பிரமிக்கும் ஆஸி வீரர் டிராவிஸ் ஹெட்

‘ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்’ என்று அந்த அணியின் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் நம்பிக்கை தெரிவித்தார். மேக்ஸ்வெல்லோடு இணைந்து பவுலிங்கிலும் அசத்த விரும்புவதாகக் கூறிய ஹெட், கோலியின் திறன்களை சிலாகித்தார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள், 3 டி-20 போட்டிகளில் விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் முதல் ஒருநாள் போட்டியை முன்னிட்டு, ஆஸ்திரேலிய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். நெட் பிராக்டீஸில் ஈடுபட்டிருந்த ஆஸி வீரர்களுக்கு, தமிழக வீரர் முருகன் அஷ்வின், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பவுலர் அலெக்சாண்டர் உள்ளிட்ட சென்னை வீரர்கள் பந்துவீசினர். பயிற்சி முடிந்ததும் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் டிராவிஸ் ஹெட் பேசினார்.

ஹெட்

 

 

 

 

 

 

 

 

ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய டிராவிஸ் ஹெட், ஆஸ்திரேலிய அணியில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தைப் பிடித்துக்கொண்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த ஹெட், சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி விளையாடிய 26  ஒருநாள் போட்டிகளில் 25-ல் பங்கேற்று விட்டார். ஆறு ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டு மழையால் கைவிடப்பட்ட தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மட்டும் அவர் இடம்பெறவில்லை. ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மிச்செல் ஸ்டார்க்  ஆகிய முன்னணி வீரர்களை விட அதிக போட்டிகளில் விளையாடிய டிராவிட்,  ஆரோன் ஃபின்ச், மேக்ஸ்வெல், மேத்யூ வேட் ஆகியோரை விடவும் அதிக ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த ஏழாவது மாதத்தில், தன் சொந்த மண்ணான அடிலெய்டில் சதம் அடித்த டிராவிட் ஹெட்டின் சராசரி 40-க்கும் மேல். அதில் ஒரு சதம், ஆறு அரை சதம் என பேட்டிங்கில் அவர் கிராப் புரொமோட் ஆகிக்கொண்டே இருக்கிறது. அதற்கு ஐ.பி.எல் தொடரும் ஒரு காரணம்.

ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருப்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தச் சூழ்நிலைக்குத் தயாராவது எளிதாக இருக்கும் என்றார் டிராவிஸ். தான் அதிக போட்டிகளில் விளையாடாவிடிலும், இங்குள்ள தட்பவெப்ப மாற்றங்களுக்குப் பழக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கோலியுடன் விளையாடிய அனுபவம் பற்றி கேட்டபோது “கோலி மிகச்சிறந்த வீரர். போட்டி நாளன்று மிகச்சிறப்பாக செயல்படுவார். எந்தவொரு சூழ்நிலைக்கும் அவர் சீக்கிரம் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளக் கூடியவர். அவரது ‘வொர்க் எதிக்’ அற்புதமானது” என கோலியுடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியில் யார் சிறந்த ஃபினிஷராக இருப்பார் என்ற கேள்விக்கு “வார்னர், ஸ்மித் இருவரும் மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கிறார்கள். ஸ்டோய்னிஸ் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த காலத்தில் ஃபால்க்னர் ஃபினிஷிங்கில் அசத்தியுள்ளார். அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். தனிப்பட்ட வீரர் யாரையும் அணி சார்ந்திருக்கத் தேவையில்லை” என்றார்.

மிகவும் முக்கியமான மிடில் ஓவர்களில் மேக்ஸ்வெல்லோடு இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டியைச் சிறந்த முறையில் முடிக்க விரும்பும் ஹெட், பேட்டிங்கில் 40-க்கு மேல் சராசரி வைத்திறார். அணிக்குத் தேவைப்படும்போது தனது சுழற்பந்துவீச்சால் பவுலிங்கிலும் அசத்துகிறார். பேட்டிங் மட்டுமன்றி பவுலிங்கிலும் மேக்ஸ்வெல்லோடு கூட்டணி அமைத்து அணிக்கு உதவ விரும்புவதாக தெரிவித்தார். இதுவரை பந்துவீசிய 20 போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் ஹெட்.