வவுனியாவில் பாடசாலை தொடர்பாக முகநூலில் அவதூறு ஆசிரியர் பணிபகிஸ்கரிப்பு..!!

வவுனியாவில் பாடசாலை தொடர்பாக முகநூலில் அவதூறு
ஆசிரியர் ஒரு மணி நேரம் பணிபகிஸ்கரிப்பு

வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலயம் தொடர்பாக முகநூலில் அவதூறு பரப்பப்பட்டதாக தெரிவித்து அப் பாடசாலையின் ஆசிரியர்கள் ஒரு மணி நேரம் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்கள் தெடர்பாகவும் பாடசாலை தொடர்பாகவும் முகநூல் ஒன்றில் அவதூறு பரப்பப்பட்டிருந்தது.

இதனால் சினமடைந்த பாடசாலையின் ஆசிரியர்கள் இன்று காலை பாடசாலைக்கு சமூகமளித்தபோதிலும் வகுப்பறைகளுக்கு செல்லாமல் பாடசாலை முன்றலில் குழுமி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பாடசாலை அதிபர் குறித்த முகநூல் தெடர்பாக நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பாடசாலைக்கு பொலிஸார் வருகை தந்ததுடன் பாடசாலை நலன்விரும்பிகள், பெற்றோர், இணைந்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந் நிலையில் குறித்த பாடசாலைக்கு வருகை தந்த வலயக்கல்விப்பணிப்பாளர் மு. ராதாகிருஸ்ணனும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடியதுடன் அண்மைக்காலமாக வவுனியா படசாலைகள் தொடர்பாக முகநூல்களில் அவதூறு பரப்பப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக தீர்க்கமான முடிவெடுக்கவேண்டும் எனவும் தெரிவித்ததுடன் பிரதி பொலிஸ் மா அதிபருடன் தான் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் பாடசாலைக்கு வருகை தந்த வவுனியா பொலிஸ் நிலையத்தின் உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி அதிபர், வலயக்கல்விப்பணிப்பாளர் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் பெற்றோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இதனையடுத்து பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டதுடன் குறித்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தாம் மீண்டும் பணி பகிஸ்காப்பில் ஈடுபடுவோம் என ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பாக பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
பாடசாலை அண்மைக்காலத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. கல்வி மட்டத்திலும் விளையாட்டுகளிலும் பிரகாசிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் இவ்வாறு அவதூரை பரப்பி வருகின்றனர்.
எனினும் இதற்கு உரிய நடவடிக்கையை பொலிஸார் எடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம் என தெரிவித்தார்.