‘ நடேசன்,புலித்தேவனை சிங்கள ராணுவம் கொண்டதற்குரிய புதிய ஆதாரம் ஆஸ்திரேலியா வெளியிட்டது

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது விடுதலை புலிகள் அரசியல் பிரிவு தலைவர் நடேசன்,தளபதி புலித்தேவன், கேனல் ரமேஷ் உள்ளிட்டோர் சிங்கள ராணுவத்திடம் சரண் அடைந்தனர்.அவர்கள் அனைவரையும் சிங்கள படையினர் சித்ரவதை செய்து பின்னர் சுட்டுக்கொன்றனர். இது தொடர்பாக புதிய ஆதாரங்களை ஆஸ்திரேலியாவில் உள்ள அரசு சாரா நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது அங்கிருந்த தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவரும், ஆசிரியர் ஒருவரும் இதுதொடர்பான ஆதாரங்களை தங்களுக்கு வழங்கி இருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த வீரர் கூறும்போது, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் சரண் அடைய விரும்புவதாக சிங்கள அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினார்கள். அதை உறுதி செய்யும் வகையில் சிங்கள பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து நடேசன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பலர் வெள்ளைக்கொடிகளுடன் சிங்கள படையினரிடம் சரண் அடைந்தனர். அவர்கள் சரண்அடைந்த சிலமணித்துளிகளில் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.

அதேபோல ஆசிரியர் கூறும்போது, நான் சிங்கள படைகளால் கைது செய்யப்பட்டேன். பின்னர் என்னை ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அப்போது புலித்தேவன், ரமேஷ், நடேசன் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டு பிணமாக கிடந்தனர்.

அதை என் கண்ணால் பார்த்தேன் என்று கூறியுள்ளார். இந்த தகவல்களுடன் இலங்கையில் நடந்த பல்வேறு போர் குற்றங்கள் தொடர்பாகவும் அந்த நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது.