ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி பதவியிழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகள் அந்நாட்டு அரசியலில் கால் பதித்துள்ளார்.

நவாஸ் ஷெரீப் பதவியிழந்ததையடுத்து அவரது தொகுதியில் இடைத் தேர்தல் நாளை மறுதினம் (17) நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலில், நவாஸ் ஷெரீபின் மனைவி குல்ஸும் நவாஸ் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

என்றபோதும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குல்ஸும், சிகிச்சைகளுக்காக ஐக்கிய இராச்சியத்தில் தங்கியிருப்பதால், அவர் சார்பில் அவரது மகள் மர்யம் நவாஸ் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் இறங்கியுள்ளார்.

தனது தாய்க்கு ஆதரவாகவும், தந்தையின் பதவி நீக்கத்துக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வரும் மர்யம் நவாஸ், பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி மலர்வதற்கான ஆரம்பப் புள்ளியே தனது தந்தையின் பதவி நீக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தாயின் சார்பில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் மர்யம், முழு நேர அரசியலில் இறங்குவதற்கு அருமையான தருணம் இது என்று நவாஸ் ஷெரீபின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.