இலண்டன் சுரங்க ரயில் நிலையத்தில் நிகழ்ந்தது பயங்கரவாதத் தாக்குதலே என்று ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் படுகாயங்களுக்குட்பட்ட இருபத்து இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.20 மணியளவில், இலண்டனின் தென்மேற்குப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பார்சன்ஸ் க்றீனின் சுரங்க ரயில் நிலையத்திலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

மாவட்டங்களுக்கு இடையிலான சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ரயில் ஒன்றின் கடைசிப் பெட்டியிலேயே குண்டு என்று சந்தேகிக்கப்படும் வெடிபொருள் வெடித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற ஒரு சில நிமிடங்களில் பொலிஸார், இராணுவத்தினர், அம்பியூலன்ஸ் மற்றும் குண்டு அகற்றும் பிரிவினர் உட்படப் பலரும் அங்கு குவிந்தனர்.

பார்சன்ஸ் க்றீன் ரயில் நிலையத்தைச் சுற்றிலும் இருந்த மக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதுடன், அந்த ரயில் நிலையம் ஊடான ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இவ்வெடிபொருள் வெடித்ததும் ஒரு சில வினாடிகளுக்கு அந்தப் பெட்டியில் தீச்சுவாலைகள் எழுந்ததாக பாதிக்கப்பட்டவர்களும் சம்பவத்தைக் கண்டவர்களும் கூறினர்.

இச்சுவாலைகளால் பலரும் முகங்களில் எரிகாயங்களுக்கு உட்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதும் அங்கிருந்து உடனடியாக வெளியேற ஒரே நேரத்தில் பலநூற்றுக்கணக்கானவர்கள் முயன்றனர். இந்த நெரிசலிலும் சிலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இத்தாக்குதலை இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.