நீர் வள பிரதேசப் பாதுகாப்பு மற்றும் வன ரோபா தேசிய மர நடுகை தேசிய திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நாளை முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டி, தெல்தொட்ட கந்தேதன்ன குளத்திற்கருகே நடைபெறவுள்ளது.

இயற்கையை பாதுகாக்கும் எண்ணக்கருவின்படி ஜனாதிபதி அலுவலகமும் மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்தும் ‘புனருதய’ சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் முக்கிய நோக்கமான நீர்வள பிரதேசத்தை பாதுகாத்தல் மற்றும் வனப்பிரதேசத்தை அதிகரித்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘புனருதய’ சுற்றாடல் பாதுகாப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணிப் பயன்பாட்டுக்கொள்கை திட்டமிடல் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

வனரோபா தேசிய மர நடுகைத் திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் மண் பாதுகாப்பு திட்டத்திற்கான நிதி உதவிகளை வழங்குதல் என்பனவும் ஜனாதிபதி தலைமையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

மா, கொய்யா, மாதுளை மற்றும் எலுமிச்சை போன்ற 3000 கன்றுகள் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், மரக் கன்றுகளை நடும் நிகழ்வில் பங்குகொள்ளும் பாடசாலை மாணவர்களுக்கு சுற்றாடல் தகவல் தொகுதி ஒன்றும் தொப்பியொன்றும் வழங்கப்படவுள்ளது.

1984 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் மக்களிடம் கையளிக்கப்பட்ட கந்தேதன்ன நீர்த் தேக்கத்தை அண்மித்த நீர்வள பிரதேசம் மண்ணரிப்புக்குட்பட்டுள்ளதால் அதற்குத் தீர்வாக மண் பாதுகாப்பு முறைமையைப் பின்பற்றுதல் மற்றும் வனப் பாதுகாப்பை ஏற்படுத்துதல் போன்றனவும் இந்த நிகழ்வுடன் இணைந்ததாக மேற்கொள்ளப்படவுள்ளது. நீர்வள பிரதேசப் பாதுகாப்புத் தொடர்பாக தயாரிக்கப்பட்ட கை நூல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

சுற்றாடல் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் எண்ணக் கருவின்படி வனரோபா தேசிய மர நடுகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் 2018 ஆம் ஆண்டாகும்போது இலங்கையின் வனப் பிரதேசத்தை 32 வீதமாக அதிகரிப்பது இதன் நோக்கமாகும்.

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் வனரோபா தேசிய மர நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரச, அரசசார்பற்ற மற்றும் தனியார்த்துறையின் பங்களிப்புடன் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக அறிவூட்டும் கருத்தரங்குகளும் மாகாண, மாவட்ட, பிரதேச மற்றும் கிராம மட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இத் திட்டத்திற்கு பிரதேசத்திலுள்ள அனைத்து மக்கள் அமைப்புகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.