20 ஆண்டு கால விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டது காஸ்ஸினி

இருபதாண்டு காலம், 7.9 பில்லியன் கி.மீ தூரம், 4,53,000 புகைப்படங்கள் எடுத்துவிட்டு, நேற்றோடு (செப்டம்பர் 15, 2017) தன் பயணத்தை முடித்துக்கொண்டது, ‘காஸ்ஸினி’ விண்கலம் (Cassini).

காஸ்ஸினி

சனி (Saturn) கோள் பற்றித் தகவல்கள் அறிந்திட, 1997ல் நாசா, ஐரோப்பிய விண்வெளி மையம் மற்றும் இத்தாலிய விண்வெளி மையம் ஆகியவை இணைந்து, ஆய்வுரீதியாக அனுப்பப்பட்டதுதான் காஸ்ஸினி விண்கலம். சனியின் துணைக் கோள்கள் மற்றும் நிலவுகள் குறித்தும் மூடிக்கிடந்த ஒரு பக்கத்து விண்வெளிகுறித்தும் வெளிக்கொணரச் செய்தது காஸ்ஸினி.

காஸ்ஸினி, இதுவரை சேகரித்த தகவல்கள்மூலம் 4,000 பக்கங்கள்கொண்ட நேர்த்தியான ஆய்வறிக்கைகள், விஞ்ஞானிகளால் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், சனியின் 62 நிலவுகளில் ஒன்றான என்சல்டஸ் (Enceladus) குறித்து முக்கிய படங்களைத் தந்துள்ளது. டைட்டன்(Titan) மீதும் கவனம்செலுத்த வழிவகுத்தது. அந்தக் கோளின் நிலவமைப்பு (திரவக்கடல் மற்றும் தட்ப வெப்பம்) குறித்தும் தரவுகள் தந்தது.

வியாழன் (Jupiter) மீதான நாசாவின் அடுத்த ஆய்வுத் திட்டத்துக்கு, காஸ்ஸினி முன்மாதிரியாகும். இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், காஸ்ஸினி விண்கலம் தன் பணியை விரைவில் நிறைவுசெய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ‘இறுதிக்கட்டம்’ என்று சொல்லப்பட்ட கடைசி சமிக்ஞையை அனுப்பியதோடு, இன்று தன் பணியை நிறைவுசெய்தது காஸ்ஸினி.