தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது சிரம் தாழ்த்திய வீரவணக்கங்கள்.

 

லெப். கேணல் – இரும்பொறை மாஸ்டர் – கடற்புலிகளின் துணைத் தளபதியினதும், மற்றும் – 10 மாவீரர்களினதும் 10ம் ஆண்டு வீரவணக்கங்கள்

16.09.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் இரு டோறா பீரங்கிக் கடற் கலங்களை மூழ்கடித்து மேலும் சில கடற்கலங்களை தேசமாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்ரர், லெப்.கேணல் குமுதன் உட்பட்ட
கடற் கரும்புலிகள் லெப்.கேணல் அனோசன், மேஜர் அருணா, மேஜர் நித்தியா, மேஜர் காந்தி மற்றும் – 10 மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் கப்பற் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வழிமறித்து கடற்புலிகளின் துணைத்தளபதி லெப்.கேணல் இரும்பொறை மாஸ்டர் தலைமையிலான கடற் புலிகளும், கடற் கரும்புலிகளும் சிறிலங்கா கடற் படையினருக்கு பலத்த அழிவுகளை ஏற்படுத்தினர்.

15 ற்கும் அதிகமான டோறா பீரங்கிப்படகுகளுடன் சுமார் எட்டு மணிநேரம் கடுமையாக சமரிட்டு அவற்றில் இரண்டை மூழ்கடித்து மேலும் இரண்டை கடுமையாகச் சேதப்படுத்தினர்.இக்கப்பற் தொடரணியில் 1,200 படையினருடன் சென்று கொண்டிருந்த பிரைட் ஒப் சவுத் கப்பலை தகர்த்து மூழ்கடிக்கும் வாய்ப்பிருந்தது. எனினும் படையினருடன் மக்களும் அதில் ஏற்றிச்செல்லப்பட்டிருந்தார்கள் என கிடைக்கப்பட்ட தவறான தகவலால் தாக்குதல் நடவடிக்கை தாமதமானதன் காரணத்தால் அக்கப்பல் தப்பிச்சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.