கால்பந்து தர வரிசையில் சரிந்த இந்திய அணி

ஃபிஃபா கால்பந்து தர வரிசைப் பட்டியலில், இந்திய அணி 10 இடங்கள் பின்தங்கி 107-வது இடத்துக்குச் சென்றது.

கால்பந்து

கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் இந்திய அணி சர்வதேச அளவில் கலக்கினாலும், கால்பந்தில் மட்டும் இன்னும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால், கால்பந்தில் இந்தியாவை முன்னேறச்செய்ய, விளையாட்டுத் துறையும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக, இளம் வீரர்களை அடையாளம் காண, ஐ.எஸ்.எல் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும், உள்கட்டமைப்பு வசதிகளும் சர்வதேச அளவில் அமைக்கப்பட்டுவருகின்றன.

இதனிடையே, ஃபிஃபாவின் சர்வதேச கால்பந்து தர வரிசைப் பட்டியல் சமீபத்தில் வெளியானது. கடந்த மாதம் வரை 97- வது இடத்தில் இருந்த இந்திய அணி, தற்போது 10 இடங்கள் பின்தங்கி, 107-வது இடத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே முதல் 100 இடங்களில் இருந்துவந்த இந்திய அணி, பல காலங்களுக்குப் பின்னர் 100-வது இடத்தைத் தாண்டி இடம்பெற்றுள்ளது. தற்போதைய ஆசிய கால்பந்து தர வரிசைப் பட்டியலில் இந்தியக் கால்பந்து அணி 13-ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.