ஒரு வாரத்துக்கு தினமும் காலை 10 மணிக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள தேசிய கொடிக்கு ‘சல்யூட்’ அடித்து, தேசிய கீதம் பாட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.

கடந்த சுதந்திர தினத்தன்று வேலூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் கென்னடி தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதுதொடர்பாக சுரேஷ்பாபு என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தேசிய கொடியை அவமதித்ததாக கென்னடி மீது ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கென்னடி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தேசிய கொடி ஏற்றிவைக்கப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மருத்துவ பணிகள் இயக்குனரக அலுவலகத்தில் இருந்து அவசர அழைப்பு வந்ததால், அதை தவிர்க்க முடியாமல் செல்போனில் பேசியதாகவும், தேசிய கொடியையோ அல்லது தேசிய கீதத்தையோ அவமதிக்கும் எண்ணத்தில் அதுபோன்று செயல்படவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி பி.என்.பிரகாஷ், மனுதாரர் டாக்டர் கென்னடிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் ஒரு வாரத்துக்கு தினமும் காலை 10 மணிக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள தேசிய கொடிக்கு ‘சல்யூட்’ அடித்து, தேசிய கீதம் பாட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.

இதனை ஆம்பூர் போலீசார் தினமும் கண்காணித்து அறிக்கையை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.