கிழக்கு மாகாண முதலமைச்சர் பச்சோந்தி ; தமிழர்கள் மீது ஆதங்கத்தில் பிள்ளையான்

 

 

கிழக்கு மாகாண முதலமைச்சர் பச்சோந்தி ; தமிழர்கள் மீது ஆதங்கத்தில் பிள்ளையான்

தமிழ் ஈழத்தை பெற்றுத்தருவோம் என கூறிய தமிழர்களை பயன்படுத்தி வாக்கெடுப்புகளை நடத்திய கிழக்கு மாகாண முதலமைச்சர், கொழும்புக்கு நல்லவராக தன்னை காட்டிக்கொண்டுள்ளார் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில்நேற்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “20வது திருத்த சட்டம் என்ன என்பதை அறிந்துகொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு குழியில் விழும் செயலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிழக்கு மாகாண சபையில் நடத்தியுள்ளது.

வடமாகாண சபை இந்த சட்ட மூலத்தை நிராகரித்துள்ள நிலையில், கிழக்கு மாகாண சபையில் தமிழ் உறுப்பினர்கள் இதனை எதிர்ப்பார்கள் என நம்பியிருந்தேன்.

எனினும், இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக இருந்து அனைவரையும் ஏமாற்றியுள்ளனர். மாகாண சபையின் நிலையியற் கட்டளைக்கு மாற்றமாக முதலமைச்சரின் நடவடிக்கை அமைந்துள்ளது.

அத்துடன், இந்த சட்டமூலத்தை வெற்றியடையச் செய்வதற்காக பிழையான ஒரு முறையை பின்பற்றி செயற்பட்டுள்ளார்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் கொழும்பில் இருந்து வந்த ஆலோசனைகளை பின் கதவு வழியாக கொண்டு வந்து, தமிழ் ஈழத்தை பெற்றுதருவதாக கூறிய தமிழர்களை பயன்படுத்தி வாக்கெடுப்புகளை நடத்தியுள்ளார். அத்துடன், தன்னை கொழும்புக்கு நல்லவராகவும் காட்டிக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், தமிழர்களுக்கு பலமானதொரு அதிகார கட்டமைப்பு தொடர்பில் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இருக்கின்ற அதிகாரத்தை விட்டுக்கொடுக்கும் ஒரு துரோக செயலை மேற்கொள்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.