மட்டக்களப்பு அரசார்பற்ற நிறுவனங்களை முடக்க மாவட்ட செயலகம் முயற்சி

மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் சுயாதீன செயற்பாடுகளுக்கு மட்டு. மாவட்ட செயலகம் தடை விதித்துள்ளதாக இணையத்தின்தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பல்வேறுபட்ட நெருக்கடியான காலத்திலும் யுத்த காலத்திலும் மனிதவுரிமை செயற்பாடுகள் மற்றும் மனிதாபிமான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில்  முன்நின்று செயற்பட்ட உள்ளூர் அரசசார்பற்ற நிறுவனங்களை ஒருங்கிணைத்து செயற்படும்  இணையம் அமைப்பை முடக்கும் முயற்சியில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முழுமூச்சாக செயற்பட்டு வருகின்றது.

இது அரசசார்பற்ற நிறுவனங்களின் சுயாதீன செயற்பாட்டிற்கு எதிரானது முரனானதுமாகும்.

இது குறித்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் பின்வருமாரு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின்  2016/1 சுற்று நிறுபத்திற்கு அமைய  1/06/2017  திகதி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரின் ஆலோசனையில் உருவாக்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்டச் சம்மேளனத்தின் மூலமே மாவட்ட அரசார்பற்ற நிறுவனங்களை ஒருங்கிணைப்புச் செய்ய முடியும் என்பதை இத்தால் அறியத்தருகின்றேன்.

ஆகவே உங்கள் நிறுவனத்தினால்   அரசார்பற்ற நிறுவனங்களை ஒருங்கிணைப்புச் செய்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்பதை அறியத்தருகின்றேன்.
இவ் விடயம் தொடர்பாக எதிர்காலத்தில் கவனத்தில் கொண்டு செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் ஊடாக  மாவவட்ட செயலகம் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் சுயாதீன செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி இணையத்தின் செயற்பாடுகளுக்கு தடையை ஏற்படுத்த முனைவதாக இணையத்தின் தலைவர் சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற ஒன்றியங்களின் நிறுவனமான ‘இணையம்’ காரியாலயத்திற்கு அண்மையில்  தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசனை அழைத்தது தவறு என அரசாங்க அதிபரினால் உருவாக்கப்பட்ட மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர் சில்வஸ்டார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோகணேசன் அவர்கள் அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த போது எமது அழைப்பை ஏற்று மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான எமது இணையம் காரியாலயத்திற்கு வந்து அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடி நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து கலந்துரையாடி இருந்தார்.

இது குறித்து அரசினால் அமைக்கப்பட்ட மாவட்ட கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த அதன் தலைவர் சில்வஸ்டார் அவர்கள் அது குறித்து மாவட்ட செயலகம் ஊடாக மேற்குறித்து கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இந்த கடிதத்தின் ஊடாக  மாவட்ட  செயலகம் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் சுயாதீன செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி இணையத்தின் செயற்பாடுகளுக்கு தடையை ஏற்படுத்த முனைவதாக அமைந்துள்ளது.

இது அமைச்சர் மனோகணேசன் அவர்களின் சிந்தனைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் எதிரானதாக உள்ளது .

தன்னால் உருவாக்கப்பட்ட மாவட்ட கவுன்சில்கள் அரச நிறுவனங்களை ஒருபோதும் கட்டுப்படுத்தாது அவ்வாறு யாரும் கட்டுப்படுத்துவதாக உணர்ந்தால் அதில் இருந்து அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளியேறலாம் என தெரிவித்திருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அமைச்சர் மனோகணேசனின் கருத்துக்கு மாறாக செயற்பட்டுள்ளது.

ஒரு அமைச்சினால் நல்லிணக்க செயற்பாடுகளை உருவாக்க தயாரிக்கப்பட்ட சுற்றுநிருபங்களை  நல்லிணக்கத்தை  இல்லாது செய்வதற்கும் அதிகாரத்தின் ஊடாக நிறுவனங்களை கட்டுப்படுத்தி மாவட்ட செயலகத்தின் நிகழ்ச்சி நிரல்களை செயற்படுத்த பயன்படுத்தப்படுவதுமானது
தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் நோக்கங்களையும் குறிக்கோல்களையும் இல்லாது செய்துள்ளது . இது குறித்து இணையத்தின் நிர்வாகம் கூடி அமைச்சிற்கு கடிதம் அனுப்ப உள்ளதாக  அவர் மேலும்  தெரிவித்தார்.