அர்ஜுன் அலோஸியஸ் பிணைமுறி தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸ் பிணைமுறி தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

பிந்திய செய்தி

வங்கி விவரங்களை அலோஸியஸ் வழங்கவில்லை

பிணைமுறி தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுடன் இணைந்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர், பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸின் வீட்டுக்கு, நேற்று விஜயம் மேற்கொண்டனர். ஆணைக்குழுவில் வங்கி விவரங்களை வழங்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அவற்றை வழங்காத அவர், நாட்டை விட்டுச் சென்றுள்ளதாகக் கிடைத்த, உறுதிப்படுத்தாத தகவலைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் டப்புல டி லிவேரா, ஆணைக்குழுவுக்கு அறிவித்தார்.

கருத்துத் தெரிவித்த, அலோஸியஸின் சட்டத்தரணியான ஜனாதிபதி சட்டத்தரணி அநுஜ பிரேமரத்ன, சி.ஐ.டியினர் தனது சேவை பெறுநரின் வீட்டுக்குச் சென்றதை உறுதிப்படுத்தியதோடு, சம்பந்தப்பட்ட வங்கி விவரங்களோடு ஆணைக்குழுவுக்கு வருமாறு கட்டாயப்படுத்தியதாகக் குறிப்பிட்டார். இரண்டு வங்கிகளிடமிருந்து இந்த விவரங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதன் காரணமாக, அவருக்கு மேலதிக நேரம் தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

இதன்போதே, அவர் வெளிநாட்டுக்குச் சென்றவிட்டார் என்று பரவிய தகவல் தொடர்பாக, டி லிவேரா தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அநுஜ பிரேமரத்ன, தன்னுடைய சேவை பெறுநர், நாட்டை விட்டு வெளியேறவில்லை எனவும், அவரது வீட்டிலேயே இருக்கிறார் எனவும், சி.ஐ.டியினர் விஜயம் செய்தமை தொடர்பாக, குறுஞ்செய்தி மூலம் தனக்கு அறிவித்தார் என்றும் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, வங்கி விவரங்களை அவர் எப்போது வழங்குவாரென அறிய விரும்புவதாக, டி லிவேரா தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, தனது சேவை பெறுநருடன் தொடர்கொண்ட அநுஜ பிரேமரத்ன, ஒரு வங்கியின் விவரங்கள் இன்று (13) வழங்கப்படுமெனவும், ஏனைய விவரங்கள் நாளை (14) வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.