தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மலையகத்துக்கு தீண்டத்தகாதவர்கள் அல்ல. எமக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அது மீண்டும் கட்டியெழுப்பப் படுகின்றதென்றால் அதனை நாம் வரவேற்க வேண்டும் என பிரதியமைச்சர் வே. இராதாகிருஷ்ணன்

141

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மலையகத்துக்கு தீண்டத்தகாதவர்கள் அல்ல. எமக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அது மீண்டும் கட்டியெழுப்பப் படுகின்றதென்றால் அதனை நாம் வரவேற்க வேண்டும் என பிரதியமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

sri_koslanda_013

கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதிக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எமது நாட்டில் சுனாமி ஏற்பட்ட பொழுது எந்த உணர்வுடன் மலையக மக்கள் வடக்குக்கும் ஏனைய பகுதிகளுக்கும் சென்று மனிதாபிமான உதவிகளை செய்தார்களோ அதே மனிதாபிமான ரீதியில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதிக்கு விஜயம் செய்தார்கள்.

இதில் எந்தவிதமான அரசியல் நோக்கமும் அவர்களிடம் இருக்கவில்லை என்பதை என்னால் தெளிவாக கூற முடியும்.

தமிழத் தேசிய கூட்டமைப்பு கொஸ்லாந்த மீரியபெத்தைக்கு விஜயம் செய்தபோது நானும் அவர்களுடன் கலந்து கொண்டேன். அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

அவர்களுக்கு அரசியல் ரீதியான அல்லது இந்த விஜயத்தில் வேறு எண்ணங்கள் இருந்தால் என்னையோ அல்லது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனையோ அழைக்காமல் சென்றிருக்கலாம்.

இதேவேளை, இவ்விஜயத்தின்போது எந்தவிதமான அரசியலையும் அவர்கள் பேசவில்லை.

எமது மறைந்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் வடக்குக்கு தலைமைதாங்கி இருக்கின்றார்.

அவர் உயிருடன் இருக்கும் பொழுது அந்த மக்களுக்காக குறல் எழுப்பி இருக்கின்றார். எனவே அவ்வாறான ஒரு நெருங்கிய உறவு அவர்களுடன் எமக்கு இருந்தது.

எமது மலையக மக்கள் முன்னணியின் மறைந்த தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரன் அமைச்சராக இருந்து கொண்டும் வட மாகாண மக்களுடன் நல்ல ஒரு உறவை பேணிவந்தார்.

எனவே இனியாவது நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும். இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு அவர்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு சென்றுள்ளதோ, அதேப்போல நாமும் எமது பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் இந்த விஜயத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ள பொழுது மற்றவர்கள் அலட்டிக் கொள்வது ஏனென்று புரியவில்லை எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

SHARE