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஒரு செய்தியை குறிப்பிட்டிருந்தார் பாராளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடுதான் தமிழ் மக்களுடைய இனப்பிரச்னைக்கான ஒரு அரசியல் தீர்வு உட்பட ஏனைய விடயங்களை தாங்கள் பேசி தீர்க்க முடியும் என தெரிவித்திருந்தார்.

கடந்த 17-08-2015 தேர்தலொன்று நடந்து முடிந்துள்ளது ஒரு தேசிய அரசாங்கமும் அமையப்பெற்றுள்ளது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலும் சம்பந்தன் ஐயா அவர்களுக்கு எதிர்க்கட்சி என்கிற பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே தொடர்ந்து இந்த தேசிய அரசாங்கம் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை புறந்தள்ள முடியாது.

தமிழ் மக்களிடம் நாங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தினூடாக ஆணை கேட்டிருந்தோம் குறிப்பாக இந்த இறுதிக்கட்ட போரிலே நடைபெற்ற படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்காக ஒரு நீதியான சர்வதேச விசாரணை வேண்டுமென்பதே இந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலே மக்களிடம் நாம் கேட்ட ஆணையாகும்.

யுத்தம் நடைபெற்று ஆறு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தமிழ் மக்களுடைய நிலங்கள் வடக்கு கிழக்கில் பல ஆயிரக்கணக்கான காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளது. அவற்றை மக்களிடம் ஒப்படைக்கவில்லை. நீண்ட காலமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளுடைய விடுதலை அதாவது ஆறு தொடக்கம் இருபது வருடங்களாக பலர் சிறைச்சாலையிலே இருக்கிறார்கள். அவர்களுடைய விடுதலை காணாமல் போனோரை கண்டுபிடிப்பது தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக இந்த தேர்தலிலே தமிழ் மக்களிடமிருந்து ஓர் ஆணையை பெற்றிருந்தோம்.

தமிழ் மக்களுடைய ஆணையின் பிரகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பானது அந்த கொள்கைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டிய பெரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஆகவே இனப்பிரச்சனைக்கான ஒரு நிரந்திர அரசியல் தீர்வைக் காண்பதற்கு எங்களுக்கு இருக்கக்கூடிய ஒரு இறுதிச் சந்தர்ப்பம் செப்ரம்பர் 30 திகதி ஐ.நாவின் அறிக்கை ஒன்று வெளிவர இருக்கிறது.

அந்த அறிக்கையானது நாங்கள் எதிர்பார்க்கின்ற சர்வதேச விசாரணையோடு உள்ளடக்கிய அறிக்கையாக வெளிவருமா இல்லையா? அல்லது அப்படி ஒரு சர்வதேச விசாரணையோடு வெளிவருவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அதற்கான காத்திரமான வேலைகளை முன்னெடுக்க வேண்டும். ஆனால் எங்களில் ஒரு சிலர் கொள்கையோடு செயல்படுகிறார்களா என்ற பல்வேறுபட்ட விமர்சனங்கள் இன்றைக்கு எம்மை நோக்கி வைக்கப்படுகின்றது.

நீண்டகாலமாக நாங்கள் ஒரு போருக்குள் வாழ்ந்தவர்கள் என்ற வகையில் எங்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்த தேசிய அரசாங்கம் எவ்வளவு தூரம் ஒத்துழைக்கப் போகின்றது என்பதனை எதிர்வரும் காலங்களில் அறியக்கூடியதாக இருக்கும். தமழ் மக்களின் ஆதரவைப்பெற்ற நாங்கள் ஒரு கொள்கையோடு இருக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது.

ஆனால் கடந்த ஒரு மாத காலமாக எங்களுடைய தலமையில் இருக்கக்கூடிய சிலரது போக்குகள் தமழ் மக்கள் மத்தியிலே நம்பிக்கையீனங்களையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்ற ஒரு போக்கு காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக தேர்தல் காலத்திலே எங்களுடைய இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு சர்வதேச விசாரணை தேவையென்று மேடைகளிலே நாங்கள் பேசிவிட்டு இன்று சரவதேச விசாரணை முடிவடைந்து விட்டது.

இன்னுமொரு சர்வதேச விசாரணை தேவையா அல்லது சர்வதேச கண்காணிப்போடு ஒரு உள்ளக விசாரணைதான் வேண்டுமென்று மக்களை குளப்புகின்ற அளவிற்கு இன்றைக்கு ஒரு சிலருடைய இந்த நடவடிக்கைகள் இந்த போக்குகள் அமைந்திருக்கிறது. நாங்கள் அளப்பரிய தியாகங்களை செய்திருக்கிறோம் பல ஆயிரக்கணக்கான உயிர் உடமைகள் சொத்துக்களை இழந்திருக்கிறோம். அழிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக நாம் இருக்கிறோம்.

ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ்தேசிய கூட்டமைப்பு சரியான பாதையிலே செல்கிறதா கொள்கையிலிருந்து விலகிச்செல்பவர்கள் யார் என்று கேள்வி கேட்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் இருக்கிறது.
தமிழ் மக்களுக்கு ஒரு நாயமான கௌரமான ஒரு அரசியல் தீர்வு கிடைக்கிற வரைக்கும் இந்த பயணத்தில எந்த முட்டுக்கட்டைகள் எந்தத் தடைகள் ஏற்பட்டாலும் நாங்கள் அவைகளை தாண்டி நாங்கள் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வையும் நிரந்தரமான ஒரு சமாதானத்தையும் எட்டுவதற்காக தொடர்ச்சியாக இந்தப்பயணம் அமையும்.

போர்காலத்திலும் அதற்கு பிற்பட்ட காலத்திலும் சரி இந்த அலுவலகம் இருபத்தைந்து வருடங்களாக இயங்கிக்கொண்டிக்கிறது. நாங்கள் மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றோம். இந்த இருபத்தைந்து வருட காலத்திலே ஜனநாயக ரீதியாக நடந்த பல்வேறுபட்ட தேர்தல்கள் உள்ளுராட்சி மன்றம் மாகாணசபை பாராளுமன்ற தேர்தல்கள் உட்பட இந்த மண்ணிலே தமிழ்மக்களுக்கு எதிராக நடந்த நில அபகரிப்பு அரசியல் கைதிகளின் விடுதலை காணாமல்போணோரின் விடயங்கள் உட்பட பல்வேறுபட்ட விடயங்களுக்காக ஜனநாய ரீதியாக நாங்கள் பல எங்களுடைய போராட்டங்களை நாங்கள் நடத்தியிருக்கிறோம்.

அந்தவகையில் வன்னி மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆணை மற்றும் பொறுப்புகளிலிருந்து ஒரு துளியளவும் நாங்கள் விலகமாட்டோம் கடந்த கால எங்களுடைய செயல்பாடுகளின் ஊடாக நாங்கள் நிரூபித்திருக்கின்றோம். தவறான பாதையில் செல்கின்ற கூட்டமைப்புக்குள் இருக்கின்ற கட்சிகள் சம்பந்தமாக ஜனநாயக ரீதியாக வளந்த ஒரு அரசியல் கட்சி என்ற வகையிலே நாங்கள் சொல்ல வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது.

வெறுமனமே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவே மாகாணசபை உறுப்பினர்களாகவே இருப்பது மட்டுமல்ல எங்கெல்லாம் அநீதிகள் நடக்கப்படுதோ எங்கெல்லாம் தவறுகள் நடக்கப்படுதோ அதுக்கெதிராக குரல் கொடுக்கக் கூடிய பலத்தையும் சக்தியையும் நீங்கள் எங்களுக்கு வழங்கியிருக்கிறீர்கள். ஆகவே எங்களைப்பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஒரு பலமிக்க ஒரு மக்கள் இயக்கமாக ஒரு சக்தியாக மாற்ற வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது என தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைத்த வன்னி மாவட்ட செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பிரமுகர்கள் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுதல்களும் தெரிவிக்கும் கூட்டம் இன்று (12.09.2015) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை கட்சியின் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் ஆயிரம்பேர் வரையில் திரண்டிருந்தனர்.