தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜீன் போல் டுமினி டெஸ்ட் போட்டிகள் மற்றும் முதல்தரப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் மட்டுமே இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார். அதன்பின் எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினாலும் ஒருநாள் மற்றும் இ-20 போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

33 வயதாகும் டுமினி இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் 2,103 ஓட்டங்களைப் பெற்றிருக்கும் அவர், பந்துவீச்சில் 42 விக்கட்களையும் சாய்த்திருக்கிறார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியொன்றில் 2008ஆம் ஆண்டு அறிமுகமான டுமினி, அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் ஐம்பது ஓட்டங்களைப் பெற்றதுடன், அப்போட்டியின் வெற்றிக்கு முக்கிய பங்கும் வகித்திருந்தார்.